Thursday, August 24, 2023

துவாரகை தலைவனின் ‘மிதக்கும் பாதைகள்’( கவிதைகள்)









 

துவாரகை தலைவனின் மிதக்கும் பாதைகள்( கவிதைகள்),  கவ்யா பதிப்பகம் ,2011

துவாரகை தலைவனின் மிதக்கும் பாதைகள் கவிதைத் தொகுப்பு - நூல் விமர்சனம்

                                                      - திரு.போப்பு [ பொறுப்பாசிரியர்- நற்றிணை]

          கவிஞர்களுக்கு உரித்தான இயற்கை மீதான காதல்,மனித சமூகம் அறிவியலின் பெயரால் நிகழ்த்தும் இயற்கை சுரண்டல்,மனித வாழ்க்கையின் மீதேறிய அர்த்தமில்லா படபடப்பு ,அதன் மீது தான் கொண்டிருக்கும் சுயதத்துவ உறுதியில் இருந்து மெலிதாக வெளிப்படும் எள்ளல் அல்லது புன்னகை இவை தான் வார்த்தைகளின் திரட்சியாக கவிதைகளாகின்றன துவாரகை தலைவனுக்கு.

         இத்தத்துவ தரிசனங்களையும் தனக்குள் புடம் போட்டுக் கொள்ளும் தெளிவற்ற உருட்டலாகவன்றி அவர் விரித்துச் செல்லும் காட்சிகள் வழியாக அவரது தத்துவம் நமக்கு வண்ணங்களாக வெளிப்படுகிறது.

         தனது கற்பனைக்குள் கருக் கொண்ட அசாதாரணமான காட்சிகளையும் இலகுவான வார்த்தைகளால் நிதர்சனமான காட்சிகளாக மாற்றுகிறார். ‘போர் பித்தன்’ என்ற தலைப்பிலான கவிதையின் இப்பகுதி அதற்குத் தேர்ந்த ஆதாரமாக இருக்கிறது.

                                     அந்தப் பெரும் போரில்

பிளந்து வெடித்தது உலகம்.

அதிகார வெறியின்  

தீ விரித்த

அகன்ற திரை

பூமியைப் போர்த்தியது.

பல நாட்டுக் கொடிகள்

அனைத்தும் தெரிந்த

நெருப்புத் திரையில்,

பேராசை மடிப்புகள்

ஒளிர்ந்து மறைந்தன...

 

                                 குளிர் காய மூட்டிய

                    தீ ஜூவாலையின்

                    முனையில் மிதக்கும் புகை நூல்

                    அப்போர் வீரனின்

                     கடைசி கால வாழ்க்கை…

 

                 தனக்குத் துணையாய் வந்த எலிக்குத்

                 தந்த இருப்பிடம்

                             ர்  இரும்புப் பெட்டி...

 

          நவீன மனிதனின்

         அறிவாற்றலும், மனப்பிறழ்ச்சியும்    

         இணைந்தே

         ஆயுதக் கிடங்குகளில்

         குவியும்...

            

                  அறிவின் உடல் பெருத்து உலவும்

                  மனித இனம்

                  பெருமையின் ரோமக் கால்கள் சிலிர்க்க

                  நீட்டுவது

                                போர் வெறியின் பற்கள்...

 

                              ஒரு சிறு ரொட்டித் துண்டைக்

                             கொறிக்க

                             வயிறு வரை நீட்டுகிறது எலி – தன்

                              கோரமான முன் பற்களை…

 

 

மூன்று பக்க நெடிய கவிதையில் அற்புதமான காட்சிப் படிமத்தில் நம் காலத்தின் மனித குல சரிவை, இழிவை வாசிக்கும் எவர் மனதிலும் நளினமாகவும் அழுத்தமாகவும் பதியச் செய்கிறார்.

      வார்த்தைகளில் ஜோடனை இல்லை.அழகில் ஏகாந்தம் இல்லை.சமூக எதார்த்தத்தை கண்முன் நிறுத்தி காலத்தின் பயங்கரத்தை வாசகர்கள் உணரும் படி கவிதைக் காட்சிகளை அடுக்கிக் கொண்டு போகிறார்.

      தனக்கான கவி நோக்கை,கவிதை மொழியை ஆத்மா நாம்,பிரமிள் போன்ற தமிழின் ஆதாரக்கவிஞர்களிடம் ஆதர்சமாகப் பெற்று தற்கால சமூக நிகழ்வுகளை முன்வைப்பது துவாரகை தலைவனின் கவிதைப்போக்காக இருக்கிறது.

      ஒரே தலைப்பில் பல்வேறு கவிதைகள்[பல் வேறு பரிமாணங்களில் இருந்து]சொல்லிப் பார்ப்பது இவரது தனித்துவமாக இருக்கிறது.

     மிதக்கும் பாதைகள் - நான்கு கவிதைகளாக எழுதியும் முடிவுறாத பயணமாக நீள்கிறது கவிஞனின் பார்வை.அந்த நெடும் பாதையில் ஏற்படும்          நில அதிர்வை கவிமனசு கொண்டு இவர் அளக்கும் அளவை நுட்பம் வேறுஎந்த மானிகளும் அளக்க முடியாதது.

        தகவல் யுகம் என்று பகட்டு காட்டுகிற இக்காலத்தில் ஜீவனற்ற பரிமாறல்களும்,பொய்மையும் பெருகிப்போனதை சொல்லாமல் சொல்கிறது அஞ்சல் தலைகள் கவிதை.குகைவாய்,பறக்கும் குதிரை,பட்டுப்போர்வை போன்ற யாரும் தொடாத கவிதைப் பக்கங்களை நம் முன் நிறுத்தும் இக்கவிதைத் தொகுப்பு வாசிப்பை வெறும் வாசிப்பாகவன்றி அனுபவமாகச் செரிப்போர் வாசிக்க வேண்டிய ஒன்று.

         பெரும் தாக்கத்தை நிகழ்த்த வல்லவர் கவிஞர் துவாரகை தலைவன்.அதற்கான சாத்தியங்களை நாம் இத்தொகுப்பில் காண முடிகிறது.காவ்யா பதிப்பகத்தாரின் தயாரிப்பு சற்றே மெருகேறியிருப்பதாகச் சொல்ல முடியும் இத்தொகுப்பின் வாயிலாக.

நன்றி : ‘நற்றிணை’ ஜூலை  - செப்டம்பர் 2012

 

 

 


No comments:

Post a Comment