இன்னும்
ஒரு சுற்று ஆட்டம்
-
துவாரகை தலைவன்
அந்த மூன்று நட்சத்திர ஓட்டலில் ஒரு பெரும் அறையில் சிறப்பான விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நண்பர்கள் பலர் கூடி விருந்து சாப்பிடுகிறார்கள் என்று சாதாரணமாக அதைச் சொல்லி விட முடியாது. அது ஒரு ஆச்சரியமான உணர்வு பூர்வமான விருந்து. பள்ளியில் ஒரு காலத்தில் ஒன்றாகப் பயின்று பல திசைகளில் சென்று விட்ட தோழர்கள் இன்று ஒன்றாகக் கூடி இருக்கிறார்கள். ஒரு சிலரைத் தவிர அனைவரும் அங்கு வந்திருந்தார்கள். அந்த ஓட்டல் இருந்த நகரத்தில் அவர்கள் பயின்ற பள்ளியும் இருந்தது. பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அனைவரும் பள்ளிக்குள் சென்று தாங்கள் அமர்ந்து பயின்ற வகுப்பறையை மீண்டும் பார்த்தார்கள். அன்று பள்ளி விடுமுறை ஆதலால் காவலாளியைத் தவிர அங்கு யாருமில்லை. நண்பர்கள் பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்கள். அவற்றில் நகைச்சுவை மிக்க நிகழ்வுகள் ஏராளம். சிலர் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையில் மீண்டும் அமர்ந்து பார்த்தார்கள். வகுப்பறை மட்டுமல்ல பள்ளிக்குள் நின்று கொண்டிருக்கும் மரங்கள் கூட பழைய இனிமையான நாள்களை மனக் கண்முன் கொண்டு வருகின்றன. நினைவுகள் அலை மோதுகின்றன. சிலர் அவற்றை பேசித் தீர்க்க முயன்று தோற்கிறார்கள். சிலர் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி நிற்கிறார்கள். ஒரு நிமிடம் காலம் பின்னோக்கிச் செல்வது போலிருந்தது. சிறார்கள் ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியை ஒருவர் அந்த வகுப்பறைக்குள் வருகிறார். மேசையைத் தட்டி “அமைதி” என்கிறார். வகுப்பு தொடங்க இருக்கிறது. இப்போது எல்லாம் மறைந்து விடுகின்றன.
“என் முன்னே நிற்கும் இவனை எத்தனை முறை அறைந்திருப்பேன் என்று நினைவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அவனிடம் சென்று மன்னிப்பும் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்று அவனை ஒருமையில் “வாடா” என்று அழைக்கத் தயங்குகிறேன். காலம் எல்லாவற்றையும் எப்படி மாற்றிப் போட்டிருக்கிறது. நம் பிரபாவைப் பாருங்கள். முழுக்க முழுக்க ஓர் அமெரிக்கனாகவே மாறி விட்டான். அவன் குழந்தைகள் தமிழ் பேசக் கஷ்டப்படுகிறார்கள். நாமெல்லாம் ஏன் பிரிந்தோம். நாம் அனைவரும் ஒரே இடத்தில் பணியாற்றி ஒன்றாக வாழ்ந்திருக்க முடியாதா? நம் அனைவரையும் வெவ்வேறு திசைகளுக்கு இழுத்து சென்றது எது?”
அந்த முப்பது இளைஞர்களில் இப்படி எண்ணிப் பார்க்காத ஒருவன் இல்லை என்று சொல்லலாம்.
விருந்தை ஏற்பாடு செய்தவன் பிரபா. அவனுடைய மிக நெருக்கமான நண்பர்கள் லோகேஷும், பிரசன்னாவும் அவனுக்கு உதவினார்கள். விருந்து நடைபெற்ற ஓட்டல் பிரபாவின் மாமா மதிவாணனுக்கு சொந்தமானது. வாழ்வில் மிக ஏழ்மை நிலையிலிருந்து கடுமையான தன் உழைப்பால் இன்று இந்த நிலைக்கு அவர் உயர்ந்துள்ளார். சென்ற வாரம் தான் ஓட்டலின் மற்ற இரு பெரும் பங்குதாரர்களிடமிருந்து முழுமையாக ஓட்டலின் பங்குகளைப் பெற்று தனிப்பெரும் முதலாளி ஆனார். விருந்து முடிந்த பின் நண்பர்கள் அனைவரும் விடைபெற்றார்கள். மதிவாணனின் தனி அறையில் நண்பர்கள் மூவரும் அமர்ந்திருந்தார்கள். ஒரு முக்கியமான கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு மதிவாணன் அறைக்குள் நுழைந்தார். அவர்கள் மூவரும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கும் நிலையைப் பார்த்தவுடன் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
“டேய் பயல்களா என்ன இது. நீங்கள் மூவரும் உயிர் நண்பர்கள். ஆனால் ஆண்டில் ஒருமுறை கூட நீங்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை என்று என் மனைவி சொல்லித்தான் எனக்குத் தெரியும். பிரபா அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினியர். லோகேஷ் கோவையில் தன் பெற்றோர் மருத்துவமனையில் வாரிசு டாக்டராகி விட்டான். பிரசன்னா நீ என்ஜினியரிங் படித்துவிட்டு உன் அப்பா பண்ணையில் மாடு மேய்க்கிறாயா?”
“படித்தவர்கள் பெரிய அளவில் விவசாயமும், பண்ணைத் தொழிலும் பார்க்கக் கூடாதா? அடுத்தவர்களிடம் கைகட்டி நின்று என்னால் சம்பளம் வாங்க முடியாது.”
“சரி அதை விடு. நீங்கள் மூவரும் எப்படிப்பட்ட நண்பர்கள் என்பதை நான் அறிவேன். மனிதன் ஒருவனுக்கு ஓர் உண்மையான நண்பன் கிடைப்பது அபூர்வம். உங்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு உயிர் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளக் கூட முடியாத வாழ்க்கையை தெரிவு செய்து கொண்டிருக்கிறீர்கள்.”
அவர்கள் மூவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. மதிவாணன் அடுத்த நாள் தன் வீட்டில் நடக்கும் மாலை விருந்துக்கு அவர்கள் மூவரையும் அழைத்திருந்தார். அப்போது அவர்கள் மூவருக்கும் தன் வீட்டில் இருக்கும் சுவாரசியம் மிகுந்த ஒன்றை காட்டுவதாகக் கூறி இருந்தார். மறு நாள் இரவு மதிவாணன் விருந்துக்குப் பின் தன் பிரத்தியேக தனி அறைக்கு அவர்கள் மூவரையையும் அழைத்துச் சென்றார். தன் மனைவி, மகன்ஆகியோர் கூட தன் அனுமதி இல்லாமல் அந்த அறைக்குள் நுழைவதில்லை என்று சொன்னார்.
“விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் நிஜ உலகில் இருப்பதை போன்ற நாம் விரும்பிய சூழல் ஒன்று நம் கண் முன்னே விரியும். நாம் இருப்பது இந்த அறைக்குள் தான் இருந்தாலும் அமேசான் காட்டுக்குள் பிரவேசிக்கலாம். நியூயார்க் நகர சாலையில் நடந்து செல்லலாம். இன்னும் நினைத்த சூழலை ஏற்படுத்திக் கொள்ளலாம். அங்கு நீங்கள் காரோட்டலாம், விமானியாக மாறி மலைகளிண் மேல் விமானத்தில் பறக்கலாம். எல்லாம் கம்யூட்டர் புரோகிராம்களால் உருவாக்கப்படுபவை. மேலும் அமர்ந்திருக்கும் இருக்கையின் அதிர்வுகள், அசைவுகள், ஓசைகள் இவற்றின் மூலமாக நாம் பார்க்கும் சூழலில் நாம் ஐக்கியம் ஆகிவிடுகிறோம். நான் வைத்திருக்கும் கருவி சற்று வித்தியாசமானது. இதில் உள்ள கம்பூட்டர் புரோகிராம்கள் மிகவும் சிறப்பானவை. இதில் நீங்கள் இருக்கும் சூழல் மட்டுமல்ல நீங்களும் வேண்டிய உருவம் பெற்று மாறிக் கொண்டிருப்பீர்கள். விளையாடிப் பாருங்கள் இதன் சிறப்பு உங்களுக்குப் புரியும். நான் சென்ற முறை அமெரிக்கா போன போது ஒரு நண்பர் தான் இதை வாங்கும் படி கூறினார். அங்கு வசிக்கும் பிரபா கூட இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தக் கருவி இன்னும் முழு வீச்சில் சந்தைக்கு வரவில்லை.”
லோக்கேஷ் இருக்கையில் அமர்ந்தான். அவன் கண்களில் பிரத்தியேக கண்ணாடியை மாட்டிக் கொண்டான். அவன் கண்டது ஒரு தீவு. அந்தத் தீவில் இருக்கும் விலங்குகள் எல்லாம் அவனை தங்கள் எஜமானரைப் போல் பார்க்கின்றன. அவைகளுக்குத் தேவையான உணவை எடுத்து வழி எங்கும் வீசிக்கொண்டே செல்கிறான். கொடிய மிருகங்கள் கூட அவனுடைய செல்லப் பிராணிகளாக அவன் அருகில் வந்து நிற்கின்றன. அவற்றின் உடலை அவன் அன்பாகத் தடவிக் கொடுக்கிறான். தீவைச் சுற்றி வருகிறான். ஒரு ஜீப் இருக்கிறது. அதையும் அவன் பயன்படுத்துகிறான். தீவைச் சுற்றி வந்து ஓய்ந்து போகிறான். கண்முன்னே நீலக்கடல் மெல்லிய அலைகளை வீசிய படி விரிந்து கிடக்கிறது. நீந்த எண்ணி கடலுக்குள் பாய்கிறான். அவன் விரும்புவது ஒரு சாதாரணக் குளியல் அல்ல. அவன் கடலை முடிந்த மட்டும் சுற்றி வர வேண்டும். ஆழத்திற்கு செல்ல வேண்டும். சுறா மீன்களுக்கிடையே நீந்தி சென்று வெளியே வர வேண்டும். திமிங்கலத்தின் அருகே சென்று ஒரு பசுவைத் தட்டிக் கொடுப்பதைப் போல் அதைத் தட்டிக் கொடுக்க வேண்டும். அவன் மனிதனாக மட்டும் இருக்கும் வரை இவை எல்லாம் சாத்திமாவது மிகவும் கடினம். அதனால் அவன் உடலெங்கும் செதில்கள் முளைக்கின்றன. அவன் கால் விரல்களுக்கிடையேயும் கை விரல்களுக்கிடையேயும் தோலோடு ஜவ்வு வளர்கிறது. அவன் மீன் மனிதனாகி விட்டான். இப்போது அவனால் நீண்ட நேரம் நீருக்கு அடியில் நீந்த முடிகிறது. காலையில் காட்டு விலங்குகளுக்கு உணவு தருவது அவற்றின் சிறு காயங்களுக்கு மருந்து பொடுவது ஆகியவற்றில் தொடங்குகிறது அவன் அன்றாடப்பணி. மாலையில் கடலுக்கு அடியில் சென்று மீன்களுடனும், ஆமைகளுடனும் அவன் பேசுகிறான். அவற்றோடு விளையாடுகிறான். இரவில் உறங்கும் போதும் நரிகள் ஊளை இடும் சத்தத்தில் கண் விழிக்கிறான். அவை என்ன சொல்ல முனைகின்றன என்று கவனிக்கிறான். இந்தத் தீவு அவன் தந்தையின் மருத்துவமனையையே அவனுக்கு நினைவு படுத்துகிறது. இந்தத் தீவில் அவன் சுற்றி வருவது போல, பல மாடிகள் உள்ள அந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவன் என்ற முறையில் லிப்டில் மேலும் கீழும் சென்று பணியாற்றுகிறான். மருத்துவமனையும் ஒரு தீவு தான். அதில் இருக்கும் உயிர்கள் போல நோயாளிகள் அங்கு காணப்படுகிறார்கள். அனைவரும் மருத்துவரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். அவர் தரும் சிகிச்சையும் அவர் அறிவுரை வார்த்தையும் அவர்களின் முக்கிய தேவைகளாக இருக்கின்றன. சுழன்று சுழன்று பணியாற்றும் மருத்துவர் அந்த மருத்துவமனையின் சொந்தக்காரராக இருந்தாலும் அவர் நீருக்குள் நீந்தி வரும் மீனாக மாறிவிடுகிறார்.
அதற்கு பிறகு அந்த வினோத கருவியின் சிறப்பை அறிந்து கொள்ளும் ஆவலோடு பிரபா இருக்கையில் அமர்ந்தான். பிரபா நுழைந்தது மரங்கள் குறைவாக இருக்கும் ஒரு வறண்ட பூமி. குன்றுகள் நிறைய இருக்கும் மலைப் பிரதேசம். மலையில் ஆவலோடு அவன் ஏறுகிறான். புவி ஈர்ப்பு விசை அவனைக் கீழே தள்ளப் பார்க்கிறது. இன்னும் உற்சாகமாக மேலே ஏற முயல்கிறான். கால்கள் ஒத்துழைக்க மறுக்கின்றன. வெகு சீக்கிரத்திலேயே அவன் கால்கள் மலை ஆட்டின் கால்களாக மாறுகின்றன. மரக்கிளைத் துண்டு போல உறுதியாக இருக்கும் அவற்றின் உதவியோடு பாறைகளுக்கிடையே தாவி ஓடுகிறான் பிரபா. அவன் ஓய்வெடுக்கும் மர நிழலில் மண்ணில் விழுந்து கிடக்கும் கனிகளில் ஒன்றை எடுத்து சுவைக்கிறான்.சோர்வு மறைந்து போகிறது. மீண்டும் மலையில் ஏறுகிறான்.
அவன் அமெரிக்காவில் பணி செய்யும் அலுவலகம் வானுயர்ந்த ஒரு கட்டடத்தில் கண்ணாடிச் சுவர்கள் கொண்ட அறையில் இயங்குகிறது. அங்கிருந்து பார்த்தால் நகரத்தின் அழகிய காட்சி தெரிகிறது. ஆனால் அவன் அலுவல் ஒரு வகையில் வறண்ட பூமி தான். கணினித் திரையில் அவன் உள்ளம் ஒரு மலையாட்டைப் போல் ஒடுகிறது. அவன் தனக்குக் கொடுக்கப்பட்ட வார அலுவல் இலக்கை சீக்கிரம் முடித்து விட்டால் நண்பர்களோடு வார இறுதியை மகிழ்ச்சியோடு கழிக்க இன்னும் ஒரு நாள் கூடுதலாகக் கிடைக்கும். ஒரு சிறு இலக்கை அடைந்தவுடன் அவன் மகிழ்ச்கி அடைகிறான். அலுவலக நண்பர்கள் வாழ்த்து சொல்கிறார்கள். இங்கு மலையில் ஏறும் ஆடு ஒரு பெரும் பாறை மீது போராடி ஏறிவிட்டது. அதன் மேல் பெருமிதத்தோடு சிறிது நேரம் நிற்கிறது. மலையாட்டின் கால்களாக விரல்கள் கீபோர்டில் ஓடுகின்றன. கணினிக்குள் பயணிக்கிறார்கள் அலுவலர்கள். சொர்க்க புரியாக இருக்கும் ஒரு நகரத்தில் ஓர் உயர்ந்த கட்டடம். அதில் நவீன வசதிகள் கொண்ட அறையில் ஒரு குட்டியான வறண்ட பூமியை பணி செய்யும் கணினி உருவாக்குகிறது. பணிச்சுமை தான் அந்த வறண்ட பூமி. அதில் மனித உடலும் மலையாட்டின் கால்களும் கொண்டு, தான் சுற்றி வருவதை உணர்கிறான் பிரபா.
பிரசன்னா விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் கண்ணாடியை அணிந்ததும் தான் வானத்தில் மிதப்பதை உணர்ந்தான். கைகளை அசைக்க அவை உடனே சிறகுகளாக மாறுகின்றன. வயல் வெளிகளை ஒட்டிய காட்டின் மேல் அவன் பறக்கிறான். அவன் காண்பதெல்லாம் பச்சை மரங்கள். அவன் தொடர்ந்து பறக்கிறான். அவன் அருகே சிறு பறவைகள் பறந்து வந்து ஏதோ சொல்ல முற்படுகின்றன. அதைக் அவன் கேட்க விரும்பவில்லை. அழகிய மலர்களையும் ரசிக்கவில்லை. அவன் எதையோ தேடிப் பறக்கிறான். அவன் விரும்பும் இடம் விளையாட்டு மைதானம் போன்ற வெட்ட வெளி. அதன் மேல் விழும் தன் நிழலை, பறந்து செல்லும் அவன் பார்க்க விரும்புகிறான். வாழ்வில் எந்தக் கஷ்டத்தையும் காணாமல் வளர்ந்தவன் பிரசன்னா. மிகப் பெரிய அளவில் விவசாயம் செய்பவர் அவன் தந்தை. சொந்தமாக பல சர்க்கரை ஆலைகளும் அவருக்கு உள்ளன. இவற்றை நிர்வகிப்பதில் தந்தைக்கு உதவியாக இருக்கிறான் பிரசன்னா. அவன் வேறு ஒருவருக்குக் கீழே பணியாற்றி சம்பளம் பெற்றதில்லை. அவனைப் பொறுத்த அளவில் அது கனவில் தான் நடக்கும். அந்த அனுபவம் ஒரு நிழல் என்றால் பறவையாக பறக்கும் அவன் அதை ‘நிஜமாக’க் காண விரும்புகிறான். அவன் பார்க்கும் இடமெல்லாம் பச்சையாக இருக்கின்றன.
அவன் வீட்டிலும் ஆலையிலும், சொல்லுவதற்கு முன்னரே பணியாட்கள் தேவையான வேலைகளை முடித்து விடுகிறார்கள். அவன் தன்னுடைய உண்மையான திறனை அறிந்து கொள்ள நினைக்கிறான். போராட்டம் நிறைந்த உலகத்தில் தான் எந்த அளவுக்கு தன் சொந்தத் திறனைப் பயன்படுத்தி வெற்றியடைய முடியும் என்பதை அறியும் ஆவல் அவனிடம் மேலோங்கி இருக்க வேண்டும். அதனால் அவன் வெட்ட வெளியை நாடி சிறிது நேரம் பறவையாக பறக்கிறான்.
அவர்கள் மூவரும் கற்பனை உலகில் நிஜத்தில் உலவுவது போல ஒரு சுற்று மிதந்து விட்டு அமர்ந்திருந்தார்கள். மூன்று பேரும் சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டபடியால் அன்று மகிழ்ச்சியாக இருக்க எங்காவது செல்ல வேண்டும். குறைந்த பட்சம் ஒரு திரைப்படமாவது பார்க்க வேண்டும். அதனால் தாங்கள் புறப்படுவதாகச் சொன்னார்கள்.
“கொஞ்சம் பொறுங்கள். இந்தக் கருவியின் சிறப்பை இன்னும் நீங்கள் காணவில்லை. நீங்கள் விரும்பிய உருவம் பெற்று கற்பனை உலகில் இருக்கும் போது உங்கள் உருவத்தை வேறு ஓர் உருவமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.”
மதிவாணன் இவ்வாறு கூறியதும். அவர்களும் ஆவலோடு அடுத்த சுற்று விளையாட்டுக்குத் தயாரானார்கள். அதில் பல வினேதங்கள் நிகழ்ந்தன. அவற்றில் பல அதிர்ச்சி நிறைந்தவைகளாக இருந்தன. லோக்கேஷ் மீன் உடலோடு மலை மேல் ஏறி பாறை மீது அமர்ந்தான். இதமான வெயிலில் அமர்ந்திருப்பது சுகம் என்றான். பிரபாவிற்கு சிறகுகள் முளைக்க, பறக்கும் மலை ஆடாக மாறுகிறான். கடல் வரை பறந்து போன பிரசன்னா கடலுக்குள் மீனைப் போல நீந்தினான். சிறகுகளை அசைத்து நீரைத் தள்ளி கடலின் ஆழத்திற்குப் போகிறான்.
பாட்டுப் பாடியபடி பாறை மீது இருந்த லோகேஷை கழுகுக் கூட்டம் சூழ்ந்து கொள்கிறது. கைகளால் அவற்றை விரட்டப் பார்க்கிறான். அவை எல்லாம் சேர்ந்து அவன் உடலைக் கொத்திக் கிழிக்கின்றன. அவனை எல்லா கழுகளும் சேர்ந்து விரல் நகங்களால் பற்றி தூக்கிச் செல்ல முயல்கின்றன. பிரபா சிறகுகள் கிடைத்த மகிழ்ச்சியில் காட்டை வட்ட மிட்டுப் பறக்கிறான். சிறிது நேரத்தில் அவன் சிறகுகள் ஓய்ந்து போகின்றன. தன் உடல் மிகவும் கனமானது போன்று உணர்கிறான். வானில் இருந்து கீழே வருகிறான். ஒரு முட்புதரின் மேல் விழுந்து மயக்கமடைகிறான். கடலின் தரையில் பல அதிசயங்களையும், அழகிய காட்சிகளையும் ரசித்துக் கொண்டிருக்கிறான் பிரசன்னா. திடீரென அவனுக்கு முதுகில் ஒரு பாறை விழுந்தது போல் இருக்கிறது. கடலுக்கு அடியில் இருக்கும் அளவுக்கு அதிகமான நீரின் அழுத்தத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாக ஆழ்கடல் மீன்கள் இயற்கையில் உருவாகி உள்ளன. அவை மகிழ்ச்சியாக நீந்தியபடி கடல் மண்ணில் புரண்டு எழுகின்றன. நீரின் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உடல் நடுங்கி திணறிக் கொண்டிருந்த அவனைப் பார்த்து சிறிய மீன்கள் சிரிப்பது போல இருந்தது.
அவர்கள் மூவரும் மதிவாணனிடம் விடை பெற்று செல்வதற்கு முன்னால் அந்தக் கருவியில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்க்களை ஓரளவு அவரிடம் சொல்லி விட்டுப் போனார்கள். அன்று இரவு அவருக்கு சரியாக தூக்கம் வரவில்லை.அடுத்த நாள் மாலை கரை எடுத்துக் கொண்டு தன்னுடைய நண்பர் மனோத்த்துவ நிபுணர் கிருபாகரனின் கிளீனிக்குக்குப் போனார்.மதிவாணன் அனத கருவி பற்றிய அனுபவங்க்களைக் கூறுவதை டாக்டர் கிருபாகரன் கவனமாக கேட்டார்.
“ முதலில் நீ போனில் என்னிடம் அந்தக் கருவி பற்றி கூறிய போது என்னுடைய நேரத்தை வீணடிக்கப் போகிறாய் என்று தான் நினைத்தேன். இப்போது அது தவறு என்று உணர்கிறேன்.நீ அந்த மூவரும் கண்ட வினோத காட்சிகளைக்கான காரணத்தை எண்ணி குழம்பிப் போய் இருக்கிறாய். அவைகளுக்குக் காரணம் விதி பற்றி மனிதர்களுக்கு இயற்கையாகவே உள்ள அழுத்தமான கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் தாம். இருந்த போதும் ஒருவர் தெரிவு செய்யும் வாழ்க்கைப் பாதையைத் தான் நாம் விதி என்று சொல்ல வேண்டியுள்ளது. இந்த நவீன உலகத்தில் திறமையும், ஆர்வமும் இருந்தால் யாரும் எந்தத் துறையையும் தெரிவு செய்து படிக்கலாம். அந்தத் துறையில் பணியாற்றி முன்னேரலாம். எனவே ஒரு மனிதனின் முன்னால் பல வழிகள் உள்ளன. அவை அவனை அழைக்கின்றன.
மருத்துவத்துறை, தொழில் நுட்பத்துறை, கலைத்துறை என்று ஒருவரின் முன்னே பல துறைகள் அவர் தெரிவு செய்வதற்காக இருக்கின்றன. அவற்றில் அவர் உள்ளம் விரும்பும் ஒன்றை தெரிவு செய்து தன் பயணத்தைத் தொடர்கிறார். ஒருவருக்கு குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு வழிகள் அவர் தெரிவு செய்வதற்கு ஏற்றவாறு இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். அவரால் எந்தத் துறையிலும் பிரகாசிக்க முடியும் அல்லது காலம் தள்ள முடியும். ஒவ்வொரு வழியும் விதி என்கிற போது அவர் முன்னே ஒரு விதி இல்லை. அவருக்கு ஏற்றவாறு முன்று, அல்லது நான்கு விதிகள் சேர்ந்த விதித் தொகுப்பு இருக்கிறது. அதில் ஒன்றை அவர் தெரிவு செய்து கொள்கிறார். எனவே வாழ்வில் விதியும் இருக்கிறது நமக்கான சுதந்திரமும் உள்ளது.அவர்கள் மூவருக்கும் தாங்கள் தெரிவு செய்ததை விட வேறு ஒரு நல்ல துறையை நாடி அதில் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. அதுவே அவர்களை விசித்திரமான உருவங்களைப் பெற்று முரண்பட்ட சூழலில் விளையாட வைத்துப் பார்க்கிறது. அந்தக் கருவி அவர்கள் ஆழ் மன எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கிறது. அக்கரை பச்சை என்பது ஒரு பொதுவான வாசகம். இதில் விதிக்கு இடம் இல்லை. மனிதனின் மனம் மிகவும் சிக்கலான வலைப்பின்னல். அதில் விதி பற்றிய நம்பிக்கைகள், அனுபவங்கள் சேரும்போது அது இன்னும் சிக்கல் நிறைந்ததாக மாறுகிறது. பிரபா, லோகேஷ், பிரசன்னா ஆகிய மூவரும் படித்தவர்கள். நவீன உலகத்தில் வாழும் இளைஞர்கள். இருந்த போதும் அவர்கள் இந்தியர்கள். இயற்கையாகவே விதி பற்றிய நம்பிக்கை அவர்களிடம் வேரூன்றி இருக்கிறது. மேலும் சுற்றி இருப்பவர்களோடு அவர்கள் உள்ள பூர்வமாக பகிர்ந்து கொள்ளும் கருத்துகளும் சேர்ந்து அவர்கள் அந்தக் கருவியில் கண்ட காட்சிகளாக மாறின.”
ஒரு மனோத்த்துவ நிபுணருக்கு உரிய பாணியில் பேசிமுடித்தார் கிருபாகரன்.
மதிவாணன் அந்தக் கருவியை ஒரு விளையாட்டு சாதனமாகவே கருதுகிறார். அவர்களை மகிழ்விப்பதற்காகவே அவர்களை அந்த விளையாட்டில் பங்கேற்கச் சொன்னார். ஆனால் கற்பனை விளையாட்டில் நிகழ்ந்தவை அவர்கள் மூவரின் சற்று குழம்பிய மன நிலைகளை பிரதிபலிப்பவைகளாகவே மாறிவிட்டன.அன்று ஓட்டலுக்கு விடுமுறை. வீடு திரும்பிய மதிவாணன் தன்னுடைய அறையில் அந்த கருவியின் முன்னே அமர்ந்தார்.டாக்டர் கிருபாகரன் கூறியவை இன்னும் அவர் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன. கருவியில் புதிய சுற்று ஆட்டம் ஒன்று ஆடிப்பார்க்கலாம் என்று எண்ணினார்.
நன்றி : காவ்யா தமிழ் ஏப்ரல் - ஜூன் 2014 இதழ்