- துவாரகை
தலைவன்
விஞ்ஞானத்தின்
அடிப்படை ஆய்வு செய்து கொண்டே செல்வது.செல்லும் வழியில் முன்னேற்றம் கிடைத்தால்
புதுப்புது இலக்குகள் முளைக்கும்.மனிதனின் தேடலுக்கு வேலி போட இங்கு யாரும்
இல்லை.விஞ்ஞான ஆய்வின் பலனை இறுதியில் அறுவடை செய்யப் போவது மனிதகுலம் தான்.அதே வேளையில்
ஆய்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அதன் நேரடி பலன் கண் முன்னே தெரிந்து
கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.ஆரம்ப கால அணு விஞ்ஞான ஆராய்ச்சி பலரின் கேலிக்கு
உள்ளாகி இருக்கும்.பலரின் சாபம் கூட சிலபேருக்குக் கிடைத்திருக்கலாம்.ஆனால் அது வளர வளரபல ஆண்டுகள்
கழித்து உலகமே புதிதாக பகுத்தறிவுள்ள மனிதனால் மறு வாசிப்பு
செய்யப்பட்டது.அதனால் கிடைத்த ஆயிரமாயிரம் நேரடி பலன்களையும் மறைமுக பலன்களையும்
தினமும் நாம் பெற்று வருகிறோம்.
குழந்தைக்குக் காட்டப்படும் சிரித்த முகம் போல விஞ்ஞானத்தின் நற்பலன்கள் இருக்கும் போது பிரச்சனை ஏதுமில்லை.அதே
வேளையில் விஞ்ஞானத்திற்கு மற்றொரு கோர முகம் உண்டு. அதைக்காட்டும் போது மனிதன் மிரள
ஆரம்பிக்கிறான்.
உலகில் அல்லது பிரபஞ்சத்தில் உள்ள
தனிமங்களில் சில மட்டும் முற்றிலும் வித்தியாசமாக உள்ளன.அவற்றின் அணு ஒன்றை
எடுத்துக் கொள்வோம்.அதன் கருவில் இருந்து
சதாசர்வகாலமும் கதிர் வீச்சு நடந்து கொண்டே இருக்கும். அவை தாம் கதிர் வீச்சு
தனிமங்கள்.
நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி கியூரி.போலந்து
நாட்டைச்சேர்ந்த அவர் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தார். அவர் பெளதீகவியலாராகவும்,வேதியல்வியலாளராகவும்
இருந்தவர்.அவர் தனிமங்களில் இருந்து கதிர் வீச்சுக்கு நெருங்கிய தொடர்புடைய ஐசோடோப்களைப் பிரித்தெடுக்கும் முறையை கண்டு
சொன்னவர். உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கதிர்வீச்சு கொண்ட அணுக்களால் ஆன
ரேடியம்,பொலோனியம் ஆகிய தனிமங்களை விஞ்ஞானி மேரி கியூரி
கண்டு பிடித்தார் .தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டதால் புற்று நோயால் பாதிக்கப்பட்டு
இறந்து போனார்.ஆனால் முதலில் ரேடியத்தின் கதிர் வீச்சால் ஏற்படும் ஆபத்து மேலை
நாட்டவருக்கேத் தெரியவில்லை.இன்னும் சொல்லப்போனால் ஆரம்பத்தில் விஞ்ஞானிகளே கதிர் வீச்சின் ஆபத்தை அறியாமல் இருந்தார்கள்.இருளில் ஒளிரும் தன்மை கொண்ட
ரேடியத்தை அதிசய அலங்காரப் பொருளாக பொது மக்கள் கொண்டாடினார்கள்.முகத்தில்
பூசப்படும் பவுடரில் அதைக் கலந்து ஐரோப்பாவில் சிலர் சந்தைக்குக் கொண்டு
வந்தார்கள்.கடிகாரத்தில் உள்ள எண்கள் ரேடியத்தால் இருளில்
ஒளிர்ந்தன.ஒப்பனைக்காரர்களும் ரேடியம் கலந்த பவுடர்களைப் பயன்படுத்தியவர்களும்
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட போது மக்கள் விழித்துக் கொண்டார்கள்.அதே ரேடியத்தை
சரியாக மருத்துவர்கள் மட்டும் பயன்படுத்தினால் அது புற்று நோய்க்கு சிகிச்சை
அளிக்க உதவும் என்பதையும் உலகம் அதன் பின்னர் கண்டு கொண்டது.
தனிமம் என்றால் வேதியல் வினையால் மேலும் பல
எளிய பொருள்களாக பிரிக்க முடியாத பொருள்.ஹைட்ரஜன்,ஆக்ஸிஜன்,கார்பன்,இரும்பு,தங்கம், வெள்ளி என
அனைத்தும் தனிமம் என்ற வகையில் வருகின்றன.இது வரை சுமார் 118 தனிமங்கள் இருப்பது
தெரிய வந்துள்ளது.
ஒரு தனிமத்தின் அணுவை எடுத்துக்
கொண்டால் பொதுவாக அது புரோட்டான்,நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய மூன்று அடிப்படை அணுத்துகள்களால் ஆனது.அதன்
மையக்கருவில் நேர்[ +] மின்னூட்டம் கொண்ட புரோடான்களும் நடு தன்மை
வகிக்கும் நியூட்ரான்களும் இருக்கும்.கருவில் எத்தனை புரோட்டான்கள் இருக்குமோ அதே
எண்ணிக்கையில் எதிர்[ - ] மின்னூட்டம் கொண்ட எலெக்ட்ரான்கள் மையக்கருவை சுற்றி
வந்து கொண்டிருக்கும்.எத்தனை புரோட்டான்கள் ஓர் அணுவில் உள்ளனவோ அது அந்த அணுவின்
அணு எண்.எத்தனை நியூட்ரான்கள் உள்ளனவோ அது அதன் அணு எடை எண் அல்லது மாஸ் எண். ஒரு தனிமத்தில் பெரும்பான்மையான அணுக்கள் ஒரே
அணு எண்ணும், எடை எண்ணும் கொண்டிருக்கும்.சில அணுக்கள் மட்டும்
பெரும்பான்மை அணுக்கள் கொண்ட அதே அணு எண் கொண்டிருந்தாலும் வேறு அணு எடை எண் கொண்டிருக்கும்.அதாவது
அந்த அணுக்களின் கருவில் இருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கை மட்டும்
மாறுகிறது.அவ்வகை அணுக்கள் இருக்கும் அந்த தனிமத்தின் பிரிவுக்கு ஐசோடோப் என்று பெயர்.
அணு என்பது பொதுவாக இருவகை மின்னூட்டம் கொண்டு
தன் அளவில் பிரச்சனை இல்லாமல் நிலை தன்மையில் இருப்பது.ஆனால் சில அணுக்கள்அவ்வாறு
இருப்பதில்லை.சில அரசியல் கட்சிகளுக்குள், முக்கியமாக தலைமையில் திடீரென குழப்பம் ஏற்படும்.பொறுப்புகள்
மாற்றப்படலாம்.சிலர் வெளியேற்றப்படலாம்.சிலரின் அதிகாரம் கூடலாம்.அவ்வாறே ஓர்
அணுவின் கருவில் மித மிஞ்சிய சத்தி வெளிப்பட எத்தனிக்கலாம் அல்லது உட்பொருள்கள்
அமைத்த அணி ஒத்து வராத அணியாக இருக்கலாம்.அப்போது சில துகள்களும், சக்தியும் வெளியேறுவதைத் தவிற வேறு வழி இல்லை.அதன் மூலமாக அணு தன் அளவில் நிலை
தன்மையை அடையை முனைகிறது.அதனால் தான் கதிர் வீச்சு என்பது சில தனிமங்களின்
அணுக்கருவில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இயற்கையாக உலகில்
கிடைக்கும் கதிர் வீச்சு தனிமங்களில்
ரேடியம்,தோரியம்,யுரேனியம் ஆகியவை
அடங்கும்.
அணு கதிர்வீச்சிற்கும் நியூட்ரினோவுக்கும்
நெருங்கிய தொடர்பு உண்டு.நியூட்ரினோ என்பது அணுவுக்குள் இருக்கும் ஒரு வகை
உட்பொருள் துகள்.அது கண்டுபிடிக்கப் பட்டதே கதிர் வீச்சின் மூலமாகத்தான்.கதிர்
வீச்சின் மூலமாக ஒரு தனிமத்தின் அணுக்கரு சிதைந்து மாற்றம் அடைந்து கொண்டே
இருக்கும்.புதுவகை தனிமமாக அது வடிவம் எடுத்துக் கொண்டே செல்லும்.பல லட்சக்கணக்கான
ஆண்டுகள் ஆனாலும் அணுக்கரு சிதைவும் புது பொருளாக மாற்றம் அடைவதும் தொடரும்.இயற்கையாகக்
கிடைக்கும் கதிர் வீச்சு தனிமங்கள் தவிர செயற்கையாக உருவாக்கப்படும் கதிர் வீச்சு ஐசோடோப்கள் உள்ளன.அவற்றை
விஞ்ஞானிகளால் சைக்ளோட்ரான் போன்ற கருவியைப் பயன் படுத்தி உண்டாக்க முடியும்.அதில்
தனிம அணுக்கருவின் மீது சில அணுஅடிப்படை
துகள்களை மோத விட்டு கருச்சிதைவு செயற்கையாக உண்டாக்கப்படும்.கதிர் வீச்சின் போது
அணுக்கரு சிலவற்றை இழக்கிறது.அவை தாம் கதிர்களாக புறப்பட்டு வெளியேறுகின்றன.அவை
ஆல்பா,பீட்டா,காமா என்ற மூன்று வகை துகள்களால் ஆனவை.
இந்த மூன்று வகை கதிர்களைப்பற்றி மக்கள் கவலை கொள்வதற்குக் காரணம் இவை எல்லாம்
அயான்களை உண்டாக்கும் கதிர் வீச்சுகள் என்பதால் தான்.அயான்கள் என்பவை
அதிசயப்பொருள்கள் அல்ல.அவை மின்னூட்டம் கொண்ட அணுக்கள்.ஒர் அணுவில் உள்ள
எலெக்ட்ரான்கள் சில நீக்கப்படும் போது அந்த அணு ஓர் அயானாக மாறுகிறது.ஏனென்றால்
அப்போது ஓர் அணுவில் சமமாக இருந்த எலெக்ட்ரான்,புரோடான்களின் எண்ணிக்கை மாறி
விடுகிறது.ஓர் அயான் நேர் மின்னூட்டம் அல்லது எதிர் மின்னூட்டம் கொண்டதாக இருக்கும்.ஆல்பா
,பீட்டா ,காமா ஆகிய மூன்றுமே அணுக்களை
அயான்களாக மாற்றும் திறன் கொண்டவை. கவண் கல் எறிந்து மரத்தில் உள்ள மாங்காயை வீழ்த்துவது போல் அணுவில்
உள்ள எலெக்ட்ரானை அவை நீக்கும்.
நம் உடல் என்பது
உயிருள்ள செல்களால் ஆனது. அவற்றுள்
இருப்பதும் தனிமங்களும்,சேர்மங்களும்[காம்பவுண்ட்]
தாம்.இரும்புச் சத்து குறைந்து விட்டது;அயோடின் குறைந்து
விட்டது என மருத்துவர்கள் சொல்வதை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம்.உடல் என்பது பல
வகை தனிமங்கள் கொண்ட செல்களால் ஆன கூடு
அல்ல.அது ஒரு வியத்தகு தொழிற்சாலை.அங்கு பல வகைப்பட்ட தனிமங்களும்,சேர்மங்களும் பல வேதியல் வினைகளில்
ஈடுபடுகின்றன.சரியாகச் சொன்னால் பல வகை
தனிமங்களின் அணுக்கள் வேதியல் வினைகளில் ஈடுபடுகின்றன.அந்த அணுக்களை சுற்றிவந்து
கொண்டிருக்கும் பறவைகள் போல இருக்கும் எலெக்ட்ரான்கள் கதிர் வீச்சால் சுட்டு வீழ்த்தபடும்
போது ஓர் அணு அதன் சுயதன்மை இழந்துவிடும்.குறிப்பிட்ட சில செயல்களைச் செய்யும் திசுக்கள்
கதிர் வீச்சுகளால் பாதிக்கப்படும் போது உடல் நலிவுறும்;புற்று
நோய் வந்து மனிதன் இறந்து போகலாம்.ஓர் ஆல்பா துகள் பத்தாயிரம் அணுக்களை அயான்களாக மாற்றிவிடும்
வலிமை பெற்றது.
கதிர்
வீச்சு இருக்கும் இடத்தில் பணி புரியும் மனிதனின் உடலில் உள்ள திசுக்கள் எவ்வளவு பாதிப்பு அடந்துள்ளன என்பதை அளக்கும்
கருவிகள் இருக்கின்றன.அவை ஒரு கிலோ எடை அளவு திசுக்கள் எவ்வளவு கதிர் வீச்சு
சக்தியை உறிஞ்சியுள்ளன என்பதை காட்டும்.அதற்கான அலகு கிரே[[1gray= 1j \kg]
ஆல்பா துகள்கள் இரண்டு புரோட்டான்களும்
இரண்டு நியூட்ரான்களும் கொண்ட ஹீலியம் அணுக்கருக்களால் ஆனவை.பீட்டா துகள் என்பவை
எலெக்ட்ரான்கள் தாம்.மற்ற எலெக்ட்ரான்களுக்கும் இவற்றிற்கும் உள்ள வேறுபாடு இவை
அணுவின் கருவில் இருந்து வருகின்றன என்பது தான்.அணுக்கருவில் எப்படி
எலெக்ட்ரான்கள் வந்தன என்ற சந்தேகம் நமக்கு வரலாம்.உண்மையில் அணுவில் வசிக்கும்
உட்பொருள்கள் ஒன்றில் இருந்து ஒன்றாக உருமாறக் கூடியவை.இங்கே ஒரு ராமசாமி, வேலுச்சாமி,சின்னச்சாமி
ஆகிய இருவராக பிரிந்து
உருமறக்கூடும்.நடப்பது இது தான் அணுவின் கருவில் உள்ள ஒரு நியூட்ரான் பிரிந்து ஒரு
புரோட்டானாகவும்,ஒரு எலெக்ட்ரானாகவும் உருமாறுகிறது.அதன்
பின் புரோட்டான் கருவில் தங்கி விட எலெக்ட்ரான் மட்டும் பீட்டா துகளாக தன்
பயணத்தைத் தொடங்குகிறது.பீட்டா கதிர்கள் ஓரளவு உடலை பாதிக்கக் கூடியவை.காமா
துகள்கள் என்பவை ஒளித்துகள்களான போட்டான்கள்.சூரியனில் இருந்து போடான்கள் பூமிக்கு
வருகின்றன.காமா கதிர்களால் நமக்கு ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவு.மின்காந்த
கதிர்கள் வரிசையில், குறைந்த அலை நீளம் கொண்டதால் கடைசியில்
காமா கதிர்கள் இருக்கும்.காமா கதிர் வீச்சு பெரும்பாலான ஆல்பா,பீட்ட கதிர் வீச்சுகளோடு இணைந்து நடக்கும்.
ஆல்பா கதிர் வீச்சு, காமா கதிர்
வீச்சு ஆகிய இரண்டலும் கதிர் வீச்சு நடக்கும் அணுக்கருவில்[நியூக்லைட்] சக்தி வெளிப்பாட்டின்
இருப்பு ,செலவு கணக்கு சரியாக இருக்கிறது.ஆனால் பீட்டா கதிர்
வீச்சின் போது அவ்வாறு இல்லை.கணக்கு எங்கோ
உதைக்கிறது.அணு கருவின் சக்தி இருப்புக்கும் வெளிப்பட்ட சக்தி வீச்சுக்கும் இடையே
முரண்பாடு தெரிகிறது.கதிர் வீச்சின் போது ஒரு ஜாதியைச் சேர்ந்த உட்பொருள்கள் எல்லாம் ஒரே அளவு சக்தியை எடுத்துக்
கொண்டு வெளிப்படவில்லை.அவற்றுள் சில மட்டும் அதிகமான சக்தியை எடுத்துக் கொண்டு செல்கின்றன.சில
குறைவான சக்தியை எடுத்துக் கொண்டு செல்கின்றன.அதனால் பீட்டா கதிர் வீச்சின் ஒரு
கட்டத்தில் கணக்கிட்டால், வெளியே போன சக்தியின் அளவை
விட கதிர் வீச்சு நடக்கும் அணுக்கருவில் சக்தி
அதிகமாக செலவாகி இருப்பது தெரிகிறது.ஒரு
உற்பத்தி நிறுவனத்தில் இருந்து ஐந்து லாரிகளில் பொருள்கள் ஏற்றப்பட்டு, ஐந்து ஓட்டுநர்கள் அவற்றை ஓட்டிக் கோண்டு போனார்கள்.அன்று மாலை கிடங்கில்
ஐந்து லாரி பொருள்களுக்கு பதிலாக ஏழு லாரி பொருள்கள் குறைந்துள்ளன என்பதை மேலாளர்
அறிந்து கொள்கிறார்.அவர் மேற்பார்வையில் வெளியே போனவை ஐந்து லாரிகள் தாம்.நிச்சயமாக
கூடுதலாக இரண்டு லாரிகள் வந்து பொருள்களை
ஏற்றிச்சென்றிருக்கின்றன. இவ்வாறு தான் பீட்டா கதிர் வீச்சின் போது நடக்கிறது.சில
அணுத் துகள்கள் குறைவான சக்தியை எடுத்துக்கொண்டு சென்றதற்குக் காரணம் நாம் அறியாத
வேறு சில பொருள்கள் .அவைதாம் அந்த எஞ்சிய சக்தியை அணுக் கருவில் இருந்து எடுத்துக்
கொண்டு செல்கின்றன. நிறுவனத்தில் உள்ள சிலர் திருடர்களாக மாறி மேலாளரின் கண்களில்
மண்ணைத்தூவி கிடங்கில் இருந்து பொருள்களை ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள்.அவர்கள் போன்றவை தாம் அந்த புதிரான துகள்கள்.அவைக்கு
நியூட்ரினோ என்றுபெயரிட்டார்கள் விஞ்ஞானிகள்.இத்தாலிய வார்த்தையான அதன் பொருள் ‘நேர் மின்னூட்டமும் எதிர் மின்னூட்டமும் அற்று நடுநிலை வகிக்கும் குட்டிப்பொருள்’
நியூட்ரினோ என்பது
கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் செல்லும் ஓர் அணுத்துகள் அல்லது அணுவின் ஓர்
உட்பொருள்.அது மேலும் சிறிய பொருளாக பிரிக்க முடியாத துகள்.நியூட்ரினோ என்பது நியூட்ரான் அல்ல.அது பிரபஞ்சத்தின் மிகுதியான
பகுதியை நிறைத்திருக்கும் அனுமான, இருள் பொருளான
நியூட்ராலினோவும் அல்ல.
நண்பர் ராமசாமி மதுரை மாவட்டத்தில்
இருக்கும் நிலையூர் கிராமத்தில் ஒரு வீட்டில் வசிக்கிறார்.அவருக்கு ஒரு முகவரி
இருப்பதுபோல நியூட்ரினோவுக்கும் ஒரு முகவரி உண்டு. துகள் பெளதீகம் அடிப்படை
துகள்களை அல்லது அணுவின் உட்பொருள்களை இரண்டு வகையாக பிரிக்கிறது.முதல்
வகையைச்சேர்ந்தவை ஹட்ரான்கள்.இவை எப்போதும் வலுவான இணைப்பு விசைகளை
உணரக்கூடியவை.அந்த விசைகள் தாம் புரோட்டான்களை அணுவின் கருவில் இணைத்து
வைத்துள்ளன.மேலும் அவை தாம் ஒரு புரோட்டானுக்குள் இருக்கும் மின்னூட்டம் கொண்ட மிகச்சிறிய
குவார்க்கள் எனும் துகள்களை இணைத்து வைத்துள்ளன.இரண்டாவது வகை அடிப்படை துகள்கள் லெப்டான்கள்.இவை அதிக விசைகளுக்கு
ஆட்படுத்தப்பட்டவை அல்ல.இந்த லெப்டான்
அடிப்படைத்துகள் ஜாதியில் தான் நியூட்ரினோ வருகிறது.அந்த ஜாதியில்
இருக்கும் முக்கியமான மற்றொரு அணு உட்பொருள் எலெக்ட்ரான்.ஒரே வகையில் இருந்தாலும்
நியூட்ரினோவுக்கு, எலெக்ட்ரான் போல மின்னூட்டம் எதுவும் கிடையாது.அது பரம சாது.எலெக்ட்ரான்
எதிர் மின்னூட்டம் கொண்டது.எடையை[மாஸ்]ப் பொறுத்த வரை நியூட்ரினோ, எலெக்ட்ரானை விட மிக மிக குறைவான எடை கொண்டது.9.1094 என்ற எண்ணை
ஓன்றுக்குப் பிறகு 23 பூஜ்யங்கள் கொண்ட ஓர் எண்ணால் வகுத்தால் எவ்வளவு சிறிய எண்
கிடைக்குமோ அவ்வளவு கிராம் தான் ஓர் எலெக்ட்ரான்.அதை விட பல மடங்கு சிறிய எடை
கொண்டது நியூட்ரினோ.
இந்த நியூட்ரினோக்கள் முன்று அல்லது நான்கு
வழிகளில் உற்பத்தி ஆகிகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.முதல் வழியைக்கான மீண்டும்
ராமசாமியின் உதவி நமக்கு வேண்டும்.ராமசாமியின் முகவரி அவர் வசிக்கும் வீட்டு
இலக்கம் தொடங்கி தெருவின் பெயர்,நிலையூர் கிராமம்,மதுரை மாவட்டம்,தமிழ் நாடு,இந்தியா என்று நின்று விடாது.அது உலகம்,சூரிய குடும்பம்,பால் வீதி அண்டம்,பிரபஞ்சம் என்று முடிகிறது.நாம் இருக்கும் பால் வீதி அண்டத்தில்[கேலக்ஸி]
மட்டும் சுமார் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன.அவற்றுள் ஒன்றுதான் நம்
சூரியன்.ஒரு பில்லியன் என்பது 100 கோடிகள்.மேலும் பிரபஞ்சத்தில் சுமார் 100 முதல்
200 அண்டங்கள் இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.ராமசாமி வீட்டை விட்டு
வெளியே செல்கிறாரோ இல்லையோ பூமி சூரியனை சுற்றுகிறது.சூரியன் தன் குடும்பத்தோடு
பால் வீதி அண்டத்தைச் சுற்றி வருகிறது.பால் வீதி போன்ற பல கோடி அண்டங்களும் விலகி
சென்று கொண்டே இருக்கின்றன.இந்த பிரபஞ்சம் சுமார் 13.77 பில்லியன் ஆண்டுகளுக்கு
முன்னால் ஒரு சாத்துக்குடி அளவுதான் இருந்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.அது தான்
ஒரு ‘பெரு வெடிப்புக்கு’ப் பிறகு இன்று
ராமசாமியின் விலாசம் கொண்ட பூமி வரை விரிந்திருக்கிறது.டாக்டர் பங்கர் சொல்கிறார்
சுமார் 13.77 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்
பிரபஞ்சம் வாயுகளின் மேகத்தில் இருந்து உண்டானது என்று.அப்போது மிகுதியாக
ஹைட்ரஜன் அணுக்களே இருந்தன.குறைந்த அளவில் ஹீலியம்அணுக்களும் இருந்தன.அணுக்கள்
கூடி ஒரு வெடிப்பு நிகழ்ந்து பிரபஞ்சம் பிறந்து, விரிவடையத்
தொடங்கியது.அந்த பெருவெடிப்பு எப்போது நிகழ்ந்ததோ அதுவே காலத்தின் தொடக்கம்.
பெரு வெடிப்பு நிகழ்ந்து முதல் ஒரு நொடிக்குள்ளாக நியூட்ரினோ வெளிப்பட்டது. அதுவே முதலில்
வெளிப்பட்ட அடிப்படை துகள் அல்லது அணுத்துகள்.
மற்ற அணு உட் பொருள்களான புரோட்டன், நியூட்ரான்,எலெக்ட்ரான்,மேலும்
சில எளிய அணுக்கருக்கள் ஆகியவை முதல்
மூன்று நிமிடங்களில் வெளிப்பட்டிருக்க வேண்டும்.அதற்கு பிறகு சுமார் ஆயிரம்
ஆண்டுகள் கழித்தே பிற சமநிலை கொண்ட
அணுக்கள் பல தோன்றி இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
பெருவெடிப்பு நிகழ்ந்த பிறகு பல கோடிக்கணக்கான தேனீக்கள் போல நியுட்ரினோக்கள் கிளம்பின. அப்போது முதல் இந்த
நொடி வரை பிரபஞ்சத்தை மொய்த்துக் கொண்டிருக்கின்றன.பிரபஞ்சம் எங்கும் ஒரு கன
சென்டிமீட்டருக்கு சராசரியாக சுமார் 150 நியுட்ரினோக்கள் நிறைந்துள்ளன என்பது
விஞ்ஞானிகளின் கூற்று.காலத்தின் தொடக்கத்தில் பிறந்த இந்த காலத்தூதுவர்களில் ஒன்று
இப்போது ஓர் அணுக்கருவில் அரிதாக ஊடாடும்[இன்டெராக்ட்] நிகழ்வை பதிவு செய்யலாம்
என்று உலகம் எங்கும் உள்ள சில விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள்
பயன்படுத்திய மண்பானையின் உடைந்த ஒரு துண்டு அகழ்வாராய்ச்சியில் கிடைக்கிறது.அது போல பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்
நடந்தபெரு வெடிப்பின் போது புறப்பட்ட நீயுட்ரினோக்கள் இப்போதும் வெளியில் நகர்ந்து
வருகின்றன.அவற்றை ஆராய விஞ்ஞானிகள் முனைகிறார்கள்.இது சாத்தியமாகும் ஒன்று தான்.நேற்று நடந்த
கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பின் மறு ஒளிபரப்பை தொலைக்காட்சியில் இன்று நாம்
பார்கிறோம்.13.77 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பெரு வெடிப்பு நடந்த போது
தோன்றிய காட்சியை நாம் பார்க்க முடியாது.ஆனால் அது நடந்து சுமார் 4 லட்சம் ஆண்டுகள் கடந்த பிறகு நடந்த
காட்சியை அதாவது பிரபஞ்சநிலையை நாம்
ஒருவாறு சில கருவிகளைப் பயன்படுத்தி பார்க்க முடியும்.ஏனென்றால் பெருவெடிப்பு
நிகழ்ந்து 4 லட்சம் ஆண்டுகள் கழித்து தான் ஒளித்துகளான போட்டான்கள் சுதந்திரமாக
பிரபஞ்சத்தில் உலவ ஆரம்பித்தன.அப்போது ஏற்பட்ட காஸ்மிக் மைக்ரோ அலை பின்புலத்தை
நாம் இப்போதும் பார்க்க முடியும்.அந்த அற்புதமான
வேளையில் நியூட்ரினோக்கள் பல்கிப்பெருகி நீயூட்ரினோ கடலே
உருவாகியது.அப்போது அந்த நியூட்ரினோ கடலில் ஏற்பட்ட பெரும் சலனங்கள் ஏற்படுத்தும்
விளைவுகளை ஆய்வின் மூலம் அறியத் துடிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.நியாயமான ஆசை தான்
அது.பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த காட்சியை இப்போது சக்தி வாய்ந்த ஹப்புள் தொலை நோக்கி
மூலமாக விஞ்ஞானிகளால் பார்க்க முடிகிறது.அதற்குக் காரணம் பெரு வெடிப்பு நடந்த
இடத்திற்கும் தொலை நோக்கி இருக்கும் இடத்திற்குமான தூரத்தைக் கடந்து வர ஒளிக்கு பல
பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன என்பது தான்.
சூரியனின் நடுவில் பல மில்லியன் டிகிரி
கெல்வின் வெப்பம் உள்ளது.அதன் காரணமாக
ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் அணுக்களாக மாறுகின்றன. எப்போதும் அணுப்பிணைவு
நிகழ்ந்து ஒளியும் வெப்பமும் உண்டாகின்றன.அவ்வேளையில் நியூட்ரினோக்கள் கிளம்புகின்றன.அவற்றை
ஆராய விஞ்ஞானிகள் முற்படுகிறார்கள். மேலும் விஞ்ஞானிகள் அணு உலையில் செயற்கையாக
அணுக்கருச்சிதைவை ஏற்படுத்தி ஆய்வுக்காக நியூட்ரினோக்களை உண்டாக்குகிறார்கள்.
சமூக ஆர்வலர்கள் சிலருக்கும் பொதுமக்கள் சிலருக்கும்
நியூட்ரினோ ஆய்வு என்றால் அச்சம் ஏற்படுவதற்கு காரணம் நியுட்ரினோ உருவாகும் சூழல்
தான்.நியூட்ரினோ என்பது எந்த பாதிப்பையும்
ஏற்படுத்தாது என்றாலும் அது உருவாவதற்கும் கதிர் வீச்சுக்கும் தொடர்பு இருப்பதால்
இயற்கையாக ஒரு பயம் மக்களுக்கு வந்து
விடுகிறது.அது தேவையற்றது.ஏனென்றால் வெளியில் இருந்து வரும் நியூட்ரினோக்கள்
டிரில்லியன் கணக்கில் எப்போதும் நம் உடலைக் கடந்து போய் கொண்டே இருக்கின்றன.ஒரு
டிரில்லியன் என்பது லட்சம் கோடி.நியூட்ரினோக்கள் மிகமிக குறைந்த எடையோடு குறைவான
சக்தியைக் கொண்டிருப்பதால் அவ்வளவு எளிதாக ஒரு பொருளின் அணுக்கருவோடு ஊடாடி
விடாது.ஆகவே பல கோடிக்கணக்கான மைல்கள் தொலைவை சாதுவாக பயணித்து உடலை சதா சர்வகாலமும் ஊடுருவி இந்த பூமியையும் கடந்து
அவை போய்க் கொண்டே இருக்கின்றன.
பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் வெடிக்கும்
போது நியூட்ரினோக்கள் கிளம்பி வருகின்றன.சூரியனில் இருந்து பூமிக்கு அவை நிறைய
வருகின்றன.வெளியில் இருந்து வரும் அதிசயக் கதிர்களான காஸ்மிக் கதிர்கள் அணுகருவில்
மோதும் போது நியூட்ரினோ உண்டாகிறது.அணுஉலைகளில் அதை உற்பத்தி செய்யமுடியும்.இவை தவிர நியூட்ரினோ உற்பத்தியாகும் ஓர் முக்கிய இடம் பூமியிலேயே இருக்கிறது.அது தான்
பூமியின் மையத்தில் இருக்கும் பிரமாண்ட இயற்கை அணுச்சிதைவு உலை. பூமியின் மையத்தில்
இருப்பது இரும்பும், நிக்கலும் சேர்ந்த ஒரு ராட்சத உலோக பந்து.பல்லாயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் அது ஓர் அணு உலையாக இருக்கிறது.அதற்குக் காரணம்
சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு
முன்னால் உலகம் உண்டான போது பூமியின் மையத்தில் தங்கிவிட்ட யுரேனியம், தோரியம் போன்ற கதிர்வீச்சு தனிமங்கள் தாம்.இந்த இயற்கை அணுஉலை மனிதன்
உண்டாக்கும் செயற்கை அணுஉலையை விட பல ஆயிரம்
மடங்கு சத்தி வாய்ந்தது.இந்த அணு உலை கொடுக்கும் வெப்பத்தால் தான் பூமியின் மேல்
பகுதிக்கும் மையத்தில் இருக்கும் உலோக உருண்டைக்கும் நடுவில் இருக்கும் உலோகக்
குழம்பு பூமிக்குள் சுற்றி வருகிறது.இது
சில விஞ்ஞானிகளால் முன் வைக்கப்படும் ஒரு முக்கியமான புதிய கருதுகோள்.இது
இப்போது விஞ்ஞானிகளால் ஜப்பானில் நியூட்ரினோவை கண்டுபிடிக்கும் கருவிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.அது
சாத்தியம் ஆனதற்குக் காரணம் பூமிக்குள் இருக்கும் அந்த பிரமாண்ட அணு உலையில்
இருந்தும் வெளிப்படும் நியூட்ரினோக்கள்
தாம்.
பூமிக்குள் இருக்கும் அந்த அணு உலை
இல்லை என்றால் இந்த பூமியில் உயிர்கள் எதுவும் இருக்காது. அந்த அணு உலையே உலோகக் குழம்பின் சுழற்சிக்குக் காரணம்.சுழற்சியினால்
உண்டாகும் டைனமோ விளைவால் ஒரு ரட்சத மின்காந்தம் உருவாகிறது.அது ஏற்படுத்தும்
காந்தக் கவசமே உலகில் உயிர்களின் ஆதாரம். பூமியின் அண்டை வீடுகளான வியாழனிலும்,புதனிலும்
ஏன் உயிர்கள் தோன்றவில்லை என்பதற்கு இப்போது விடை கிடைத்து விட்டது.அந்த
கிரகங்களின் உள்ளே இயற்கை அணு உலை இல்லை.
ஆதலால் உலோகக்குழம்பு சுழற்சி இல்லை.அதனால் உயிர்
நிலைக்க ஆதாரமாக இருக்கும் நீராவியை,புரோட்டான்களால் ஆன சூரியப்புயல் அடித்துக் கொண்டு
போய்விடுகிறது.நம் பூமியில் இருக்கும் காந்த கவசம் அதை தடுத்து யுகம் யுகமாக உயிர்கள் இங்கே தோன்றி
நிலைக்கக் காரணமாக இருக்கிறது.இனி மனிதன் கடவுளுக்குக்கட்டும் நவீன கோவில்
மின்காந்தக்கவசக் கோவிலாகத் தான் இருக்கும்.அங்கே உயிர்கள் எப்படி பூமியில்
மட்டும் நிலைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன என நாம் அறிந்து கொள்ள உதவிய
நியூட்ரினோக்களால் அர்ச்சனை நடக்கும்.
லெப்டான் ஜாதியைச்சேர்ந்த அடிப்படைத்
துகளான நியுட்ரினோ முன்று வகைப்படும்.அவை எலெக்ட்ரான் நீயூட்ரினோ,மியூஆன்
நீயூட்ரினோ,டா நீயூட்ரினோஆகியவை
. இவை தவிற ஆன்ட் டி நியூட்ரினோ என ஒன்று உண்டு.நிலையூர் கிராமத்திலும் E.ராமசாமி,M.ராமசாமி,T.ராமசாமி என மூன்றுபேர் இருக்கிறார்கள். E. ராமசாமி நிலையூரில் இருந்து புறப்பட்டு மதுரை நகரத்திற்கு
செல்கிறார்.மதுரையில் சிலர் M.ராமசாமியைப்
பார்த்தார்கள்.கிராமத்தில் இருந்து புறப்பட்டது நிச்சயமாக ஒரு ராமசாமி தான்.மேலும்
மதுரைக்குப் புறப்பட்டுப் போனவர் E.ராமசாமி தான் என்று ஊர்க்காரர்கள் அடித்து சொல்கிறார்கள்.அவர் பயணித்த பஸ்
ஒரு சிற்றூரில் நின்றது.அந்த ஊர்க்காரர் ஒருவர் பஸ்ஸில் அமர்ந்திருந்தவர் T.ராமசாமி என்றார்.இந்த அதிசய ராமசாமிகள் போலத்தான் வெளியில் இருந்தும், சூரியனில் இருந்தும் வரும் நியூட்ரினோக்கள் உள்ளன.புறப்படும் ஒரு வகை
நியூட்ரினோ எவ்வகையாக பூமி வந்து சேரும் என்று சொல்ல முடியாது. வரும் வழியில் அது
உருமாறிக்கொண்டே இருக்கும்.
1931ஆம் ஆண்டு உல்ப் கேங் பாலி, அணுக்கரு
சிதைவு பீட்டா கதிர் வீச்சில் ஒரு புதிய அணு துகள் இருக்க வேண்டும் யூகித்து
சொன்னார்.1934 ஆம் ஆண்டு என்டிரிக்கோ
பெர்மி கதிர் வீச்சு தொடர்பாக விரிவான விளக்கங்கள் கொடுத்தார்.அவர் பாலி
குறிப்பிட்ட அந்த துகளுக்கு நியூட்ரினோ என்று பெயரிட்டார்.1959 ஆண்டு கிலைட்
கவன் நியூட்ரினோவைக் கண்டுபிடித்தார் .அதன்பிறகு நியூட்ரினோ ஆராய்ச்சி உலகம்
முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது . ஆய்வுகளில் உலகின் பல விஞ்ஞானிகளின்
பங்களிப்பு உண்டு. சுட்சர்லாந்து , ஜப்பான் கனடா,போன்ற பல நாடுகளில் நியூட்ரினோ ஆய்வகங்கள் உள்ளன.அன்டார்டிக்காவில் ஓர் ஆய்வகம்
அமைக்கப்பட்டுள்ளது.சீனாவிலும் நியூட்ரினோ ஆராய்ச்சி தீவிரமாக நடை பெறுகிறது.அந்த வரிசையில்
தமிழ் நாட்டில் தேனி மாவட்டத்தில் பொட்டிபுரம் கிராம எல்லையில் உள்ள போடி மேற்கு மலையில் அமைய இருக்கும் ஆய்வகம் தான் ஐ என் ஓ.[INO]பத்து வருடங்களுக்கு மேலாக இதை அமைப்பது தொடர்பான பூர்வாங்க வேலைகளை இந்திய விஞ்ஞானிகள் செய்து
வருகிறார்கள்.இது இந்தியாவில் அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிக்காக செயல்படுத்தப்படும்
மிகப்பெரிய திட்டம்1350 கோடிகள்செலவு பிடிக்கும் இந்த திட்டத்திற்கான நிதியை
இந்திய அணு சக்தித்துறையும் இந்திய விஞ்ஞான தொழில்நுட்பத்துறையும் சேர்ந்து
அளிக்கின்றன.
முதலில் நீலகிரி மலையில்
அமைய இருத்தது நியூட்ரினோ ஆய்வகம்.வனம் சுற்றுச் சூழல்,
அமைச்சகம் வன விலங்குகளின்இருப்பிடங்கள் பாதிக்கப்படும் என்று அதற்கு அனுமதி
கொடுக்க மறுத்துவிட்டது.அதன் காரணமாக என்சிஜி[NCG] எனப்படும்
பல விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டுக்குழு, ஆய்வகம் அமையவிருக்கும்
இடத்தை பொட்டிபுரத்திற்கு மாற்றியது.
ஆய்வகம் அமைய இருக்கும் இடம்
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி.அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குன்று ஒரே பாறையால்
ஆனது.ஒரு கிலோமீட்டர் ஆழத்தில், இரண்டு கிலோமீட்டர்கள் நீளமும் 7.5 மீட்டர்கள்அகலமும் கொண்ட ஒரு குகையின்
முனையில் ஆய்வகக்குகை அமைய உள்ளது.குகையின் நுழை வாயிலில் 24 ஏக்கர் நிலம்
கையகப்படுத்தப்பட்டுள்ளது.ஆய்வகம் இயங்குவதற்குத் தேவையான வசதிகளை உருவாக்க அந்த இடம் உதவும் .நியூட்ரினோ
மிகச் சிறிய துகளாக இருப்பதால் அதை கண்டுபிடித்து அதை பற்றி ஆராய்ந்து அறிந்து
கொள்வது மிகவும் கடினமானது.ஆகையால் மிகவும் சக்தி வாய்ந்த 50 கிலோ டண் எடை கொண்ட
இரும்பினாலான நியூட்ரினோ கண்டு பிடிப்பு கருவி ஆய்வகத்தில் வைக்கப்படும்.ஒரே
பெரும் பாறையைக் குடைந்து ஆய்வகம்
அமைப்பதற்கு காரணமிருக்கிறது.அணுக்கருவில் மோதி நியூட்ரினோக்களை உருவாக்குபவை
பிரபஞ்ச வெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்கள்.அவற்றில் மேலும் சில
மின்னூட்டம் கொண்ட துகள்கள் உள்ளன.அவற்றை பெரும் பாறை வடிகட்டி விடும்.அதனால்
பாறையை ஊடுருவி வரும் நமக்குத் தேவையான நியூட்ரினோக்களைக் கண்டுபிடித்து அவற்றை
பற்றி ஆய்வு செய்ய முடியும். இந்த
தகவல்களை கொடுக்கும் ஐஎன் ஓ வின் செய்தித்
தொடர்பாளர் திரு. நபா கே. மண்டல் .மேலும் அவர் ஆய்வகம் மிக ஆழத்தில்
அமைந்துள்ளதால் வனப்பகுதியில் எந்த பிரச்சனையும் எழ வாய்ப்பில்லை
என்கிறார்.அவர் என்சிஜி யில்உள்ள முக்கிய
நிறுவனமான டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் பெளதீகவியலாளராகவும்
உள்ளார்.கட்டுப்படுத்தப்பட்ட முறையில் பாறை உடைக்கப்பட்டு துளையிடப்படும்;கழிவுகள் நீக்கப்படும்.
திட்டம் பல ஆண்டுகளாக நடந்த பூர்வாங்க வேலைகள்,
விவாதங்கள் ஆகியவற்றிற்குப் பிறகு ஒரு
வழியாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று
விட்டது.மதுரை அருகில் நாக மலைப்புதுக்கோட்டையில் திட்டத்தை செயல்படுத்த ஒரு தற்காலிக
அலுவலகம் செயல்பட உள்ளது. சுற்றுப்புற ஆர்வலர் வி.டி.பத்மநாபன் இந்தத்
திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்.இந்த ஆய்வகம் நிறுவப்பட்டால்
மண்ணுக்கும்,உயிர்களுக்கும் கடுமையான கதிர் வீச்சு அபாயம்
ஏற்படும் என்கிறார். அமெரிக்காவில் உள்ள பெர்மி ஆய்வகம் ஓர் உயர் சக்தி பெளதீக
ஆய்வகம்.அங்கு உற்பத்தி செய்யப்படும் நியூட்ரினோக்களை பொட்டிபுரத்தில்
அமையவிருக்கும் குகை ஆய்வகத்திற்கு அனுப்பி பயணத்தின் போது அவைக்குஏற்படும்
மாற்றங்கள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் ஒரு தகவலைச்சொல்கிறார் பத்மநாபன்.இதை என் சி ஜி
மறுத்துள்ளது.அமைய உள்ள ஆய்வகம் பூமியின் வாயு மண்டலத்திலிருந்து வரும்
நியூட்ரினோக்களை மட்டும் தான் ஆய்வுசெய்யும்.பத்மநாபன் குறிப்பிடுவது போன்ற தொழில்
நுட்பம் வர இன்னும் பத்துஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்கிறது.அப்படியே அமெரிக்கவில்
இருந்து நியூட்ரினோக்களை பீச்சி அடித்து தேனி ,பொட்டிபுரம்
ஆய்வகதில் அவற்றைஆய்வு செய்தாலும் யாருக்கும்எந்த பாதிப்பும்
ஏற்படப்போவதில்லை.அதாவது நூறு வருடங்கள் அந்த நியூட்ரினோக்கள் வரும் வழியில் மனிதன்
ஒருவன் நின்றாலும் ஒரு நியூட்ரினோ அவர்
உடலில் உள்ள ஏதோ ஒரு தனிம அணுக் கருவோடு
ஊடாட [இன்டெராக்ட்]வாய்ப்பில்லை.கதிர் வீச்சு பாதிப்பு என்பது உடலில் உள்ள அணுக்கரு ஒன்று அணு உட்பொருள் துகள் ஒன்றால் தாக்கப்படும்
போதுதான் ஏற்படும்.சிலர் வெளிப்படுத்தும் அச்சத்திற்குக் காரணம் நியூட்ரினோ பற்றி சரியாக புரிந்து கொள்ளாததால்
ஏற்பட்ட விழிப்புணர்வு இன்மைதான்.சில ஆண்டுகளுக்கு முன்பே பதட்டமடைந்த கிராம
மக்களிடம் நிபுணர்கள் விளக்கம் கொடுத்து,அவர்களை அமைதி
படுத்தி இருக்கிறார்கள்.
“முதலில்
இந்தத் திட்டம் வருவதை கிராம மக்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.இப்போது விஞ்ஞானிகள்
அதைப்பற்றி எங்களுக்கு விளக்கி இருக்கிறார்கள்.அதனால் எங்கள் கிராம மக்கள்
எதிர்ப்பு போராட்டத்தை நிறுத்திவிட்டார்கள்.விஞ்ஞானிகள் கிராம மக்கள் சிலருக்கு
வேலை வாய்ப்புகிடைக்கும் என்று உறுயளித்திருக்கிறார்கள்.அதை பொறுத்து இருந்து தான்
பார்க்க வேண்டும்”
என்கிறார்
பொட்டிபுரம் பஞ்சாயத்துத் தலைவர் எம்.சுருளி அம்மாள்.2010 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப்
இண்டியா இதழில் இது வெளியாகியுள்ளது.
திரு. வை கோபால் சாமி அச்சுதானந்தனை
சந்தித்து இந்த திட்டம் வராமல் தடுக்கும் பொருட்டு பேசப்போகிறாராம்.திரு.அச்சுதானந்தன் அமெரிக்காவில் உள்ள ஓர் ஆய்வகத்தில் இருந்து
பொட்டி புரம்ஆய்வகத்திற்கு நியூட்டிரினோக்களைப் பீச்சி அடிக்கப் போகிறார்கள் என்று
பத்மநாபனைப் போல் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார்.வைகோ மிக கவனமாக தனது எதிர்ப்பு
அறிக்கையைக் கொடுத்துள்ளார்.அவர் நியூடட்ரினோ பற்றி அதிகம் பேசாமல் ஆய்வகம் அமைக்கும்
போது உண்டாகும் கழிவுகள், சுற்றுப்புற சுழல் பாதிப்பு ஆகியவை பற்றி கவலை தெரிவித்துள்ளார்.ஆய்வகம்
அமைய விருக்கும் இடத்தை போன்ற ஒரு வறண்ட பூமியில் ஒரு பள்ளியோ, கல்லூரியோ கட்டப்பட்டால் அப்போது கட்டக் கழிவுப் பொருள்கள் வராமல்
இருக்காது.அப்போது நாம் யாரும் சுற்றுப்புற சுழல் பாதிப்பு பற்றி பேசப்போவதில்லை.இந்த
ஆய்வகமும் ஒரு கல்லூரி போன்றது தான். இது அறிவைக் கொடுத்து மனித குலத்தின் வாழ்வை
ஏதோ ஒரு வகையில் வளப்படுத்த உதவத்தான் போகிறது.
விரிந்து
விண்மீன்களுக்கிடையே
படர்ந்து
நோக்கின்
சிறகு
குவிகிறது.
பிரபஞ்சத்தின்
சிறகு
குவிந்தால்
அணு...
என்பார்
பிரமிள். அவர் குறிப்பிடும் பிரபஞ்சத்தின்
சிறகுகளின் நுண்ணிய இறகுகளை அசைத்துக் கொண்டு நியூட்ரினோக்கள் பிரபஞ்சத்தின் பல்
வேறு மூலைகளில் இருந்து காலத்தின் தூதுவர்களாக பறந்து வருகின்றன.அவற்றை
வரவேற்காதீர்கள் என்று கூற நாம் யார்?
நன்றி : ஆழம் பிப்ரவரி 2015