Monday, February 8, 2010

புதுப்புனலில் துவாரகைதலைவன் கவிதை

உள்வெளி பறவை


- துவாரகை தலைவன்


திசைகளெல்லாம்
கூரிய பற்களாய் முளைத்த
சிறு பாறைகள் பரவி
நித்தம் வளரும்
நிழல் வெளி.


அளப்பரிய தூரம்
இடைவெளி யின்றி
ஒரு சீராய் அமைந்த
பாறை முனைகள்.
நெஞ்சினுள்ளே பாய்ந்த
விருப்பத்தின்
மின்னலொளி வீச்சில்
ஒவ்வொன்றும்
கொடிய வாளாய்
மின்னிச் சிரிக்கும்.

புல்வெளி வருடிய
காலை இளங்காற்றின் கரங்களாய்
அகப்பார்வை சுழன்று
தேக்கி வைத்த ஆசைகளை
ஒரு கணத்தில் முழுவதும்
கண்டு திரும்பிய
உள்ளப்பரப்பி லரும்பின
செந்நிறப்பனித் துளிகள்.

நெருக்கமாய்
நின்ற கற்கள்
சீவிச் செதுக்கிய
ஆனைத் தந்தங்கள்.
ஞாபகத்தின் பட்டாம்பூச்சி யொன்று
கொம்புகள் வளர்ந்த,
உள்ளத்தின் வெளி யெங்கும்
மிதக்கும்.

மண்ணிலிருந்து
இலைகளின்றி
வெறும் முட்கள்
முளைத்துள்ளன.
ஒரு பெரும் முள்ளி லமர்ந்த
வண்ணத்துப்பூச்சியின்
உணர்வுக் கொம்பு துளைக்க
முள் சற்றே வெடித்து கசிந்தது
நெருடல் மலர்களின் வாசம்.


தடித்த தோல் விலங்கின்
உடல் சிலிர்த்து நின்ற
ரோமங்கள்
வெளியின்
சிறு பாறைகள்.
விலங்கி னுடலான
மனவெளி
துள்ளி யசைந்து
தூக்கி யெறிய
தரையில் மோதி யெழும்
முதுகில் பயணித்த
உயிர்.

நெஞ்சினுள்ளே
மிதக்கு மிந்த
நிழல் வெளி.
கல் முனைகளின் மேல்
நிகழ்வில் தோய்ந்த
நினைவின் பாதங்கள்
மெல்ல நகர
ஆதங்கத்தின்
பற்களாலசை போடும்
மனித மனவெளி.