Wednesday, November 16, 2011

விருப்பத்தின் விழுதுகள்

நயகரா நீர் வீழ்ச்சி குதித்தெழும் பாதாளத் தரையைத் தொட்டு வருகிறோம்.பிரமிட்டின் பிரமாண்டத்தை அதன் முனையில் அமர்ந்த கழுகின் கண்வழியே பார்க்கிறோம்.உலகின் மிகப்பெரிய அதிசயம் அங்கெல்லாம் தென்படுமா?நிச்சயமாக தென்படாது.ஒன்றை கண்டு நாம் வியந்து கொண்டிருக்கும் போதே இயற்கையின் வேறொரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.மனிதனின் கைகள் ஒன்றை உருவாக்கி முடித்து விலகுவதற்குள் அதை விஞ்சும் ஒன்றின் நிழலை அவன் கையே வரைந்து வைத்து விடுகிறது.எனவே உண்மையான அதிசயம் வேறு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.அது உலகில் நாம் வரும் போது நம் உடன் வரும் ஆசைகள்.இது நம்மில் பலருக்கு வியப்பை தரலாம்.உலகில் மிக ஆபத்தானது கடலில் வாழும் ஒரு வகை நத்தை என்றால் நம்மால் நம்ப முடியவில்லை.அது ஒரு சில நொடிகளில் மனிதனின் உயிரை போக்க வல்ல கொடிய விஷம் கொண்டது.ஆனால் உலகில் மிக ஆபத்தானது என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வலிமையான பெரிய மிருகங்கள்தான்.அதே போல வியத்தகு ஒன்றை வெளி உலகில் காணும் நமக்கு நம்முள் இருக்கின்ற ஆச்சரியம் புலப்படுவதில்லை.நமது விருப்பங்கள் ஆழமானவை.அவையே உண்மையில் மிக அதிசயமானவை.பளிங்குக் கல்லால் கனவைச் செதுக்கி உருவாக்கிய தாஜ்மகால் ஓர் உலக அதிசயம் தான்.ஆனால் அதை கட்ட வைத்தது ஒரு மனிதனின் மிகப்பெரிய விருப்பம் தானே.



விருப்பங்கள் வெறுத்து ஒதுக்குவதற்கு உரியவை அல்ல.அவை போற்றுதலுக்கு உரியவை.அவையே உலகத்தை உருவாக்குகின்றன.அவையே உலகின் ஊடும் பாவுமாக உள்ளன.அவை நம்மை முழுமையாக வெளிபடுத்த உதவுகின்றன.நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் நம் ஆசைகளின் தாக்கம் இருக்கிறது.ஒரு செயலின் தொடக்கம் விருப்பத்தால் விளைகிறது.அது தொடர்வதற்கும் ஒரு பின்னடைவு ஏற்பட்டால் அதை எதிர் கொள்வதற்கும் ஊக்கம் பெறுவதற்கும் நம் விருப்பங்களே காரணமாக இருக்கின்றன.உலக இயக்கத்தின் உந்து சக்தியாக நம் ஆசைகள் இருக்கின்றன.மனித வாழ்வின் காரணத்தை அறிய இங்கே தான் ஆராய்ந்து தெளிவு பெற முயல வேண்டும்.எங்கிருந்து வந்தன என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியாத நம் விருப்பங்கள் தான் உண்மையில் மிகவும் அதிசயமானவை.அவை எப்படி நம்முள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்பது வியப்பாகவோ சில வேளை நெருடலாகவோ கூட இருக்கலாம்.ஆனால் உயிர் வாழ்வதற்கு காற்றை உடல் எப்படி ஏற்கிறதோ அதைப்போல நாம் நம் விருப்பங்களை ஏற்கிறோம்.மேலும் மனிதனின் குணங்களும் விருப்பங்களும் மரபணுக்களில் பதிவாகி இருப்பதால் நம் பிரயாசைகள் இயற்கையோடு நெருங்கிய தொடர்புடையவை என்பதை அறிகிறோம்.இயற்கையின் செயல்பாடுகள் பெரும்பாலும் சீரானவையே.சில சமயம் சூதாட்டம் போல தோன்றினாலும் கிடைத்த மாறுபாடுகளை வைத்துக் கொண்டு மேலும் ஒரு சீரான பாதையில் இயற்கை நகர முனைகிறது.பிரச்சனைகளுக்கான தீர்வை அது எப்போதும் தன்னுள்ளே வைத்திருக்கிறது.அது தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் ஆற்றலுடையது.இயற்கை தன் படைப்பில் ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் ஒரு தொடர்பையும் சார்புத் தன்மையையும் சேர்த்தே வைத்திருக்கிறது.ஆகவே நம் ஆசைகள் இயற்கையோடு மிக நெருங்கியவைகளாகவும் அர்த்தம் நிறைந்தவைகளாகவும் தென்படுகின்றன.இவை எங்கிருந்து இயங்குகின்றன?மனமே அவற்றின் ஆடு களமாக இருக்கிறது.மனம் என்பது நம் புலன்களின் வழியே செல்லும் நம் உயிரின் நீட்சியாகும்.மனிதன் உலகிற்கு வந்தவுடன் தன் புலன்களின் மூலம் கண்டும், கேட்டும், உணர்ந்தும், மனம் உருவாகிறது.அதற்கு பிறகு புலன்கள் ஒன்றை உணரும் போது மனம் அதை ஒப்பிட்டு வெட்டியும் ஒட்டியும் ஒரு பெரும் அமைப்பையே உருவாக்குகிறது.நமது ஆசைகள் விளையாடும் தளமாக மனம் இருக்கிறது.






பறவைக்கு வானம்


மீனுக்கு நீர்


ஆன்மாவுக்கு மனம்.






என்பார் பிரமிள்.மனம் நமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு நம்மை நடத்திச் செல்வதோடு நின்று விடுவதில்லை.நம் விருப்பங்களின் உண்மையான தன்மையையும் நமக்கு விரிவாக காட்டுகிறது.மனம் என்பது புரிந்து கொள்வதற்கு மிகவும் சிக்கலாக இருக்கும் ஒன்று.நமது ஆசைகள் அதை மேலும் சிக்கலான ஒன்றாக மாற்றுகின்றன.வான வில்லின் வண்ணங்கள் போல அவை இருக்கின்றன.ஒரு ஒளிக் கதிரில் இருந்து பல வண்ணங்கள் வெளிபடுவதைப் போல, நம்மில் இருந்து பல ஆசைகள் விரிகின்றன.மேலும் அவை நிறமாலையின் வண்ணங்களைப் போல ஒன்றோடு ஒன்று நெருங்கி சற்றே கலந்து காணப்படுகின்றன.அதாவது விருப்பங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைகளாக உள்ளன.சுருக்கமாகச் சொன்னால் விருப்பங்கள் ஒரு தொகுப்பாக இயங்குகின்றன.மேலும் ஒன்றை ஒன்று செம்மை படுத்திக் கொள்கின்றன.வானில் பயணிக்கும் பறவைக் கூட்டம் நெடுந்தொலைவு செல்கின்றன.ஒன்றாக சேர்ந்து பறப்பதோடு மட்டுமல்லாமல் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கின்றன.திடீரென தளர்ந்து போகின்ற பறவையின் மிக அருகே சில பறவைகள் வருகின்றன. சிறகசைப்பின் மூலம் நிறைய காற்றைத் தள்ளி அது தொடர்ந்து பயணிக்க உதவுகின்றன.அதைப் போலவே நம் விருப்பங்களின் தொகுப்பும் செயல்படுகிறது.


மனம் மாறும் இயல்புடையதாக இருப்பதால் அதன் தன்மையை சரியாக கணிப்பது கடினமானது.சில விருப்பங்கள் சில காலம் மறைந்திருந்தாலும் மீண்டும் தோன்றும் இயல்புடையன.ஒரு நண்பர் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்.அவர் ஒரு பெரிய வேலையில் சேர்ந்தார்.அவர் முழு ஈடுபாட்டுடன் பணியில் பல காலம் இருந்ததால் தான் ஒரு விளையாட்டு வீரர் என்பதையே மறந்து போனார்.சற்றும் எதிர்பாராமல் ஒரு நாள் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.என்ன ஆச்சரியம் அவர் எதையும் மறந்து விடவில்லை.அவருக்கே உரிய முனைப்புடன் திறமையை வெளிப்படுத்தி விளையாடினார்.அவராலேயே அதை நம்ப முடியவில்லை.உடலிலும் உள்ளத்திலும் பரவிய ஆர்வத்தின் வெள்ளம் இத்தனை காலம் எங்கே மறைந்திருந்தது?எனவே எந்த ஒரு விருப்பமும் மனிதனைவிட்டு முற்றிலுமாக சென்று விடுவதில்லை.


ஆசைகளில் தலையாய ஆசை எது?ஒரு மனிதனின் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் விழுமம் தான் அது என்று எளிதாக சொல்லி விட முடியாது.விழுமம் என்ற முதன்மை நோக்கம் உள்ளே ஒரு வேராக இருக்கிறது.இலக்கை அடைவதற்கான எரிபொருளை தொடர்ந்து தருகிறது.ஒரு மலைச் சிகரத்தை அடைவது ஒரு நபரின் கனவு.அதற்காக சிறப்புப் பயிற்சி பெற்று ஆர்வம் குன்றாமல் முயன்று இறுதியில் வெற்றி பெறுகிறார். அவர் தன் லட்சியத்தை அடைவதற்காக உணவையும், உறக்கத்தையும், தன் காதலையும் மறக்கலாம்.ஆனால் அவர் ஆசைகளெல்லாம் அதனால் அவரை விட்டு மறைந்து போய்விடவில்லை.இப்போது ஒரு சிறந்த பணியில் அவர் இருக்கிறார்.குடும்பத்தாரோடு சுற்றுப்பயணம் செல்கிறார்.தன் தோட்டத்தில் உள்ள வெவ்வேறு வகையான மலர்கள் தன் பல வகை ஆசைகளைப்போல இருப்பதை கண்டு ரசிக்கிறார்.அவர் உள்ளத்தின் மையத்தில் கனன்று கொண்டிருந்த முக்கிய நோக்கம் நிறைவேறிவிட்டது.ஆனால் அவர் நெஞ்சத்தை ஆசைகள் இன்னும் சூழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.எனவே மனிதனின் ஆசைகளுக்கெல்லாம் முதன்மையானதாக மட்டுமல்லாமல் அடிப்படை ஆசையாக ஒன்று இருக்க வேண்டும்.மேலும் எல்லா மனிதர்களுக்கும் ஒரு பெரிய விழுமம் ஆழ்மனதில் இருக்கவேண்டிய அவசியமில்லை.முழு மனித இனத்திற்கும் பொதுவானதாக அந்த முதன்மை ஆசை இருக்க வேண்டும். நம் விருப்பங்களின் பட்டியலை வைத்து கொண்டு அவற்றை நமக்கு நினைவுபடுத்தும் வேலையையும் செய்கின்ற ஒன்றாக அது ஏன் இருக்கக்கூடாது?பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளாய் நம் ஆசைகள் இருக்கின்றன.அவற்றை ஒருங்கிணைக்கும் ஒன்று நிச்சயமாக இருக்கவேண்டும். அதுவே நம் முதன்மை ஆசையாக இருக்கிறது.


நம் விருப்பங்கள் விழுதுகள் போல வளர்கின்றன.மண்ணில் வேர்விட்டு சில உறுதியானவைகளாக மாறுகின்றன.விழுதுகள் முளைத்த கிளைகளைக் கொண்ட மரம் முதன்மை ஆசையாக இருக்கிறது.அது எந்த விருப்பத்தையும் நீக்கி விடுவதில்லை.மரத்திலிருந்து தாதுப்பொருட்கள் பாய்ந்து விழுதுகளோடு அதன் தொடர்பு எப்போதும் தொடர்கிறது.விருப்பங்களின் தொகுப்பை வைத்திருக்கும் அது ஒவ்வொரு விருப்பதின் தனித்தன்மையையும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.பல்வேறு விருப்பங்களுடனான இந்த முதன்மை விருப்பதின் தொடர்பு மிக உறுதியானது.அதனால் தான் மறந்து போன விருப்பங்களெல்லாம் நிரந்தரமாக மறைந்து விடுவதில்லை.


மேலும் நம் பல்வேறு விருப்பங்கள் எப்போதும் மிதந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கின்றன.கையில் நிறைய கயிறுகளை பிடித்திருக்கிறோம்.அவை ஒவ்வொன்றின் முனையிலும் ஒரு பட்டம் பறக்கிறது.அவை பல்வேறு வண்ணமுள்ள பட்டங்கள்.அவை நம் வெவ்வேறு ஆசைகளை பிரதிபலிக்கின்றன.உயிர் நம் புலன்களின் வழியாக பட்டங்கள் போல பறந்து அவாவைப் பெருக்கி உள்ளத்தை உருவாக்குகிறது.பட்டங்கள் ஒவ்வொன்றையும் நாம் ரசிக்கிறோம்.எல்லாமே நமக்கு மகிழ்ச்சியை தருகின்றன.அனைத்தும் நமக்கு வேண்டும்.நாம் எதையும் இழக்கத் தயாராக இல்லை.அதனால் தான் நம் கரம் உறுதியாக கயிறுகளை பிடித்துக் கொண்டிருக்கிறது.பல்வேறு ஆசைகள் சேர்ந்து தான் நம் மனம் உருவாகி இருக்கிறது. அதே வேளையில் அவற்றில் எதுவும் நழுவிச்சென்று விடாமல் பிடித்து வைத்திருப்பதும் நம் மனதின் ஒரு பகுதிதான்.மனமே பலவண்ணப் பட்டங்களாக மிளிர்கிறது.அதுவே அவற்றை தொகுத்து வைத்திருக்கிறது.பொதுவாக மனம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டாலும் அதன் செயல்பாடுகள் நுட்பமான பல பகுதிகளிடையே நிகழ்கின்றன.அறியப்படாதவை நிறைய இருக்கின்றன.மனதின் தன்மைகளை மனதின் ஒரு பகுதியே தனியாக நின்று கவனித்து ஆய்வு செய்கிறது.அத்தகைய கவனிக்கின்ற மனதின் ஒரு பகுதி போன்றதே மற்ற ஆசைகளை யெல்லாம் பிடித்து வைத்திருக்கின்ற ஒர் ஆசை. ஆசைகளுக்கெல்லாம் ஆசையாக நம் முதன்மை ஆசையாக அது இருக்கிறது.இப்போது ஒரு சிறு ஐயம் எழுகிறது.ஆசைகளின் பட்டங்களை நாம் பறக்கவிடுகிறோமா அல்லது அவைகள் தான் நம்மை பட்டமாக காற்றில் மிதக்க விடுகின்றனவா?



Friday, August 12, 2011

ஒரிகமி


-துவாரகை தலைவன்

காகிதத்தில்
கற்பனை மடிப்புகள் விரிந்து
புதுப்புது உருவங்கள்
பார்வையாளர் உள்ளத்தில்
மிதக்கும்.
ஒரிகமி கலைஞனின்
மெல்லிய விரலழுத்தத்தில்
குதித்தெழுகின்றன
குதிரைகளும், பறவைகளும்.
ஒரே தாளில் தோன்றுகின்ற
வியத்தகு உருவங்களை
உள்ளத்தில் கசங்காமல் பதித்துக் கொண்ட மக்களின்
கரகோஷம்
அரங்கைக் குலுக்கியது.

சிந்தனையைக் கொட்டி விதைத்து
அறுவடை செய்யும் தாளில்
பொம்மைகள் செய்யும் பேதமை.
கணக்கிட்டு உருவாகும்
பதுப்புது வடிவங்களின் மடிப்புகளிலும்
ஒடுங்கிப் போகிறது அறிவு என்றது
விஞ்ஞான மூளை.

பக்கம் பக்கமாய்
இயற்கை எழுதி வைத்த
கற்படிவ நூலைப் புரட்டும் விஞ்ஞானி.
உறங்கும் குழந்தையின்
கன்னங்களை வருடும்
விரல் நுனியாய்
பல மில்லியன் வருடத் தூசியை அகற்றி,
சிதறிக் கிடக்கும்
புதையலை இணைத்து
முழு உருவத்தைக் கண்டுவிட
மீண்டும் அதன் மேல்
தூசியாய் படியும்
அவன் ஆழ்ந்த கவனம்.

கண்டெடுத்த பரிணாமச் சங்கிலி வளையங்களை
விரல்களில் கோத்து
கவனமாய் பதிவு செய்த
விஞ்ஞானியின் புத்தகப் பக்கங்களை
கிழித்தெறிகிறது
ஒரு குகையில் பல மில்லியன் ஆண்டுகளா
யுறங்கிக் கொண்டிருந்த விலங்கின்
விசித்திர அலகு.
இதுவரை பிடித்து ஏறி வந்த
கருதுகோள் சங்கிலி யறுந்து
குழப்பத்தின் இருட்குகையில் விழுந்தவனின்
ஆழ்ந்த உறக்கம்.

கனவின் காற்றில் பறக்கும்
அவன் கருதுகோள்கள்.
தன் புத்தகத்தை எப்போதும்
எழுதிப்படைப்பதில்லை
இயற்கை.
கற்பனை நகங்களால்
பக்கங்களைக் கிழித்து
உருவங்களைப் படைக்கும்
ஒரிகமி கலைஞனது.
படுக்கையறை முழுவதும்
பறக்கும் பொம்மைகள்.
உலகைக் காப்பாற்ற வந்த
சித்தாந்தங்கள்
இயற்கையின் கற்பனைப் படைப்புகளின் நகல்கள்.
உயிரை உருக்கி,
உலகம் தழைக்க உருவாக்கப்படும் அவைகள்
வெறும் எழுத்தாக இல்லாமல்
நடைமுறை பொம்மைகளில் ஏறி பயணிப்பவை.
விழித்தெழுந்த மேதை
தன் நாட்குறிப்பேட்டோடு,

ஒரு புதிய கற்படிவ பொம்மையை எழுப்பினான்
அதன் முதுகில் பயணிக்க…

Wednesday, May 25, 2011

லதா ராமகிருஷ்ணன் சிறப்புக் கட்டுரை

3-4- 2011 அன்று இக்ஸா அரங்கம், சென்னையில்

துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா - சில பகிர்வுகள்


லதா ராமகிருஷ்ணன்

கவிஞர் துவாரகை தலைவனின் முதல் கவிதைத்தொகுதி பீங்கானிழையருவி. பெயருக்கேற்றார்ப்போல் அடர்செறிவான வரிகளும், வரியிடை வரிகளுமாக அமைந்திருந்த இந்தக் கவிதைத் தொகுதி தமிழிலக்கியச் சூழலில் அதிக கவனம் பெறாமல் போனது வருத்தத்திற்குரியது. கவிதையோடு இலக்கியத்தின் வேறுபல பிரிவுகளிலும் கடந்த சில வருடங்களாக முனைப்பாக இயங்கிவரும் துவாரகை தலைவனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு – உள்வெளிப்பறவைகள் மற்றும் கட்டுரைத் தொகுப்பு எழுதிச்செல்லும் நிகழ் கணங்கள் ஆகிய இரு நூல்களும் புதுப்புனல் வெளியீடாக சமீபத்தில் பிரசுரமாகியுள்ளன.
கடந்த 3.4.2011 அன்று சென்னை எழும்பூரிலுள்ள இக்ஸா மையத்தில் புதுப்புனல் சார்பாக வெளியீட்டு விழா நடந்தேறியது. முதலில் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. நூலை பூமா ஈசுவரமூர்த்தி வெளியிட கிருஷாங்கினி பெற்றுக்கொண்டார். கவிஞர் பூமா ஈசுவரமூர்த்தி, கவிஞர் ரிஷி(யாகிய நான்!) கவிஞர் கிருஷாங்கினி ஆகியோர் துவாரகை தலைவனின் கவிதைகள் குறித்த தங்களுடைய பார்வைகளை முன்வைத்தனர். இந்தத் தொகுப்பு குறித்து பேசிய கவிஞர் பூமா ஈசுவரமூர்த்தி இந்த வருடத் துவக்கத்திலிருந்து புத்தக்ச் சந்தை வழியாக நம்பிக்கையூட்டும் கவிதைத் தொகுப்புகளைப் பெற முடிந்ததாகத் தெரிவித்தார். ஸ்ரீநேசன், பெருந்தேவி, சுகிர்தராணி, கடற்கரை என சிலருடைய கவிதைத் தொகுப்புகளைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டியவர் துவாரகை தலைவனின் கவிதைத் தொகுப்பு நம்முடைய ’பெர்சனல் லைப்ரரி’யில் இடம்பெறத் தக்க ஒன்று’ என்றார். இந்தத் தொகுப்பு குறித்து முக்கியமாகச் சொல்லவேண்டிய விஷயம் இதில் ஆருடைய சாயலும் இல்லை; இது அரிய அம்சம் என்றார்.
துவாரகை தலைவனின் கவிதைகளில் உறவுமுறை குறித்த புகார்கள், புளகாங்கிதங்கள் அதிகமில்லை என்ற பூமா ஈசுவரமூர்த்தி வண்ணத்துப்பூச்சி, சர்ப்பம் ஆகிய பொதுப்படையான சொற்பிரயோகங்கள் இவருடைய கவிதைகளில் அதிகம் இருக்கின்றன, எனில் இப்படிப் பொதுமைப்படுத்தல் சரியல்ல என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும், இரண்டாயிரம் வருடங்கள் பாரம்பரியமுள்ள தமிழில் கவிதை புனையும் போது அதிகம் பயன்படுத்தப்பட்டு நைந்துபோன சொற்களையே நாமும் பயன்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும். இது நவீன கவிதைக்கு மிகவும் இன்றியமையாத அம்சம் என்றார்.

“படிமம் இருந்தால் சமூகம் இருக்காது, இருண்மை தான் இருக்கும் என்ற குற்றச்சாட்டைஇவரும் உடைத்திருக்கிறார்”, என்று ‘உம்’இல் அழுத்தம் தந்து குறிப்பிட்ட கிருஷாங்கினி துவாரகை தலைவனின் கவிதைகளில் உள்ள சமூகப் பார்வையை எடுத்துக்காட்டினார். “படிமத்தை நமக்குள் வசப்படுத்துவது யானையைக் கட்டிப்போடுவதைப் போன்றது. ஏனெனில், படிமம் பிரம்மாண்டமானது. கயிறால் கட்டுவதும், சங்கிலியால் கட்டுவதும் நம் கையில் தான் உள்ளது. இத்தகைய நுண்மையான படிமங்களை துவாரகை தலைவன் நேர்த்தியாகக் கையாண்டுள்ளார் என்று தகுந்த எடுத்துக்காட்டுகளோடு சுட்டிக்காட்டினார்.
ரிஷி: துவாரகை தலைவனின் கவிதைகளில் ஒரு நுட்பமான மனமும், அதன் தேடலும், கவிஞனின் ஆழ்ந்த வாசிப்பும் புலப்படுகிறது என்றே உணர்கிறேன். கவிதைகளுக்கெனத் தெரிவு செய்திருக்கும் வார்த்தைகளின் நயமும், ஆழமும் நிறைவான வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக, உள்நோக்கு’ என்ற தலைப்பிட்ட கவிதையின் ஆரம்பப் பத்தியைச் சுட்டலாம்:

தெளிந்த நீரோடையில்
தவறி விழுந்த சிறு கண்ணாடி
அசைந்து அசைந்து
கீழே கொண்டு செல்கிறது
பிரதிபலித்த முகத்தை

இந்த முழுக்கவிதையும் அடர்செறிவானது என்பது குறிப்பிடத்தக்கது. முறைமைகள் என்ற கவிதை தற்காலத்தைய தொழில்நுட்ப மனிதனைப் பற்றிப் பேசும் நுட்பமான கவிதை. கலைவழி, இருமையின் முகம், விலைப் பொருள்கள் என ‘உள்வெளிப் பறவைத் தொகுப்பில் பல குறிப்பிடத்தக்க கவிதைகளைச் சுட்ட முடியும். கவிதைகளில் பல ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தசாத்தியப்பாடுகளைக் கொண்டிருப்பதால் வாசகப் பங்கேற்பிற்கு வழியிருக்கிறது.
துவாரகைத் தலைவனின் கட்டுரைத்தொகுதியான ‘எழுதிச் செல்லும் நிகழ்கணங்கள்’ குறித்து வெளி ரங்கராஜன் விரிவான உரையாற்றினார். (அது இந்த மாத புதுப்புனல் இதழில் வெளியாகியிருக்கிறது). ”துவாரகைத் தலைவனின் இந்த கட்டுரைத் தொகுப்பில் பிரபஞ்ச இயக்கம் பற்றியும், மனித இருப்பின் அடிப்படையான உந்துதல்கள் பற்றியும் ஒரு புரிதலுக்காகவும், தெளிவுக்காகவும் சில பார்வைகளை முன்வைக்கிறார். வாழ்வின் பொருள் அதன் இயக்கம் தான் என்பதையும், அது நம்மிடமிருந்து தான் தொடங்குகிறது என்பதையும் அதன் மையம், புதிர், விடை எல்லாம் நாம் தான் என்பதையும் வலியுறுத்துகிறார். மனித விழைவுகள், லட்சியம், ஆவல், மகிழ்ச்சி, துயர், சமநிலை எல்லாம் பல்வேரு முரண்பாடுகளுக்குள் ஊசலாடிக் கொண்டிருப்பதையும், எந்த நிலைமையும் இறுதியானதல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் துவாரகை தலைவன்” என ஆரம்பித்து இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் எளிமைப்படுத்தல்களையும், பொதுமைப்படுத்தல்களையும் தாண்டி இன்று நாம் ஒரு சிக்கலான வாழ்வுமுறைக்குள் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.சுலபமான தீர்வுகளற்று ரகசிய துயரங்களால் பீடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அவைகளுடன் உரையாடுவதற்கு இன்று நமக்கு ஒரு பிரத்யேகமான மொழியும், தொனியும் அவசியமானதாக இருக்கிறது”, என்று சுட்டிக்காட்டி, ’எந்தவொரு கருத்தையும், பார்வையையும் முடிந்த முடிவாக ஒரு தீர்மானமான தொனியில் வைத்தல் சரியல்ல. மாறாக, நம்முடைய சூழலின் சிக்கல்களை நெகிழ்வுத்தன்மையுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு படைப்புமொழியே நமக்கு நெருக்கமானதாக இருக்கும்’ என்று தன் மென் தொனியில் அழுத்தமாக எடுத்துரைத்தார் வெளி ரங்கராஜன்.
எழுத்தாளர் தனது ஏற்புரையில் தனது கட்டுரைகள் குறித்தும், கவிதைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். ‘பறவை என்பது விடுதலையின் குறியீடு; அது பறக்கையில் புதுமைகளை இறைக்கிறது. எனவே, விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவியைப் போல என்பதே மனித இனத்தின் மிகப்பெரிய தேடல்’ என்றார் அவர். ‘கலை என்பது மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்காகத் தான். அதே சமயம் கவிஞன் எப்படிக் கவிதையில் தன்னை இழந்துபோகிறான் என்பதையும் நாம் கவனங்கொள்ள முடியும்’ என்று கவிஞர் துவாரகை தலைவன் குறிப்பிட்டது சிந்திக்கத்தக்கது.
இங்கே துவாரகை தலைவனின், கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் தரப்பட்டுள்ளன.
துவாரகை தலைவனின் கவிதைகள் சில

1.முழுமை

அலைகளை வீசி
ஓய்வற்றிருக்கிறது
ஒரு கடல்.
எல்லாம் தன்னகத்தே வைத்து
விரிந்து பரவி
அசைவற்றுக் கிடக்கும்
மற்றொரு கடல்
முழு வானத்தையும்
வெறித்துப் பார்த்து
படம் பிடிக்கிறது.
அனைத்தும் கொண்ட
அதனோடு
இப்போது ஒரு வானம்.

2. அறிதலுக்கு அப்பால்

விதைச்சொல் விழும்
சட்டைப் பையில்
பத்திரமாய்…
நெஞ்சோடு உறுத்தியும்
மண்ணில் புதைக்கப்பட்டாலும்
பயனில்லை.
உள்ளம் குவிந்து
வித்துள் பாய
விளைவது - ஓர்
ஆகாயம்.

3.வாழ்க்கை

உன் மீது
கல்லெறிகிறேன்.
மீண்டும் ஒரு
கல்லை வீசுகிறேன்.
நீ எரிச்சலடைகிறாய்.
தொடர்ந்து உன் மீது
கல் வீசுவேன்.
உன் காலடியில் இருக்கும்
தங்கக்காசை
நீ பார்க்கும் வரை.

4.காலத் தொடக்கம்

முதல் வெளிச்சத்தின்
சிதறும் சிரிப்பில்
இருளுக்கொரு
பெயர் கிடைக்கும்.
வெடிப்பின் பக்கங்களில்
இருள் வரையும்
ஒளியின் படம்.
பரந்த வெளி யோவியத்தைச்
சுருக்கி உறிஞ்சிய தூரிகை
மீண்டும் வைத்த புள்ளியாய்
முதல் மனிதனின்
பிரக்ஞை.

5.உள் நோக்கு

தெளிந்த நீரோடையில்
தவறி விழுந்த சிறு கண்ணாடி
அசைந்து அசைந்து
கீழே கொண்டு செல்கிறது
பிரதிபலித்த முகத்தை.
நெருடும் அனுபவத்தின்
பல முகங்கள்
தண்ணீரின் மேலே
நெளிந்து செல்கின்றன.
நிழல்களைக் கழுவிச் செல்லும்
ஓட்டம்
புதுப்புது வடிவம் காட்டி
உடன் மாற்றுவதெல்லாம்
நீரின் மேல் திரையில் நடப்பவை.
தரையில்,
கண்ணாடி கொண்ட உண்மை முகம் காண
உரசிப் போகும்
நீர்ப்பாளங்களைத் தாண்டி
உள்ளே செல்கிறது பார்வை.
நீரில் உருண்டு வந்த கல் விழுந்து
உடைந்த மனக் கண்ணாடியின் மேல்
வாழ்வின் சமாதானக் கீறல்கள்.
அவற்றையும் தாண்டி
இன்னும் நம்பிக்கையோடு தேடும்
ஆழ்ந்த கட்புலனுக்கு அகப்படாமல்
தொடர்ந்து நழுவுகிறது சுயம்.

6.முறைமைகள்

அழகிய கோப்பைகளில்
குதித்துப் பொங்குகிறது
மகிழ்ச்சியினலை.
அதிநவீன உலகின்
இயந்திர விளை நிலத்தில்
சொர்க்கத்தின் வேர்களான
மாபெரும் திட்டங்களைப் பதிக்கும்
சிந்தனைக் கரங்கள்.
ஒன்றாய்ச் சேரும்
மெல்லிய கோப்பைகளின் மோதலில் எழும்
மனித குலத்தின் சிரிப்பு.
கணினியின் கீபோர்டில்
நடனமாடும் விரல்கள்
அதிநுட்பமாக
எதிர்கால வளர்ச்சியின் நிறங்களைத் தொட்டு வரையும்
ஓவியமாய்,
வெவ்வேறு நிர்வாக முறைமைகள்.
கட்டமைப்புச் சட்டங்களுக்குள்
பொருத்தப் பட்ட படத்தின் கோடுகள்
ராட்சதப் பாலங்களாய் எழும்.
மரத்தில் தெரியும்
பூக்களெல்லாம் வாகனங்களாய்
மகிழ்ச்சியை மட்டும்
அள்ளிக் கொண்டு
சாலைகளில் பறக்கும்.
காலத்தின் வேகம்
பொன்னொளியாய் கார்களின்
கண்ணாடிகளைத் தழுவிச் செல்லும்.
மனித குலத் தேவைகளாய்,
ஆராய்ந்து வார்த்தெடுத்த
சிறு உதிரிப்பொருட்கள்.
அனைத்தும் சோல்டர் செய்து
உருவாகிற பெரும்
சர்க்யூட் போர்டாக விரியும்
எண்ணிலடங்காத் துறைகள்.
படைப்பாற்றல் ஒளிர
மில்லி ஓல்ட் மின்சாரமாய்
இணைப்புகளில் பாயும்
மனித மூளை படைத்த
நவீன முறைமைகள்.
கட்டமைப்புகளுக்குள்
நிற்காமல் எங்கும் நுழைந்துலவும்
ராட்சதக் கரங்களாய்
மனிதனின் நிர்வாக முறைமைகள்.
உலகை உருவாக்கும்
ஒவ்வொரு செங்கலிலும்
முறைமை பதிக்கும்
ராஜமுத்திரை.
சோர்வற்ற மூளை உழைப்பின்
வெப்பம் மிதக்கும்
உலோகக் குழம்பின் வார்ப்புகள்.
அறிவாற்றலின் கற்பனை இணைப்புக ளசையும்
நிர்வாக முறைமைகளின்
இயந்திரக்கரங்கள்.
மனிதன் வகுத்த முறைமையின்
இயந்திரக்கரம்
ஒவ்வொரு சிறு பொருளையும்
எடைபார்த்து உருவாக்கும்
வாழ்வின் வசதிகளில்
எப்போதும் ஒரு மெல்லிய
இரும்பு மணம்.
மற்றொரு கரம் நீண்டு
மனிதனை சற்றே நெருங்கி வர
மனித உணர்வில் துளிர்க்கும்
கண்ணீர்த் துளியின்
கரிப்பை அக்கறையோடு ருசிக்கும்
இயந்திர விரல்நுனி.
சிறு கண்ணாடிக் கோப்பையின் சுவராய்
மனிதனின் மெல்லிய இயல்பான உணர்வுகள்.
விரித்து வைத்த இதயமான
பலகையின் மேல்
கண்ணீர்த் துளிகளைப் பதித்து
ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி வைத்த
கண்ணாடிக் கோப்பைகளின்
கோபுரம்.
முறைமையின் இரக்கம் நிறைந்த
ஓர் இயந்திரக் கரத்தின்
சமநிலையில் அசையும் கலையழகு.
ஒன்றோடு ஒன்று தொட்டபடி யிருக்கும்
கோப்பைகளின்
ஓரங்களின் வழியே செல்லும்
புவியீர்ப்பு விசையாக
சமுதாய விழுமங்கள்.
வாழ்வின் வசதிகளை
அள்ளி வழங்க
மேலும் மேலும் செம்மையாகும்
முறைமையின் முதன்மையான இயந்திரக்கரம்
சுழன்று வரும் வேகத்தில்
மற்றொரு கரத்தில் நின்ற
மெல்லிய உணர்வுக் கோப்பைகளின்
கோபுரத்தை யுரசும்.
உணர்வுகள் நிரம்பித் ததும்பும்
இதயங்களான கோப்பைக ளசைந்து
காற்றில் மிதந்து சுழல
சரியும் கோபுரம்.
மழுங்கிப் போன மனித நேயம்
முற்றிலும் நொறுங்காமல்
பிடித்து விட மின்னலாய்ப் பாயும்
இயந்திர விரல்களின் இறுக்கத்தில்
விழுவதற்கு முன்னே
தூளாகும் கோப்பைகள்.

துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா

உள்வெளிப் பறவை

கவிதை நூல் வெளியீடு

Saturday, January 1, 2011

ஆர்வத்தின் விழுக்காடு


- துவாரகை தலைவன்

அறியாமை தோள் துண்டின் கீழே
புதிதாய் அறிமுகமாகும் இரு கரங்கள்.
விரல்கள் துழாவி
சுயமரியாதை நசுங்கிச் சாக
நடக்கும் வியாபாரம்.

நாட்கள் சில சென்றாலும்
கைகளில் இன்னும் மணக்கும்
புதிய நோட்டுகள்.

தொட்டால் நொறுங்கி விழும்
மலிவான எண்ணங்களைக்
காட்டிச் சிரிக்கும்
துளைகள் விழுந்த
வீட்டுக் கூரை.
எங்கோ ஒரு மூலையில்
இன்னும் சிறிது ஒட்டிக் கொண்டிருக்கும்
விவஸ்தையாய் கூரையில்
செருகி வைக்கப்பட்ட
கோழியிறகு
காதைக் குடைந்து
தூக்கி யெறிய
குப்பையோடு சேரும்.

காத்திருந்த நாளும் வர
முன்னமே எற்பட்ட
வலுவான நல்லுறவின் அடையாளமாய்
குஷ்டரோகியின் துணி மூடிய கையில்
விரல்கள் இருப்பதாய்
கற்பனை கைகுலுக்கும்.
அக்கரம் பற்றி
குனிந்து இட்ட முத்தமானது
ஓட்டு இயந்திரத்தின் பொத்தான் மேல்
சுட்டு விரலி னழுத்தம்.

கட்டுகளைத் தாண்டி கொட்டுகிறது
வாக்காளர் ஆர்வம்.