Wednesday, November 16, 2011

விருப்பத்தின் விழுதுகள்

நயகரா நீர் வீழ்ச்சி குதித்தெழும் பாதாளத் தரையைத் தொட்டு வருகிறோம்.பிரமிட்டின் பிரமாண்டத்தை அதன் முனையில் அமர்ந்த கழுகின் கண்வழியே பார்க்கிறோம்.உலகின் மிகப்பெரிய அதிசயம் அங்கெல்லாம் தென்படுமா?நிச்சயமாக தென்படாது.ஒன்றை கண்டு நாம் வியந்து கொண்டிருக்கும் போதே இயற்கையின் வேறொரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.மனிதனின் கைகள் ஒன்றை உருவாக்கி முடித்து விலகுவதற்குள் அதை விஞ்சும் ஒன்றின் நிழலை அவன் கையே வரைந்து வைத்து விடுகிறது.எனவே உண்மையான அதிசயம் வேறு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.அது உலகில் நாம் வரும் போது நம் உடன் வரும் ஆசைகள்.இது நம்மில் பலருக்கு வியப்பை தரலாம்.உலகில் மிக ஆபத்தானது கடலில் வாழும் ஒரு வகை நத்தை என்றால் நம்மால் நம்ப முடியவில்லை.அது ஒரு சில நொடிகளில் மனிதனின் உயிரை போக்க வல்ல கொடிய விஷம் கொண்டது.ஆனால் உலகில் மிக ஆபத்தானது என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வலிமையான பெரிய மிருகங்கள்தான்.அதே போல வியத்தகு ஒன்றை வெளி உலகில் காணும் நமக்கு நம்முள் இருக்கின்ற ஆச்சரியம் புலப்படுவதில்லை.நமது விருப்பங்கள் ஆழமானவை.அவையே உண்மையில் மிக அதிசயமானவை.பளிங்குக் கல்லால் கனவைச் செதுக்கி உருவாக்கிய தாஜ்மகால் ஓர் உலக அதிசயம் தான்.ஆனால் அதை கட்ட வைத்தது ஒரு மனிதனின் மிகப்பெரிய விருப்பம் தானே.



விருப்பங்கள் வெறுத்து ஒதுக்குவதற்கு உரியவை அல்ல.அவை போற்றுதலுக்கு உரியவை.அவையே உலகத்தை உருவாக்குகின்றன.அவையே உலகின் ஊடும் பாவுமாக உள்ளன.அவை நம்மை முழுமையாக வெளிபடுத்த உதவுகின்றன.நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் நம் ஆசைகளின் தாக்கம் இருக்கிறது.ஒரு செயலின் தொடக்கம் விருப்பத்தால் விளைகிறது.அது தொடர்வதற்கும் ஒரு பின்னடைவு ஏற்பட்டால் அதை எதிர் கொள்வதற்கும் ஊக்கம் பெறுவதற்கும் நம் விருப்பங்களே காரணமாக இருக்கின்றன.உலக இயக்கத்தின் உந்து சக்தியாக நம் ஆசைகள் இருக்கின்றன.மனித வாழ்வின் காரணத்தை அறிய இங்கே தான் ஆராய்ந்து தெளிவு பெற முயல வேண்டும்.எங்கிருந்து வந்தன என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியாத நம் விருப்பங்கள் தான் உண்மையில் மிகவும் அதிசயமானவை.அவை எப்படி நம்முள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்பது வியப்பாகவோ சில வேளை நெருடலாகவோ கூட இருக்கலாம்.ஆனால் உயிர் வாழ்வதற்கு காற்றை உடல் எப்படி ஏற்கிறதோ அதைப்போல நாம் நம் விருப்பங்களை ஏற்கிறோம்.மேலும் மனிதனின் குணங்களும் விருப்பங்களும் மரபணுக்களில் பதிவாகி இருப்பதால் நம் பிரயாசைகள் இயற்கையோடு நெருங்கிய தொடர்புடையவை என்பதை அறிகிறோம்.இயற்கையின் செயல்பாடுகள் பெரும்பாலும் சீரானவையே.சில சமயம் சூதாட்டம் போல தோன்றினாலும் கிடைத்த மாறுபாடுகளை வைத்துக் கொண்டு மேலும் ஒரு சீரான பாதையில் இயற்கை நகர முனைகிறது.பிரச்சனைகளுக்கான தீர்வை அது எப்போதும் தன்னுள்ளே வைத்திருக்கிறது.அது தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் ஆற்றலுடையது.இயற்கை தன் படைப்பில் ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் ஒரு தொடர்பையும் சார்புத் தன்மையையும் சேர்த்தே வைத்திருக்கிறது.ஆகவே நம் ஆசைகள் இயற்கையோடு மிக நெருங்கியவைகளாகவும் அர்த்தம் நிறைந்தவைகளாகவும் தென்படுகின்றன.இவை எங்கிருந்து இயங்குகின்றன?மனமே அவற்றின் ஆடு களமாக இருக்கிறது.மனம் என்பது நம் புலன்களின் வழியே செல்லும் நம் உயிரின் நீட்சியாகும்.மனிதன் உலகிற்கு வந்தவுடன் தன் புலன்களின் மூலம் கண்டும், கேட்டும், உணர்ந்தும், மனம் உருவாகிறது.அதற்கு பிறகு புலன்கள் ஒன்றை உணரும் போது மனம் அதை ஒப்பிட்டு வெட்டியும் ஒட்டியும் ஒரு பெரும் அமைப்பையே உருவாக்குகிறது.நமது ஆசைகள் விளையாடும் தளமாக மனம் இருக்கிறது.






பறவைக்கு வானம்


மீனுக்கு நீர்


ஆன்மாவுக்கு மனம்.






என்பார் பிரமிள்.மனம் நமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு நம்மை நடத்திச் செல்வதோடு நின்று விடுவதில்லை.நம் விருப்பங்களின் உண்மையான தன்மையையும் நமக்கு விரிவாக காட்டுகிறது.மனம் என்பது புரிந்து கொள்வதற்கு மிகவும் சிக்கலாக இருக்கும் ஒன்று.நமது ஆசைகள் அதை மேலும் சிக்கலான ஒன்றாக மாற்றுகின்றன.வான வில்லின் வண்ணங்கள் போல அவை இருக்கின்றன.ஒரு ஒளிக் கதிரில் இருந்து பல வண்ணங்கள் வெளிபடுவதைப் போல, நம்மில் இருந்து பல ஆசைகள் விரிகின்றன.மேலும் அவை நிறமாலையின் வண்ணங்களைப் போல ஒன்றோடு ஒன்று நெருங்கி சற்றே கலந்து காணப்படுகின்றன.அதாவது விருப்பங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைகளாக உள்ளன.சுருக்கமாகச் சொன்னால் விருப்பங்கள் ஒரு தொகுப்பாக இயங்குகின்றன.மேலும் ஒன்றை ஒன்று செம்மை படுத்திக் கொள்கின்றன.வானில் பயணிக்கும் பறவைக் கூட்டம் நெடுந்தொலைவு செல்கின்றன.ஒன்றாக சேர்ந்து பறப்பதோடு மட்டுமல்லாமல் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கின்றன.திடீரென தளர்ந்து போகின்ற பறவையின் மிக அருகே சில பறவைகள் வருகின்றன. சிறகசைப்பின் மூலம் நிறைய காற்றைத் தள்ளி அது தொடர்ந்து பயணிக்க உதவுகின்றன.அதைப் போலவே நம் விருப்பங்களின் தொகுப்பும் செயல்படுகிறது.


மனம் மாறும் இயல்புடையதாக இருப்பதால் அதன் தன்மையை சரியாக கணிப்பது கடினமானது.சில விருப்பங்கள் சில காலம் மறைந்திருந்தாலும் மீண்டும் தோன்றும் இயல்புடையன.ஒரு நண்பர் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்.அவர் ஒரு பெரிய வேலையில் சேர்ந்தார்.அவர் முழு ஈடுபாட்டுடன் பணியில் பல காலம் இருந்ததால் தான் ஒரு விளையாட்டு வீரர் என்பதையே மறந்து போனார்.சற்றும் எதிர்பாராமல் ஒரு நாள் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.என்ன ஆச்சரியம் அவர் எதையும் மறந்து விடவில்லை.அவருக்கே உரிய முனைப்புடன் திறமையை வெளிப்படுத்தி விளையாடினார்.அவராலேயே அதை நம்ப முடியவில்லை.உடலிலும் உள்ளத்திலும் பரவிய ஆர்வத்தின் வெள்ளம் இத்தனை காலம் எங்கே மறைந்திருந்தது?எனவே எந்த ஒரு விருப்பமும் மனிதனைவிட்டு முற்றிலுமாக சென்று விடுவதில்லை.


ஆசைகளில் தலையாய ஆசை எது?ஒரு மனிதனின் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் விழுமம் தான் அது என்று எளிதாக சொல்லி விட முடியாது.விழுமம் என்ற முதன்மை நோக்கம் உள்ளே ஒரு வேராக இருக்கிறது.இலக்கை அடைவதற்கான எரிபொருளை தொடர்ந்து தருகிறது.ஒரு மலைச் சிகரத்தை அடைவது ஒரு நபரின் கனவு.அதற்காக சிறப்புப் பயிற்சி பெற்று ஆர்வம் குன்றாமல் முயன்று இறுதியில் வெற்றி பெறுகிறார். அவர் தன் லட்சியத்தை அடைவதற்காக உணவையும், உறக்கத்தையும், தன் காதலையும் மறக்கலாம்.ஆனால் அவர் ஆசைகளெல்லாம் அதனால் அவரை விட்டு மறைந்து போய்விடவில்லை.இப்போது ஒரு சிறந்த பணியில் அவர் இருக்கிறார்.குடும்பத்தாரோடு சுற்றுப்பயணம் செல்கிறார்.தன் தோட்டத்தில் உள்ள வெவ்வேறு வகையான மலர்கள் தன் பல வகை ஆசைகளைப்போல இருப்பதை கண்டு ரசிக்கிறார்.அவர் உள்ளத்தின் மையத்தில் கனன்று கொண்டிருந்த முக்கிய நோக்கம் நிறைவேறிவிட்டது.ஆனால் அவர் நெஞ்சத்தை ஆசைகள் இன்னும் சூழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.எனவே மனிதனின் ஆசைகளுக்கெல்லாம் முதன்மையானதாக மட்டுமல்லாமல் அடிப்படை ஆசையாக ஒன்று இருக்க வேண்டும்.மேலும் எல்லா மனிதர்களுக்கும் ஒரு பெரிய விழுமம் ஆழ்மனதில் இருக்கவேண்டிய அவசியமில்லை.முழு மனித இனத்திற்கும் பொதுவானதாக அந்த முதன்மை ஆசை இருக்க வேண்டும். நம் விருப்பங்களின் பட்டியலை வைத்து கொண்டு அவற்றை நமக்கு நினைவுபடுத்தும் வேலையையும் செய்கின்ற ஒன்றாக அது ஏன் இருக்கக்கூடாது?பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளாய் நம் ஆசைகள் இருக்கின்றன.அவற்றை ஒருங்கிணைக்கும் ஒன்று நிச்சயமாக இருக்கவேண்டும். அதுவே நம் முதன்மை ஆசையாக இருக்கிறது.


நம் விருப்பங்கள் விழுதுகள் போல வளர்கின்றன.மண்ணில் வேர்விட்டு சில உறுதியானவைகளாக மாறுகின்றன.விழுதுகள் முளைத்த கிளைகளைக் கொண்ட மரம் முதன்மை ஆசையாக இருக்கிறது.அது எந்த விருப்பத்தையும் நீக்கி விடுவதில்லை.மரத்திலிருந்து தாதுப்பொருட்கள் பாய்ந்து விழுதுகளோடு அதன் தொடர்பு எப்போதும் தொடர்கிறது.விருப்பங்களின் தொகுப்பை வைத்திருக்கும் அது ஒவ்வொரு விருப்பதின் தனித்தன்மையையும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.பல்வேறு விருப்பங்களுடனான இந்த முதன்மை விருப்பதின் தொடர்பு மிக உறுதியானது.அதனால் தான் மறந்து போன விருப்பங்களெல்லாம் நிரந்தரமாக மறைந்து விடுவதில்லை.


மேலும் நம் பல்வேறு விருப்பங்கள் எப்போதும் மிதந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கின்றன.கையில் நிறைய கயிறுகளை பிடித்திருக்கிறோம்.அவை ஒவ்வொன்றின் முனையிலும் ஒரு பட்டம் பறக்கிறது.அவை பல்வேறு வண்ணமுள்ள பட்டங்கள்.அவை நம் வெவ்வேறு ஆசைகளை பிரதிபலிக்கின்றன.உயிர் நம் புலன்களின் வழியாக பட்டங்கள் போல பறந்து அவாவைப் பெருக்கி உள்ளத்தை உருவாக்குகிறது.பட்டங்கள் ஒவ்வொன்றையும் நாம் ரசிக்கிறோம்.எல்லாமே நமக்கு மகிழ்ச்சியை தருகின்றன.அனைத்தும் நமக்கு வேண்டும்.நாம் எதையும் இழக்கத் தயாராக இல்லை.அதனால் தான் நம் கரம் உறுதியாக கயிறுகளை பிடித்துக் கொண்டிருக்கிறது.பல்வேறு ஆசைகள் சேர்ந்து தான் நம் மனம் உருவாகி இருக்கிறது. அதே வேளையில் அவற்றில் எதுவும் நழுவிச்சென்று விடாமல் பிடித்து வைத்திருப்பதும் நம் மனதின் ஒரு பகுதிதான்.மனமே பலவண்ணப் பட்டங்களாக மிளிர்கிறது.அதுவே அவற்றை தொகுத்து வைத்திருக்கிறது.பொதுவாக மனம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டாலும் அதன் செயல்பாடுகள் நுட்பமான பல பகுதிகளிடையே நிகழ்கின்றன.அறியப்படாதவை நிறைய இருக்கின்றன.மனதின் தன்மைகளை மனதின் ஒரு பகுதியே தனியாக நின்று கவனித்து ஆய்வு செய்கிறது.அத்தகைய கவனிக்கின்ற மனதின் ஒரு பகுதி போன்றதே மற்ற ஆசைகளை யெல்லாம் பிடித்து வைத்திருக்கின்ற ஒர் ஆசை. ஆசைகளுக்கெல்லாம் ஆசையாக நம் முதன்மை ஆசையாக அது இருக்கிறது.இப்போது ஒரு சிறு ஐயம் எழுகிறது.ஆசைகளின் பட்டங்களை நாம் பறக்கவிடுகிறோமா அல்லது அவைகள் தான் நம்மை பட்டமாக காற்றில் மிதக்க விடுகின்றனவா?



No comments:

Post a Comment