Monday, May 31, 2010

முழுமை என்றொரு கனவு

முழுமை என்பது ஓர் ஒப்பற்ற கனவு.எல்லாம் கொண்ட மொத்தம் முழுமை என்று சொல்லப்படுகிறது.ஏதாவது ஒன்றை உள்ளும் புறமும் உணர்ந்து முழுமையை கண்டுவிட நினைக்கிறார்கள். அறிவின் எல்லா கதவுகளையும் திறந்து வைத்து அதனை அடைந்துவிட முனைபவர்கள் பலர்.முழுமைக்கு எந்த ஒரு இலக்கணம் சொல்லப்பட்டாலும் அதனை மீறி நிற்பதாக அது இருக்கிறது.எனவே அது கனவாகவே தொடர்கிறது.அறிவின் பெருக்கத்தில் அது அகப்பட மறுக்கிறது.முழுமையை அடைவது கரை காணுதல் என்று கொண்டால் அது அறிதலின் வெள்ளத்தில் விரும்பி மோதித் திளைத்து அடைய நினைக்கும் இலக்கு.அதன் எல்லை விரிந்து கொண்டே செல்வது.இதனை வெகுவிரைவிலேயே ஆர்வத்தோடு தேடும் எவரும் தெரிந்து கொள்ளலாம்.ஒன்றை படித்து மகிழ்ந்து அதை உருவாக்கியவரின் அலைவரிசையோடு சரியாக ஒன்றி இருக்கிறார் ஒருவர்.அவர் அந்நிலையிலும் நிதானித்து அந்த அனுபவத்தை விளக்க முனைகிறார்.இது முழுமை நோக்கிய அவர் பயணத்தின் ஒரு பகுதி.தலை சிறந்தவற்றின் அடிப்படை குணமே எதற்குள்ளும் அடங்காத எல்லைகள் கொண்டு இலங்குவதுதான்.எனவே அவர் நிறைவின் ஒரு பகுதியை ருசித்தவர் என்பதை வெகு விரைவிலேயே உணர்கிறார்.இதுவும் ஓர் அற்புதமான உணர்வு.இது ஒரு குறையை காட்டவில்லை.மேலும் அந்நிலையில் அவர் ஒரு சிறந்த கலைப் படைப்பின் தன்மையை சரியாக உணர்ந்தவராகிறார். ஒரு உண்மையான படைப்பினுள் இதற்கு மேல் தேட ஒன்றுமில்லை என்ற எண்ணம் ஒருவருக்கு மேலிடுகிறது.இதில் தாகம் அடங்கியது என்ற உணர்வு இலக்கை அடைய சரியான முழுமையான அர்ப்பணிப்பு இல்லை என்பதையே காட்டும்.மேலும் உருவாக்கியவரின் உணர்வு நிலை என்ற தந்தியில் புகுந்து எவ்வளவு நுணுக்கமாக அதிர முடியும் என்பதும் கேள்விக்குரியதே.தலை சிறந்த படைப்புகளில் கரைந்து அந்த அனுபவத்தை காலத்தை வென்று நிற்கும் விளக்கங்களாக சிலர் தரவல்லவர்கள்.இருந்த போதும் அவர்களால் முழுமையை நெருங்க முடியும் ஆனால் அடைவதற்கான சாத்தியமில்லை.அதனால் தான் அவர்கள் ஒரு நிலையில் தாங்களே ஒன்றை படைத்து நிறைவை காண முயல்கிறர்கள்.
படைப்பு என்பது கரையற்ற லயிப்பில் அள்ளி வந்த நட்சத்திரங்களில் ஒன்றிரண்டை நிதானமாக சிதறவிடுவது.அணையில் நிரம்பிய நீரின் அளவுக்கேற்றபடி திறந்து விடப்படும் வெள்ளம் செல்கிறது.இங்கே அணையின் நீரளவு அறிவைக் குறிக்கவில்லை.அது ஒன்றை உருவாக்கும் போது இருக்கும் லயிப்பின் அளவை காட்டுகிறது.உடல் சிலிர்த்து கலைப்படைப்பின் உயிரூற்று பெருகி நெஞ்ச மெல்லாம் நிரம்பி இருக்கிறது.சொற்களான மதகுகளின் வழியே கலைஞனின் லயிப்பு வெளிப்படுகிறது.குதித்து வருவது வெவ்வேறு வடிவங்களை காட்டிச் செல்லும் அவனது கற்பனை. வெளிப்படுவது இசையாய், எழுத்தாய்,சிலையாய் எதுவாகவும் இருக்கலாம்.ஆனால் கிடைத்த எல்லாவற்றையும் கொட்டி விட முடியாது.இதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருக்கும் கலை உணர்வோடு கூடிய ஆற்றல்.தொடர்ந்து பெருகிக் கொண்டிருப்பதை எப்படி மடை மாற்றம் செய்தாலும் நிறைவு வந்து செல்லும் ஆனால் நிரந்தரமாக நிலை கொள்ளாது.அது தொலை தூர வெளிச்சம் போல இருக்கிறது.அதே வேளையில் அதனை நெருங்கிச் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.
பொருண்மை உலகம் சுவைக்கு ஏற்றவாறு பொருட்களால் உருவாக்கப்படுவது.காலத்திற்கு ஏற்றவாறு கலைத்து மீண்டும் கற்பனையோடு கட்டப்படுவது.அது சுவையின் தேய்வும் மாற்றமும் எழுதி ஒட்டப்பட்ட செங்கல்களால் செய்யப்படுகிறது.எந்நேரமும் மாற்றம் பெறுவது என்ற பெயரோடு உருவாக்கப்படுபவைகளில் எப்படித் தேடினாலும் முழுமை அகப்படப் போவதில்லை.தேவைகளை பூர்த்தி செய்யும் அவைகளை மருந்து என்று கூட உயர்வாக எண்ணிப் பார்க்கலாம்.ஆனால் அவை முழுமையை காட்டவியலாதவை. பூரணத்தின் நிழல் கூட இல்லாதிருந்தும் மகிழ்ச்சியை அவை அள்ளி வழங்குவதால் அறிவாற்றலும், உழைப்பும் அவற்றை குவித்து எல்லோரையும் வியக்க வைக்கின்றன.நாமும் பொருளுலகத்தில் கொஞ்சம் சிறைபட்டு மகிழ்கிறோம்.
முழுமை எதனாலும் மறைத்து வைக்கப்படவில்லை.அது யாருக்கும் தென்படாதபடி ஒளிந்து கொண்டும் இருக்கவில்லை.அது வெளிப்படையாக இருக்கிறது.திறக்க மறுக்கும் கண்களுக்குள் அது புகுந்து வெளிப்படாது.
அது ஒரு இனிய பாடல்.ஒரு பாடகர் பாடியோ அல்லது ஒரு இசை கருவியை மீட்டியோ கேட்கப்படுவதல்ல அது. அப்பாடல் ஒவ்வொருவருக்குள்ளும் ஒலிக்கக்கூடியது.எங்கும் எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்தும் நாம் அதை கேட்பதில்லை.பல கதவுகளை மூடிக்கொண்டு கேட்க மறுத்து அதில் விருப்பமில்லாமல் இருக்கிறோம்.நாம் காண்கின்ற பொருட்களோடு முழுமை கலந்திருக்கிறது.முழுமையின் கைகள் எப்போதும் எல்லாவற்றையும் தீண்டிய வண்ணம் உள்ளது.ஒரு பனிப்படலம் போல எதையும் விட்டுவிடாமல் தழுவுகிறது.அதுதான் உண்மையான முழுமை.வேறு எதுவும் அது போல எல்லாவற்றையும் சூழ்ந்து கொண்டு இருப்பதில்லை.அப்படி எல்லாவற்றிலும் ஊடுருவி ஏதேனும் ஒன்று இருந்தாலும் அதன் முக்கிய பகுதியாக முழுமை இருக்க வேண்டும்.அதன் அடிப்படை தன்மையே குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் பற்றிக்கொள்ளாதது தான்.எல்லாவற்றையும் பகுத்துப் பார்த்து பழகி விட்ட அறிவுக்கு அது புலப்படுவது சற்று கடினம் தான்.ஆனால் எவருக்கும் முற்றிலும் கிட்ட முடியாததாக அது இல்லை.இதுவரை நாம் எங்கும் கேட்காத அரிய பாடலாக முழுமை இருக்கிறது.அமைதியின் ஆழத்தில் அது ஒலிக்கிறது.
ஒரு பெரும் காவியத்தில் பல சுவைகளூம் பல விவாதங்களும் இருக்கின்றன.அதை உருவாக்கியவனின் படைப்பு என்ற சொல்லுக்குள் எல்லாம் அடங்கிவிடுகிறது.நீர் நம் தாகத்தை போக்குகிறது.அதில் சுவை இருக்கிறது.உடலுக்கு தேவையான தாது உப்புக்களும் உள்ளன.நீர் என்பதில் அனைத்தும் உள்ளன.அது முழுமைக்கு ஒரு சான்றாக உள்ளது.எனவே எல்லாம் அடங்கியுள்ள ஒன்றாக உண்மையான முழுமை இருக்கிறது. நாம் காண விழையும் முழுமை நம்முள் இருக்கும் உண்மையான அமைதியில் தொடங்குகிறது.வெளியே உள்ள அனைத்திலும் இருக்கும் அமைதியோடு நம் ஆழ்மன அமைதி சேரும் போது ஒன்றுபட்ட நிலை தென்படுகிறது.அது ஒன்றாக கலந்துவிடும் நிலை.அந்நிலையை உணர்வதற்கு சற்று முன்னே எல்லாவற்றையும் தழுவி நிற்கின்ற முழுமையை காணமுடியும். முழுமை என்ற ஒரு மெல்லிய படலம் அனைத்தின் மேலும் போர்த்தப்பட்டிருப்பதை ஒரு கணம் காணுகின்ற விழிப்பு நிலை அது.எனவே ஒன்றுபட்ட நிலையின் ஒரு பகுதியாக அதை உணரத்தலைப்படும் போது முதலில் தென்படுவதாக முழுமை உள்ளது.
படித்தறிய முடியாத முழுமை இயற்கையோடு லயிக்கும் போது புலப்படுகிறது.ஆனால் அதற்காக அங்கே மட்டும் அது இருப்பதாக அர்த்தமில்லை.அதுவும் ஒரு வழி அவ்வளவுதான். முழுமையை காணுதல் ஓர் அதிசயச் செயல் அல்ல.ஏனென்றால் அதனை வாழ்க்கை முறையாக கொண்டவர்கள் பூமியில் நடமாடியிருக்கிறர்கள்.இப்போதும் சிலர் இருக்கலாம்.முழுமை மிகமிக எளிய ஒன்று.எல்லோராலும் அதை உணர முடியும்.அது காற்றைப் போன்றது.ஆனால் அதை உணர காற்றாக மாற வேண்டும்.அதற்கு எடை யற்று இருக்க வேண்டும்.அதனோடு கலக்க முற்படும் நம் முகத்தில் திடீரென வீசுகிறது.மலைச்சாரலின் அழகை விரிந்து கிடக்கும் ஏரியில் வரைந்து பார்க்கிறது இயற்கை.இதனை ரசிப்பதினாலோ பறவைகளின் குரலை கேட்பதினாலோ முழுமையை ருசித்து விட முடியாது.அவற்றில் கிடைக்கும் மகிழ்ச்சி நிறைவின் முழு பரிமாணத்தை காட்டி விடாது.பயணம் ஒரு சிறந்த பொழுது போக்கு.தொடர்ந்து பயணிப்பதால் மட்டும் முழுமையின் உணர்வு கிடைத்து விடாது. முழுமையை நோக்கிய பயணம் புதுப்புது இடங்களைக் கண்டு ரசிப்பதோடு முடிந்து விடுவதில்லை.அது அவற்றையும் கடந்து செல்வது.மேலும் சற்று கவனமாக அந்த பயணத்தை நாம் மேற்கொள்கிறோம்.ஏனென்றால் தவறாக ஒன்றை முழுமை என நினைத்து விட வாய்ப்புண்டு. கண்ணுக்கும் உடலுக்கும் இதம் தரும் சூழலில் தங்கி இருப்பது மட்டும் முழுமையை வழங்கிவிடாது.அருவியில் நீராடுவது உடலுக்கு இன்பம் தருகிறது.அதில் சந்தேகமில்லை.ஆனால் ஒரு சூழலில் ஒருவர் மகிழ்ச்சியாய் இருக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.அவை எல்லாம் உண்மையான முழுமை இல்லை.இது பரபரப்பற்ற அமைதியான இடத்திலோ கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்வதிலோ எல்லோருக்கும் கிடைக்கும் என்று நிச்சயமாக கூறவியலாது.அது சாத்தியம் என்றால் அத்தகைய சூழலில் இருக்கும் அனைவரும் முழுமையை உணர வேண்டும்.ஆனால் அவ்வாறு நடப்பதில்லை.வெகு சிலரே உண்மையான முழுமையைக் காண்கிறார்கள். இதில் தெளிவாக இருப்பவர்களுக்கே நிறைவின் நிழல் தென்படுகிறது.ஒரு கலை கூடத்தின் நடுவே ஒருவர் அமர்ந்திருந்தால் மட்டும் அவர் ரசிகர் ஆகிவிடமாட்டார்.அங்கே அவர் உறங்கிக் கொண்டு கூட இருக்கலாம். ஒரு இயற்கை சூழலில் இருப்பது, ரசிப்பது பொன்றவற்றிற்கு பிறகு எஞ்சி இருப்பதாக ,நாம் காண வேண்டிய ஒன்றாக முழுமை இருக்கிறது.எனென்றால் முழுமை உள்ளத்தின் சமனிலையில் இருந்து துளிர் விடுவது.மகிழ்ச்சி அடைவதில் தவறில்லை.அதே வேளையில் பூரணத்தை உணர அதைத்தாண்டி அதனுள் இருக்கும் அமைதியில் கலந்து விடவேண்டும்.இதுவே உண்மையாக இயற்கையில் லயிப்பதென்பது. ஒரு பெரும் நீர்வீழ்ச்சியின் மேலே ஏறி நின்று கொண்டிருக்கிறான் ஒருவன். நீர் வீழ்ச்சியின் அழகை முழுவதும் ரசிக்க அதில் குதித்தே ஆகவேண்டும் என்று எண்ணுகிறான்.ஒரு சில நொடிகளில் நீரோடு நீராக கீழே வந்து விட்டான்.வெள்ளத்தின் போக்கிலே சற்று மிதந்து பின் நீந்தி கரையேறுகிறான்.அமர்ந்தபடியே உடலில் இருந்து சொட்டும் நீர் காய்வதற்குள் மீண்டும் அருவியை பார்க்கிறான்.இம்முறையும் அருவியில் குதிக்கிறான்.ஆனால் உடலால் அல்ல.அருவியின் இரைச்சல் அதன் அசுர வேகம் இவற்றை எல்லாம் மீறி அதில் இருக்கும் ஆழ்ந்த அமைதியில் குதிக்கிறான்.தன்னை முழுமையாய் வெளிப்படுத்தி விழுகிறது அருவி.அதில் நேரடியாக குதித்து வெளிவந்து காணமுடியாத முழுமையை இப்போது அவன் காண்கிறான்.அது போர்த்தியிருக்கும் மெல்லிய ஆடையாக இருக்கின்ற முழுமை, தன் மேலும் தவழ்வதை உணர்கிறான்.அதனால் எல்லோராலும் உடன் உணர முடியாவிட்டாலும் முழுமை எப்போதும் மிகமிக எளிமையானதுதான்.
முழுமை ஒரு குறிப்பிட்ட சூழலில் மட்டும் இருப்பதாக கருதி பாறையிலும் நீரோடையிலும் அதைக் காண முனைவது முழுமையை முற்றிலும் தவறாக புரிந்து கொண்டதன் விளைவு.முழுமையின் ஸ்பரிசத்தை எச்சூழலிலும் உணரமுடியும்.அவ்வாறு இல்லாவிடில் அது எப்படி முழுமையாக இருக்க முடியும்?ஒரு போர் எதனால் மூண்டது, அதில் மறைந்துள்ள லாப நஷ்ட கணக்குகள் என்ன?உண்மையிலேயே அது தவிர்க்க முடியாததா?நல்ல விளைவை ஏற்படுத்துமா? என்றெல்லாம் ஆராய்வது நம் நோக்கமல்ல.பல்லாயிரம் மைல்கள் தாண்டி உறவுகளை மீண்டும் காணமுடிமா என்ற சிறு ஐயப்பாட்டின் அழுத்தத்தை தாங்கியபடி இருக்கும் ஒரு போர் வீரனின் நிலை என்ன?முந்தைய காலங்களில் இப்போது இருக்கும் அதிநவீன கருவிகளும் வசதிகளும் இல்லாத நிலையிலும் நீண்ட போர்கள் நடந்தன.களைப்பையும் காயத்தையும் சுமந்து செல்ல வேண்டும்.சில வேளை அது நெடுந்தொலைவாகவும் இருக்கலாம்.உற்சாகமற்று மயங்கும் கண்களை சொந்த மண்ணின் நினைவுகளும், கவலைகளும் அடிக்கடி வந்து மேலும் மறைக்கின்றன.எச்சரிக்கையாக வைக்கும் பாதங்களுக்குப் பின்னால் எப்போதும் ஒரு ஆபத்தின் நிழல் தொடர்ந்து வருகிறது.களைப்பை துடைத்து நல்ல அனுபவங்கள் மருந்திடும் ஒர் இடத்தில் சற்று சாய்ந்த போது அது நிகழ்கிறது.சிலவினாடிகளுக்கு முன்னால் சிரித்துக் கொண்டிருந்த நண்பன் இறந்து கிடக்கிறான்.இப்போது நெஞ்சில் மேலும் ஒரு சுமை ஏறுகிறது.இதை விட நெருக்கடியான சூழல் இருக்க முடியுமா? பிறகு அப்போர் வீரன் எஞ்சி இருக்கும் சில சகாக்களுடன் ஒரு மாலை வேளை நவீன உலகத்தோடு தொடர்பு இல்லாத கிராமத்திற்குள் நுழைகிறான்.ஆயுதங்களை கண்டு மிரண்டு ஒடுங்குகின்ற மக்களின் பேச்சு புரியவில்லை.நடுக்கம் அவர்களின் மனோநிலையை ஒரளவு காட்டுகிறது.அவன் முன்னே செல்கிறான். அந்த அப்பாவி மக்கள் அவன் கண்களில் உயிர் பிச்சை அளிக்கும் ஒரு சிறுதுளி இரக்கம் தென் படாதா என்று ஏக்கத்தோடு பார்கிறார்கள்.அவர்களை சாதாரண நிலைக்குக் கொண்டு வர வலிந்து தன் கண்களின் கடுமையை குறைக்கிறான்.அவர்களை துன்புறுத்தவோ கொல்லவோ தாங்கள் வரவில்லை , அதற்கான தேவையுமில்லை என்று புரிய வைக்கிறான்.அசாதாரணமான அச்சம் நிறைந்த சுழலை மாற்ற முயல்கிறான்.தன் சகாக்களுடன் அமர்ந்து அம்மக்கள் தந்த உணவை உண்டபின் ஓய்வெடுக்க கொஞ்சம் சாய்கிறான்.
ஆயுதங்கள் வைக்கோலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் அதன் மேல் விளையாடுகிறார்கள்.இப்போது எல்லாம் சரியாகிவிடவில்லை.அந்த மக்களை பொறுத்தவரை அவர்கள் அந்நியர்கள். குடிசைகளுக்கு மேல் எந்நேரமும் நெருப்புப் பந்தம் விழலாம் என்ற எண்ணமே நிழலாடுகிறது.போர் வீரர்களுக்கோ எதிரிகளின் அரவத்தை கேட்டால் மரணம் நெருங்கி வருவது போல் உள்ளது.இச்சூழ்நிலையில் ஒரு நாள் அதிகாலை அது நிகழ்ந்தது.அந்த கிராமத்தின் பெரும் ஏரியின் நீண்ட கரையில் தனியாக அவன் அமர்ந்திருந்தான்.இந்த மக்களுக்கும் போருக்கும் என்ன தொடர்பு?இந்த மண்ணில் இருக்கின்ற காரணத்தால் எதற்கென்றே தெரியாமல் நெருப்பு வளையத்திற்குள் வாழ்கிறார்கள்.தொடர்ந்து வரும் எண்ணங்கள் அடங்கித் தேய்கின்றன.இந்த பெரும் ஏரியும் ,மேகமும் இது அந்நியதேசமென்று சொல்லவில்லையே.இது ஏதோ புதிதாக ஏற்பட்ட உறவு போல இல்லை.எப்போதும் உள்ள ஒன்றாய் தென்படுகிறது.இளங்காலை கதிர்கள் ஏரி முழுவதும் விழுந்து பின் நீர்பரப்பின் மேல் சிறு அலைகளோடு ஊர்ந்து செல்கின்றன.அப்போது கரைக்கு மிக அருகில் ஒரு பெரிய மீன் தன் செந்நிற இறகுகள் நெளிந்து அசைய வந்து திரும்பிச் செல்கிறது.அது எதற்காக கரையருகே வந்தது என்று தெரியவில்லை.கரை எப்போதுமே ஒரு கொடிய சிறை.அங்கே சரியாக நீந்த முடிவதில்லை. உடல் தரைதட்டுகிறது.பறவையின் கண்கள் வெறிக்கின்றன. மேலே வந்தால் அங்கே கிடைக்கும் வெளிக்காற்றை ஏரியின் நடுவிலும் பெறலாம்.அந்த மீன் தன் பெரிய உலகமான ஏரியின் நடுவே உள்ள ஆழமான பகுதியை நோக்கிச் செல்கிறது.அவனும் தன் எல்லைகளை உடைக்க எத்தனிக்கிறான்.கதிர்கள் நீர் பரப்பிலும் அதற்கு கீழேயும் உள்ள அத்தனை அணுக்களின் மேலும் பாய விரைகின்றன. முழுமையின் கரங்கள் நீண்டு அவனையும் சேர்த்து அனைத்தையும் அணைத்துக் கொள்கின்றன.எனவே எந்த ஒரு இக்கட்டான சூழலும் முழுமையைக் காண ஒரு தடையாய் இருப்பதில்லை. மனதை அழுத்துபவைகளை உதிர்த்து சற்று உயர முழுமை நம்மை சூழ்ந்து கொள்கிறது.
முழுமையைக் காண்பது ஒருவர் தானும் அதில் இருப்பதை உணர்வதில்தான் நிறைவேறுகிறது.அனைத்தும் ஒரு சருகு போன்ற கண்ணாடிப் போர்வையால் போர்த்தப்பட்டுள்ளன. ஒருவர் தன் பிம்பத்தையும் அதில் லேசாகக் காணலாம்.ஆனால் அது ஒரு மங்கலான சிறு காட்சி.அங்கு முழுமை மட்டுமே முதன்மையாக இருக்கிறது.தன் பிம்பத்தை உற்றுப் பார்த்து தன்னை வேறுபடுத்தி அடையாளம் காண முற்பட்ட அடுத்த கணத்தில் கண்ணாடி உடைகிறது.தெறித்து விழுந்த சிறு கண்ணாடித் துண்டாய் மனிதன் தனியே கிடக்கிறான்.