Monday, July 15, 2013

நிழல் கடல்

                    - துவாரகை தலைவன்

        இந்த பெரிய உலகத்தை ஒரு நாடக மேடையாக நாம் கருதுவோம். இதில் நாமெல்லாம் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நடித்து விட்டுப் போகும் நடிகர்களாக இருக்கிறோம். அதாவது உலகம் என்ற நாடகத்தில் சூழ்நிலைகள் ஒருவருக்கான கதாபாத்திரத்தை  ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கின்றன. மேலும் அவர் அந்த வேடத்தை ஏற்று நடிக்கத் தொடங்கிய பிறகும் அவை அவரை எப்படி நடிக்க வேண்டுமோ அப்படி நடிக்கச் சொல்கின்றன. இங்கே மனிதனின் தலைவிதி பற்றி நாம் பேசவில்லை. மனிதர்களின் விருப்பு வெறுப்புகளாலும், கால மாற்றங்களாலும் தொடரும் சூழ்நிலைகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். இது உலகம் கொண்டுள்ள ஒரு வகை கருத்து.
       அப்படி இல்லாமல் நாம் நம் விருப்பப்படி தான் செயல்படுகிறோம் என்ற வலுவான மற்றொரு கருத்தும் பலரிடம்  இருக்கிறது. அதன் படி நமக்கான கதாபாத்திரத்தை நாமே உருவாக்குகிறோம். மனிதன் தன் விருப்பங்களையும் தனக்கு பிடிக்காதவைகளையும் அறிவான். அதனால் அவன் தனக்கு சாதகமான கதாபாத்திரத்தை அவனே எடுத்துக் கொள்கிறான். மேலும் உலக நடப்புகள், மாறுதல்கள் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு தன் நடவடிக்கைகளை சற்று மாற்றி அமைக்கிறான். அப்போதும் அவன் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு தான் அதை நிகழ்த்துகிறான். பெரும்பாலான மனிதர்களின் எண்ணம் இதுவாகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் மனிதனின் தன்முனைப்பு அவ்வளவு வலிமையானது. அதற்கு கல்வி, பொருளாதாரம் அந்தஸ்து    இவற்றில் ஏதும் ஒரு பொருட்டல்ல. தன்முனைப்பை பொறுத்தவரை அது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது தான். அதை ஒரு சில சூழல்களில் வெளிக்காட்டும் விதத்தில்தான் மனிதர்கள் வேறுபடுகிறார்கள். அதாவது கல்வி, பொருளாதாரம், பதவி, புகழ் இவை அதிகமாக உள்ளவர்களிடம் மட்டும் தான், தானே எல்லாவற்றையும் நிகழ்த்துகிறோம் என்ற எண்ணம் வலுவாக இருக்கும் என்பது மேம்போக்கான கருத்து. அனைவரையும் தன்முனைப்பு ஆட்சி செய்வதால் ஒவ்வொருவரும் தன் செயலுக்கான காரண கர்த்தாவாக தன்னை நினைத்துக் கொள்வதில் வியப்பு ஒன்றுமில்லை.
        ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற நகைச் சுவை நாடகமாகிய ‘அஸ் யூ லைக் இட்’ நாடகத்தில் அக்யூஸ் என்ற கதாபாத்திரம் இவ்வாறு கூறுகிறது.

இந்த  உலகம் ஒரு நாடக மேடை ,
இதில் அனைத்து ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்கள் தாம்.
அவர்கள் இங்கு நுழைகிறார்கள் பிறகு வெளியேறுகிறார்கள்;
மனிதன் ஒருவன் தான் வாழும் காலத்தில் பல கதாபாத்திரங்களை ஏற்கிறான்,
அவனுக்கான காட்சிகள் அவனுடைய ஏழுவகை பருவங்கள்...


மிக எளிதாக மனித வாழ்க்கையை விளக்கி தன் தத்துவ மேதமையை இந்த வரிகளில் காட்டி விடுகிறார் ஷேக்ஸ்பியர். நவீன உலகத்தில் இந்தக் கூற்றை எத்தனை பேர் ஏற்பார்கள் என்று தெரியவில்லை. இங்கு தனக்கான மேடையை தானே உருவாக்கிக் கொள்கிறேன் என்று சொல்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
       மனிதர்கள் அனைவரும் யாரோ எழுதிய நாடகத்தில் வேஷம் ஏற்று நடிப்பவர்களா என்ற கேள்விக்கு பதில் கூற விழைகிறார் டாக்டர் வால்டர் செம்கி. இவர் சான்ஃபரான்சிஸ்கோவைச் சேர்ந்த மருத்துவர். தன்னுடைய இரண்டு நூல்கள் மூலம் அவர் உலகப் புகழ் பெற்று விட்டார். 2006 இல் எழுதிய ‘பார்ன் அகைன்’ நூலுக்குப் பிறகு 2011 இல் அவர் எழுதிய ‘ஆரிஜின் ஆஃப் சோல் அன்ட் பர்பஸ் ஆஃப் ரீ இன்கார்னேஷன்’ என்ற நூல் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
       விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சியின் மூலமாக அவர் மனிதனின் உயிர் ஒரு கருவில் தங்கி தன் பழைய விருப்பு வெறுப்புகளோடு இந்த உலகிற்கு வருகிறது என்பதை கண்டறிந்திருக்கிறார். மறு பிறப்பு பற்றிய ஆய்வில் நிபுணரான அவர் ஆய்வுகள் மூலம்  கூற விழைவது இதுதான்.

  “நான் ஒரு விஞ்ஞானி என்ற முறையில் மனிதர்களின் முந்தைய பிறப்புகளை சில ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்தேன். அவை மனிதன் ஒருவனின் இரண்டு பிறப்புகளிலும் உள்ள குணாதிசயங்கள், முகஅமைப்பு, சிந்தனை, நிகழ்வுகள், எழுதும் முறை ஆகியவையாகும். அவை மனிதனின் பல பிறப்புகளில் பெரும்பாலும் மாறுவது கிடையாது.”

செம்கியின் கருத்துப்படி உலகில் பிறக்கும் மனிதர்கள் பெரும்பாலும் தாங்கள் எப்படி இருக்க வேண்டும் எந்த சூழலில் வாழ வேண்டும் என்பதை முடிவு செய்பவர்களாக இருக்கிறார்கள். முன் பிறப்பில் ஓர் உயிர் கொண்ட விருப்பங்களை அது  விடாமல் தன்னோடு வைத்துக் கொண்டிருப்பதே அதற்குக் காரணம். இது நம்மில் பலருக்கு வியப்பை அளிப்பதாக இருக்கும். மனிதனின் விருப்பு வெறுப்புகள் அவ்வளவு வலிமையானவை.

       இவருடைய கருத்தைப் புரிந்து கொள்ளும் முன்பாக நாம் சில அடிப்படைகளை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. எளிமையாகச் சொன்னால் மனிதன் என்பவன் உடல், உயிர் ஆகிய இரண்டால் ஆனவன். தனியாக மனிதனுக்கு உயிர் என்ற ஒன்று இருப்பதை மறுப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்தக் காலத்தில் ஒன்றைப் பற்றி பேசினால் விஞ்ஞான பூர்வமான ஆதாரம் இருக்கிறதா என்று பலரும் கேட்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் மனிதனிடம் தனியாக உயிர் என்ற ஒன்று இருப்பது விஞ்ஞான பூர்வமாக ஒரு மருத்துவமனையில் நிரூபிக்கப்பட்டது. இது நடந்தது டென்மார்க்கில். உயிர் இருப்பதை நிரூபிப்பதற்காக யாரும் எந்த முயற்சியும் அங்கு செய்யவில்லை. ஒரு முப்பது வயது பெண்மணிக்கு செயற்கை  இதயம் பொருத்துவதற்காக அந்த அறுவை சிகிச்சை நடை பெறுகிறது. மற்ற உறுப்புகளை செயற்கையாக தயாரிக்கப்பட்டவைகளால் மாற்றிக் கொள்வதற்கும் இதயத்தை அவ்வாறு  மாற்றிக் கொள்வதற்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. ஏனென்றால் இதயம் தான் உடலுக்குள் இரத்தத்தைப் பாய்ச்சுகிறது. ஒரு குறிப்பிட்ட உறுப்பை எடுத்துவிட்டு  செயற்கையான உறுப்பைப் பொருத்தும் போது இரத்த ஓட்டம் தற்காலிகமாக அந்த உறுப்புக்கு மட்டும் நிறுத்தப்பட்டு பின்னர் தரப்படுகிறது. உடல் முழுவதும் இரத்தம் பாய காரணமாக இருக்கும் இதயத்திற்கு பதிலாக செயற்கை இதயம் பொருத்தும் போது உடலின் மற்ற பகுதிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு இரத்த ஓட்டம் இருக்காது. இதில் உள்ள சிக்கல் என்ன வென்றால் அப்போது மூளைக்கும் இரத்தம் செல்லாது. எனவே அறுவை சிகிச்சை நடை பெறும் போது ஒரு செயற்கை இதய- - நுரையீரல் இயந்திரம் தற்காலிகமாக இதயத்தின் இரத்த குழாய்களுடன் இணைக்கப்படும். இந்த இயந்திரம் இயற்கையான இதயமும், நுரையீரலும் செய்யும் வேலைகளை அறுவை சிகிச்சை முடியும் வரை செய்து கொண்டிருக்கும். அதாவது உடலில் இருந்து வரும் பிராணவாயு குறைவான இரத்தத்தில், பிராணவாயுவைக் கூட்டி உடலுக்கு மீண்டும் நல்ல இரத்தத்தைப் பாய்ச்சிக் கொண்டிருக்கும்.
         முதலில் உடலில் இருக்கும் இயற்கை இதயம் மருந்தினால் நிறுத்தப்பட்டு வெளியில் இருக்கும் தற்காலிக இதய-- - நுரையீரல் இயந்திரம் இயக்கப்படும். இயற்கை இதயம் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட பின் நிரந்தரமாக உடலுக்குள் இருக்க வேண்டிய பிளாஸ்டிக்காலும் உலோகத்தாலும் செய்யப்பட்ட செயற்கை இதயம் உடலுக்குள் வைக்கப்ப்படும். அதில் இணைப்புகள் கொடுக்கப்பட்ட பின் வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் இதய -- நுரையீரல் இயந்திரம் நிறுத்தப்படும். செயற்கை இதயம் செயல்பட்டு உடலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட  குறுகிய கால அளவில் அந்தப் பெண்ணின் மூளைக்கு இரத்தம் செல்லவில்லை. அதாவது மூளை செயல் இழந்த நிலைக்கு அவள் செல்ல வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவள் செயற்கை இதயம் செயல்படத் தொடங்கிவிட்டது. கண் விழித்த அந்தப் பெண் கூறியது மருத்துவர்கள் உட்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தன் உடலைப் பார்த்ததாகவும், அதில் மருத்துவர்கள் செயற்கை இதயத்தைப் பொருத்துவதை  அறுவை சிகிச்சை அறையில் தான் கண்டதாகவும் அவள் கூறினாள். இதை ஹாலுசினேஷன் என்று சொல்லப்படுகின்ற கற்பனை செய்யப்பட்ட அல்லது பொய் உணர்வு என்று மருத்துவர்களால் சொல்ல இயலவில்லை. மயக்கம், தூக்கம் இரண்டிலும் மனம் வேலை செய்ய வாய்ப்புள்ளது. அப்படி இருந்தால் அவள் கண்டதாக கூறியவற்றை கற்பனை செய்து கொண்டிருக்கிறாள் என்று எளிதாகக் கூறிவிடலாம். அவள் இருந்த நிலை மயக்கமும் அல்ல தூக்கமும்  அல்ல. மனம் வேலை செய்தால் தான் எதையாவது கற்பனை செய்ய முடியும். மனம் வேலை செய்ய மூளை இயங்கும் நிலையில் இருக்க வேண்டும். மூளைக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு இரத்த ஓட்டம் இல்லாமல் அது செயலற்று இருந்தது மருத்துவர்கள் அறிந்த ஒன்று. ஆதலால் அவர்கள் அவளுக்கு ஏற்பட்ட ஒன்று தங்களால் புரிந்து கொண்டு விளக்க முடியாத ஒன்று என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டார்கள். அந்தப் பெண் அறுவை சிகிச்சையின் முக்கிய நிகழ்வுகளை தான் நேரில் பார்த்தது போன்று விவரித்த விதம் அதை பொய் என்று அறையில் இருந்த   யாராலும் மறுத்துக் கூறிவிட  முடியாதபடி இருந்தது. நடந்தது இது தான். மூளைக்கு இரத்தம் பாய்வது நின்ற தருணத்தில் அவள் உயிர் அவள் உடலை விட்டு நீங்கிவிட்டது. அது, உடல் மீண்டும் இயங்கும் நிலைக்கு வந்தவுடன் திரும்பி நுழைந்து விட்டது. அந்தப் பெண் போல மரணத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் உடலுக்குத் திரும்பி வந்தவர்கள் ஏராளம். உலகம் முழுவதும் பல இடங்களில் இத்தகைய நிகழ்வுகள் தக்க ஆதாரங்களுடன் பதிவாகி உள்ளன. அவற்றில் டென்மார்க்கில் நடந்த  நிகழ்வு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அது விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.
        மனித உடலுக்குள் உயிர் இருக்கிறது என்ற கருத்தில் மறுக்க முடியாத உண்மை இருப்பது போல மறுபிறப்பு என்பதிலும் உண்மை இருக்கிறது. தன்னுடைய முந்தைய பிறப்பை மறக்காத சிலர், வாழ் நாளில் அதுவரை செல்லாத புது இடத்திற்கு சரியாக வழி சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல அந்த இடத்தில் இருக்கும் மனிதர்களின் பெயர்களைக் கூறுகிறார்கள். வாழ்நாளில் அதுவரை தாங்கள் சந்திக்காத அவர்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் நீண்டகாலம்  பழகியவர்கள் போலத் தெளிவாகக் கூறுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் நடந்த ஒரு நிகழ்வு இன்றுவரை பேசப்படுகிறது. அதிகம் படிக்காத  ஒரு விவசாயி திடீரென்று ஒரு சிறந்த மருத்துவரைப் போல் பேச ஆரம்பித்தார். எல்லா நோயாளர்களுக்கும் வைத்திய ஆலோசனை கூறினார். சரியான மருந்துகளை எழுதிக்கொடுத்தார். அதுமட்டுமல்ல சில சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் செய்து மருத்துவர்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.
        இத்தகைய அபூர்வ நிகழ்வுகளுக்கெல்லாம் அழுத்தமான விளக்கங்களைத் தருகிறார் டாக்டர் செம்கி. அவருடைய விளக்கங்கள் விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் மூலமாக தரப்படுபவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
        உலகில் பல மதங்கள் மறுபிறப்பை ஏற்றுக்கொள்வதில்லை. இந்து மதம் மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் மறுபிறப்பு உண்டு என்கிறது. அதுமட்டுமல்லாமல் ஓர் உயிர் புழுவாக, பறவையாக, மிருகமாக பல பிறப்புகளைத் தாண்டி மனிதனாகப் பிறக்கிறது என்று கூறுகிறது. இந்து மதத்தின் வேர்களைக் கொண்ட வேதங்கள் பிறப்பு, இறப்பு உயிர்களின் தன்மை ஆகியவை பற்றி உறுதியான கருத்துகளைச் சொல்கின்றன. மனிதன் இறந்தவுடன் உயிர் அவன் உடலை விட்டுச் செல்கிறது அப்போது அது மட்டும் பிரிந்து செல்வதில்லை. அது தன்னோடு விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றால் உருவான மனம், பிராணன் என்ற சக்தித்தொகுப்பு, உடலோடு இருந்த போது ஒட்டிக்கொண்டிருந்த ஐம்புலன்களின் உணர்வுகள் இவை அனைத்தையும் கொண்டு செல்கிறது.
         வெகு காலத்திற்கு முன்னால் மறைமலை அடிகள், இறந்த பிறகு மனித உயிர்களின் நிலை, செயல்பாடுகள் பற்றி சில நூல்களை எழுதினார். கடவுள் நம்பிக்கை சிலரிடம் அருகி வந்த காலம் அது. அப்போது விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட சக்திகள் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் என்ற நோக்கத்தில் துணிவோடு சில கருத்துகளை அவர் மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
        டாக்டர் செம்கி மனித உயிர் பற்றிய இந்து மதகோட்பாடுகளை ஏற்பதாகவே தெரிகிறது. ஏனென்றால் அவர் மனிதனின் கர்மவினைகளுக்கும் மறுபிறப்பு பற்றிய விளக்கங்களில் இடம் அளித்துள்ளார். அவருடைய கருத்துப்படி மனிதன் இறந்தவுடன் உயிரானது மீண்டும் பிறக்கும் தருணம் வரும் போது தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் ஆவலோடு செயல்படுகிறது. தாயின் வயிற்றில் கரு உருவானதும் உயிரானது அதைச் சுற்றி ஒரு சக்தி வளையத்தை உருவாக்குகிறது. அதன் மூலமாக உயிர் தன்னுடைய பழைய உருவத்தை கருவில் பதியச் செய்கிறது. ஓர் எலும்பியல் நிபுணர் மெல்லிய எலும்பு முறிவை மின்சாரம் பாய்ச்சி சரி செய்வது போன்ற நிகழ்வு இது என்கிறார் செம்கி. அதனால் முற்பிறப்பில் உயிர் கொண்ட முக அமைப்பு இந்தப் பிறப்பிலும் இருக்கும் என்று உறுதியாகக் கூறுகிறார். உயரம், உடல் எடை இவை மாறுபட்டாலும் முக அமைப்பு  மாறாது என்கிறார். மேலும் கை கால் அசைவுகள், குரல் இவை முற்பிறவி போலவே இருக்கும் என்கிறார். இவற்றை கண்டறிவதற்கு பல ஆய்வக ஆராய்ச்சிகளையும், நூல் ஆய்வுகளையும் அவர்  மேற்கொண்டிருக்கிறார். பல்லாயிரம் பேர்களை பேட்டி கண்டுள்ளார். முக்கியமாக மூவாயிரம் குழந்தைகளிடம் பேசி இருக்கிறார். அவர்கள் எல்லாம் வயதுக்கு மீறிய வியத்தகு ஆற்றல்களை குழந்தை பருவத்தில் வெளிப்படுத்தியவர்கள். அவர்களில் பலர் தங்கள் முற்பிறப்பு நிகழ்வுகளை விவரித்திருக்கிறார்கள். குழந்தைகள் பொய் கூறுதில்லை. இருந்த போதும் அவர், அவர்கள் கூறியவைகளுக்கான ஆதாரங்களையும் திரட்டி இருக்கிறார். தன்னுடைய ‘பார்ன் அகைன்’ நூலில் அவர் டாக்டர் அப்துல் கலாம் முற்பிறப்பில் திப்பு சுல்தானாக வாழ்ந்தார் என்று உறுதியாக தெரிவித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் கூற்றுக்கு ஆதாரமாக இருவரின் முக ஒற்றுமையைக் காட்டுகிறார். அடுத்து திப்புசுல்தானின் தனிதன்மை வாய்ந்த விருப்பத்தைக் கூறுகிறார். திப்பு சுல்தான் மிகப்பெரிய வீரன் மட்டுமல்ல ராக்கெட் தொழில் நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். அவன் வெள்ளைக்காரர்களை எதிர்க்க ஆரம்ப கால ராக்கெட் தொழில் நுட்பத்தை வளர்ப்பதில் பெரும் ஆர்வம் காட்டினான் என்கிறார்கள் வரலாற்றுவியலாளர்கள். இந்தியாவின் ஏவுகணை தொழில் நுட்பத்தில் இந்தியா பெற்ற வெற்றிகளில் பெரும் பங்கு வகிப்பவர் அப்துல் கலாம் என்பது அனைவரும் அறிந்ததே.
        மனித உயிரானது ஒரு கருவில் தன் உருவ அமைப்பை பதிவு செய்வதோடு தன் விருப்பங்களையும், லட்சியங்களையும் பதிவிறக்கம் செய்கிறது என்கிறார் டாக்டர் செம்கி. இங்கு ஒரு பெரிய சக்திப் பரிமாற்றம் நிகழ்கிறது. அதாவது பெற்றோரிடமிருந்து கருவுக்கு வந்த ஜீன்கள், பிறக்கப் போகும் மனிதனின் அத்தனை குணாதிசயங்களின் குறுந்தொகுப்பாக இருக்கின்றன. அவற்றோடு ஆன்மாவானது தான் கருவைச் சுற்றி ஏற்படுத்திய சக்தி வளையத்தின் மூலமாக ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்கிறது. ஜீன்கள் உடல் பருமனான மனிதனை உருவாக்குகிறது என்று வைத்துக் கொள்வோம். உயிரின் பழைய உருவமோ சற்று ஒல்லியானது. பருமனான புது உருவத்தை ஏற்றுக்கொள்ளும் உயிர் ஒரு சில  மாறுதல்களை வலியுறுத்துகிறது. அதனால் முகத்தில் கண்களும், மூக்கும் பழைய உருவத்தை ஒத்து இருக்கும் படியாக உருவாகின்றன. உடல் அமைப்பைப் போன்றே குணாதிசயங்ககள், தனித்திறமைகள்  ஆகியவற்றை பதிவு செய்வதிலும் ஒரு புரிந்துணர்வு ஏற்படுகிறது. அதன்படி பெற்றோரிடமிருந்து சில குணங்கள் பதிவானாலும், உயிரின் முற்பிறவி விருப்பங்களே அதிகமாக புதிதாக உலகுக்கு வரும் மனிதனிடம் ஒட்டிக் கொள்கின்றன. இங்கு  உலகில் பிறக்கும் மனிதர்கள் ஏற்கனவே யாரோ எழுதி வைத்த நாடகத்தில் சொன்னபடி நடித்துவிட்டு போகும் நடிகர்களா அல்லது தங்கள் விருப்பம் போல் செயல்படுபவர்களா என்ற கேள்விக்கான விடை ஒளிந்துள்ளது.
       நாமெல்லோரும் உலகமென்ற நாடக மேடையில் நடிகர்கள் என்ற ஷேக்ஸ்பியரின் கருத்தை யாரும் மறுக்க முடியாது. மனிதன் இந்த வேகமான உலகில் சூழ்நிலைகளால் ஆட்டுவிக்கப்படுகிறான். இதனை உணர்ந்து கொண்ட யாருக்கும் அந்த மாபெரும் கவிஞனின் கூற்றில் இருக்கும் உண்மை புரியும். டாக்டர் செம்கி போன்ற சுதந்திரமான ஆய்வாளர்கள் அந்த வரிகளில் ஒளிந்திருக்கும் உண்மைக்கான ஆதாரங்களை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து வாசகர்களுக்குத் தர முயல்கிறார்கள்.
       டாக்டர் செம்கி கருத்துகளில்  மறுபிறவிக் கோட்பாடுகளில் அவருக்கு இருக்கும் அளவு கடந்த ஆர்வம் தெளிவாகத் தெரிகிறது. மனிதர்களின் அடுத்து அடுத்து வரும் பிறப்புகளில் நாடு, இனம், மொழி இவைகளைப் பொறுத்த வரையில் அவை எப்படிவேண்டுமானாலும் மாறி இருக்க வாய்ப்புள்ளது. அதாவது மனிதன் ஒருவன் இந்தப்பிறவியில் ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அவன் அடுத்து வரும் பிறவியில் அதே நாட்டில் அதே இனத்தில் பிறப்பான் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. செம்கி இதனை பல முன் ஜென்ம நினைவுகள் மாறாத மனிதர்களைப் பேட்டி கண்டு திரட்டிய ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
       எனவே இனம், மொழி, எல்லாமே மனிதர்கள் ஒரு பிறவியில் ஏற்கும் வேடங்கள் தாம். செம்கி போன்ற மேதைகளின் கூற்றுப்படி மனிதர்கள் தங்களுக்கான வேடத்தை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட ஒரு சூழல், நடிக்க வலியுறுத்தும் கதாபாத்திரத்தை நடித்து விட்டுப் போகிறவர்கள் அல்ல.
       செம்கி போன்ற ஆய்வாளர்கள் முற்பிறவி நினைவு வந்தவர்களைத் தாம் மிகுதியாக தங்கள் ஆய்வுக்கு உட்படுத்துகிறார்கள். உலகின் மொத்த மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டால் இவர்கள் மிகவும் குறைவானவர்களே. செம்கி ஒரு மனோதத்துவ நிபுணர். அவர் தன்னிடம் வருகின்ற நோயாளர்களை அதாவது முற்பிறவி நினைவுகளால் சற்று குழப்பம் அடைந்தவர்களை குணப்படுத்தும் சிகிசைக்கு தன் ஆய்வு முடிவுகளைப் பயன்படுத்துகிறார். ஒரு புகழ் பெற்ற  ஓவியர் மீண்டும் பிறந்து தற்செயலாக தன் ஓவியங்கள் வைக்கப்பட்ட அரங்கைக் காண்கிறார். இப்பிறவியிலும் அவர் ஓவியர். அவர் எளிதாக அரங்கத்தில் கண்ட ஓவியங்களின் மாதிரிகளை வரைகிறார். செம்கி அவரிடம் மறுபிறப்பு என்பது உண்மை என்று விளக்குகிறார். மேலும் அவர் குழப்பம் அடையாமல் தனக்கு விருப்பமான பணியை இப்பிறவியிலும் தொடரலாம் என்கிறார். இது ஒரு மகத்தான மனோதத்துவ சிகிச்சை.
        மனித உடல்களை ஆராய்கினற விலங்கியலாளர்களும், மருத்துவர்களும் தங்கள் ஆய்வுக்கு ஒரு சில மனித உடல்களைத் தாம் அறுத்துப் பார்க்கிறார்கள். அதன் மூலம்  மனித இனத்திற்குப் பொதுவான நல்ல முடிவுகளைக் கண்டு மக்களின் நோய்களையும், உடல் குறைபாடுகளையும் நீக்குகிறார்கள். அது போலவே டாக்டர் செம்கி போன்றவர்கள் சில ஆயிரம் மக்களின் உயிர் பற்றிய ஆய்வு முடிவுகளை வைத்து பல புதிர்களுக்கு விடை காண முயன்று வெற்றி அடைந்திருக்கிறார்கள். அவர்களுடைய முடிவுகளும் கருதுகோள்களும் விஞ்ஞான பூர்வமானவை.
        இதில் ஒன்றை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறக் கூடாது. மனிதப் பிறவியின் மகத்துவமே ஒரு குழந்தை உலகைப் புதிதாக முதலில் காண்பதில் தான் இருக்கிறது. மொழியை ‘அ’ என்ற ஒலிக் குறியீட்டில் தொடங்கி அதே போன்று பலவற்றை ஒலித்துப் பழகுகின்றது குழந்தை. பிறகு மெல்ல மெல்ல வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கி, வரிகளைக் கூறுவது மூலமாக தகவல் பரிமாற்றம் செய்கிறது. அது உலகையும், மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் பார்த்து ஒரு மன உலகை உருவாக்கத் தொடங்குகிறது. அக்குழந்தையால், பெரிய மனிதனாக வளர்ந்தவுடன் தனக்கான மேடையையும் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்தையும் உள் மனதில் காணமுடிகிறது. கருவில் பதிவான முற்பிறவி விருப்பங்கள் ஒருபுறம் இருக்கின்றன. இப்போது புதிய சூழலில் மனிதனுக்குள் சில விருப்பங்கள், லட்சியங்கள் தோன்றுகின்றன. இப்பிறவியில் உள்ள நினைவுகள் தாம் கிட்டத்தட்ட அனைத்து மனிதர்களிடமும் இருப்பதால் அவர்களை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வோம். இப்போது மிகவும் முன்னேறி விட்டதாக நாம் கருதிக்கொண்டிருக்கும் இந்த நவீன உலகம் என்பது ஒரு வகையில் பண்டோரா பெட்டி போன்று உள்ளது. அதற்குள் இருந்து நினைத்ததெல்லாம் வருகின்றன. யானை, பாம்பு, குதிரை, சிங்கம், குடை பலூன்கள் என்று வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை மக்களுக்கு அதிர்ச்சி கலந்த பரபரப்பான வாழ்கையையே தந்துள்ளன. இதில் மனிதர்கள் அனைவருக்கும் வருகின்ற ஐயப்பாடு ஒன்றுதான். நாமே இயங்குகிறோமா அல்லது இந்த வாழ்க்கை சூழல் என்ற மேடை தரும் பாத்திரத்தில் நடிக்கிறோமா என்பதுதான்.
       மனிதன் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். அது நாம் எல்லோரும் இந்த வாழ்க்கையை நாமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். நாம் அறியாத போதும் இந்த வாழ்க்கை சூழலோடு நமக்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. எனவே இந்த மேடையில் நாம் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தில் ஓர் ஆழமான அர்த்தம் உள்ளது. ஆதலால் நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்வில் ஒரு பொறுப்புணர்வு  நமக்குள் நுழைந்து விடுகிறது. இந்த உலக வாழ்க்கை என் மேல் திணிக்கப்பட்டுள்ளது. படைத்தவனுக்கு பொழுது போகாமல் இருக்கலாம் அதனால் என்னைப் படைத்து விளையாடுகிறான் என்றெல்லாம் சொல்வதில் எந்தப் பொருளும் இல்லை. உலக வாழ்வின் மேடைகளை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். பிறகு அதை மாற்றி அமைக்கிறார்கள். ஒரு நாள் தற்காலிகமாக மேடையை உடைத்துப் போடுகிறார்கள். மீண்டும் புத்துணர்வோடு எல்லோரும் சேர்ந்து ஒரு காலகட்டத்தில் உலகம் என்ற மேடடையை மீண்டும் நிர்மாணிக்கிறார்கள். இடை இடையே இறைவனையும் அதில் சேர்த்துக் கொள்கிறார்கள். கடவுள் எல்லை இல்லா சக்தி படைத்தவர் அவர் ஏற்கச் சொன்ன பாத்திரத்தில் அவர் உருவாக்கிய உலக மேடையில் நான் ஒரு சாதாரண நடிகன் என்று பேசுபவர்கள் ஏராளம். ஆனால் இவர்கள் எல்லோரும் உண்மையில் தங்கள் விருப்படியே அனைத்தையும் செய்வார்கள். இதனை நிரூபிப்பது மிக  எளிது. உலக வரலாற்றைப் பார்த்தாலே இது உண்மை என்பது புரிந்துவிடும். மனிதர்கள் பெரும்பாலும் முன்னோர்கள் வகுத்த நெறிமுறைகளையோ அல்லது ஒரு மதம் வகுத்த வழிகளிலோ உறுதியாக இருப்பதில்லை. அப்படி இருந்தால் உலகில் போர்களே நடக்காது.
       பொதுவாக மனிதனின் இயல்பு தன் போக்கில் செல்வதுதான். அதற்குக் காரணம் ஆன்மாவோடு வந்த அவன் விருப்பங்கள் மட்டும் தாம் என்று சொல்லி விட முடியாது. பெரும்பாலும் அது மனிதன் தான் வாழும் சுழலின் தாக்கத்தில் வலிந்து விழுவதால் ஏற்படுகிறது. தன்முனைப்பில் திளைப்பதால் விளைகிறது. அது சோர்வையும் விபரீத விளைவுகளையும் தரத் தொடங்கியதும் மனிதன் சற்று நிதானித்து சிந்திக்கத் தொடங்குகிறான். அவன் நிற்பது ஒரு மேடை என்ற உண்மை அவனுக்கு புரிகிறது. ஒரு நாடகம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. பின்னால் இருக்கும் காட்சித் திரை திடீரென கிழே சரிந்து விழுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது மேடையில் நடித்துக் கொண்டிருந்தவரின் நிலை எப்படி இருக்குமோ அத்தகைய இக்கட்டான நிலைக்கு மனிதன் தள்ளப்படுகிறான். அதாவது இதுவரை, எல்லாம் தன் கட்டுப்பாட்டில் நடப்பது போல் இருந்த சூழல் ஒரு நொடியில் மாறிவிட்டது. எல்லாம் ஸ்தம்பித்து விட்டது போல மனிதன் உணர்கிறான். உண்மையில் அவ்வாறு ஏதும் நிகழவில்லை. எல்லாம் எப்போதும் போல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவரவர் உள்ளமே அவ்வாறு ஒரு தோற்றத்தை உண்டாக்குகிறது. உண்மையில் இந்த உலகில் புதிதாக பிறக்கும் மனிதன் தூர் வரை வெட்டப்பட்ட மரத்தின் தண்டில் துளிர்க்கும் இலை போல உள்ளான். அவன் பழைய விருப்பங்கள், லட்சியம் எல்லாம் அவனுடன் இருக்கின்றன. ஆனால் முதலில் அவனுக்கு அவை தெளிவாகத் தெரியவில்லை. அவன் இப்பிறவியில் முதலில் இருந்து தொடங்கி வரவேண்டி இருந்தாலும், தூரும், வேரும் அப்படியே இருக்கின்றன. அவை மனித விருப்பங்களின் உறுதியைக் காட்டுகின்றன. அவன் தான் இருக்கும் சுழலுக்குத் தகுந்தவாறு தன்னை தகவமைத்துக் கொள்கிறான். அவன் அடிப்படை அபிலாசைகள்,  லட்சியம் எல்லாம் வாழ்வின் ஒரு நிலையில் நிறைவேறுகின்றன.

“கிளைகள் எல்லாம் வெட்டப்பட்ட மரம் மீண்டும் எப்படி வளர்கிறது பாருங்கள். அதன் உயிர் அழிக்கப்படாதவரை அது மீண்டும் வளரும். அதே போல மனிதனின் திறன்களும்  இறப்பில் அவன் இதயத்திற்கு திரும்பி மறைந்து கொண்டாலும் அழிந்து போவதில்லை. இவ்வாறே உயிர்கள் மறு பிறவி எடுக்கின்றன”.

என்கிறார் ரமணமகரிஷி.
       உலகம் என்பது  அனைவருக்குமான மேடை இதில் ஒருவருக்கு உரியதை இன்னொருவர் கிடைக்க விடாமல் தடுப்பது எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்க முடியாது. நிறைவையும் நிம்மதியையும் விரும்பும் மனிதன் கடல் அலையில் மிதக்கும் தக்கை போல் இருக்கிறான். அவன் தனித்தன்மையை வெளிப்படுத்த  சந்தர்ப்பம் அவனை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அப்போது அவன் தக்கை இல்லை ஒரு அலை சறுக்குப் பலகைமேல் நிற்கும் விளையாட்டு வீரன். இப்போது அலைமேல் தொடர்கிறது அவன் நடனம்.
      
 நன்றி : புதுப்புனல்       ஜனவரி 2013