Sunday, March 16, 2014

தோல் பாவை

            - துவாரகை தலைவன்

செத்த மிருகத்தின்
தோலை யுரித்து
கழுவி காயா வைத்துப்
பதப்படுத்திய பின்
வரையபட்ட ஓவியம்
திரையின் பின்னால்
உயிர் பெற்று அசைகிறது
தோல் பாவையாக.

பூமியெங்கும் பல கோடி உயிர்கள்
ஓர் உடலோடு
            கூத்தில் நடிக்க வரும்.
மனிதன் ஒருவன் வாழ்நாளில்
            காண்பது
            மிகவும் மாறுபட்ட ஒரு
தோல்பாவை கூத்து.

            மனித உடலில்
இரத்தம் பாயும் வேகத்தில்
எண்ணங்கள் அலை மோதும்.
பிடிவாதங்கள்
தசைகளோடு இறுகி
வலிமை சேர்க்கின்றன.
ஆழ்மன லட்சியங்கள்
எலும்பாக வார்க்கப்பட்டு
நிமிரும் தண்டுவடம்.
இது முதல் பகுதி.

            இரண்டாம் பகுதியில்
என்றோ ஒரு நாள்
ஒரு நொடி
ஒட்டிக் கொண்டிருக்கும்
எண்ணங்களெல்லாம் மறந்து
தன்னுள் ஒடுங்கிப் போகும்
மனிதனிடம்
எஞ்சியிருப்பது
‘நான்’ என்ற
பிரக்ஞை மட்டும்.
மற்ற எல்லாம் சற்று
மறைந்து கொண்ட பின்
தோலாக மீந்து ஒட்டியிருப்பது.
அதுவே இப்போது
நடக்கவிருக்கும் கூத்திற்கான
            தோல்பாவை.

            படபடப்பு, ஆவேசம்
அபிலாசைகள்
            அனைத்தும் ஒரு கணம்
-       ஒரு கணம் மட்டும் தான்
நின்று போகும் போது
‘நான்’ என்ற
தோல்பாவை கூத்து
தொடங்கும்.

வாழும் போதே மனிதன்
காணுமிந்த கூத்துக்கு
ஒளி வேண்டும்.
மனிதனின் உடலுக்குள்ருக்கும் உயிர்
அள்ளி வழங்குகிறது
அதற்குத் தேவையான
ஒளியை…

            சுவாரசியமாகும்
            தோல்பாவைக் கூத்து.
            கம்பீரமாக குரலெடுத்து
பாடி குதித்தாடத் தொடங்கும் தோல்பாவை.
சற்று ஓய்ந்து மீண்டும்
அசைந்து தொடரும் கூத்து.
அசைவுக்கும் ஓய்வுக்கும்
இடையில் இருப்பது
மிகக் குறுகிய கால இடைவெளி.
அதில் கவனத்தை வைக்க முனையும் மனிதன்.
            நொடியின் நுண் பகுதியில்
அசைவற்ற
‘நான்’ தோல் பாவையின்
ஓரத்தில் தெறிக்கும்
உயிரின் ஒளிக்கற்றை.

‘நான்’ என்ற தோல்பாவை உருவத்தின்
ரம் முழுவதும்
ஒளிக் கோடு ஓடி
வரைந்து காட்டும்
அதன் வடிவத்தை...
           
ஒளி வழிந்து
அதன் மேல் பரவ
தகிக்கும் தோல்பாவை.
அசைவற்ற அந்த மிகச்சிறிய கணத்தில்
            அதன் தோள்களில் குதிக்கும்
ஒளித்துகள் போட்டான்கள்
நிகழ்த்துவது
கற்பனைக்கு எட்டாத

நின்றும் நில்லாத இயக்கம்...


நன்றி : புதுப்புனல்    ஜனவரி 2014  இதழ்