Thursday, December 5, 2013

படைப்பு

     - துவாரகை தலைவன்

முட்டையின் உள்ளே
மோதும் விரல்ககள்.
உதிர்க்க வேண்டியதைத் தள்ளி
மூடிய கண்கள் கண்ட - தன்
கனவு உருவத்தை
உள்ளிருந்து செதுக்கும்.
தன் விருப்பங்களின்
களிமண்ணைக் குழைத்து
அதில் தோய்ந்து
அதற்கும் தனக்கும்
வேறுபாடு மறந்த உயிரின்
கற்பனைக் கைகள்.
மண் கலவைக்குள்
மறைந்து கொள்ளும்
அந்தக் கைகளும்
இப்போது மண்.
சிறு களிமண் குவியலுக்குள்
புதைந்திருந்து சுழன்று
தன்னைப் படைத்துக் கொள்பவனுக்குப் பெயர்
மனிதன்.


நன்றி : கவ்யா தமிழ்    ஜூலை - செப்டம்பர்  2013


Saturday, September 14, 2013

முகக்குறி

-  துவாரகை தலைவன்
       
 செத்த மரத்துண்டைச்
செதுக்கி உருப்பெரும்
முதல் அச்சு.
கலை உயிர் முளை விட்டு
உணர்வுகள் துளிர்க்கும்.
அதை வைத்து
அடுத்தடுத்து கலைஞன் செய்யும்
வார்ப்புச் சிலைகள்.
உணர்வுகள் நெளியும் வளைவுகள்
உடலெங்கும்...

இயற்கை சிற்பி
என்றோ எப்போதோ
மனிதனின் முகத்தை
கற்பனை செய்து உருவாக்கியது
பரிணாம அச்சு.
அதை வைத்து
தொடர்ந்து பல கோடி யாண்டுகளாக
அது செய்த வார்ப்புகளில்
பல நூறு மிருக முகங்களின் வரிசை...

தான் தோராயமாக
நினைவில் செதுக்கிய
மனித முகத்தை யடைவது
இயற்கையின் இலக்கு.
அதை முழுமையாகக் காணும் வரை
மரபணு மாற்ற மாயாஜாலங்கள் புரியும்.
பல்வேறு இனக்கிளைகளில்
வார்ப்புக் கொத்துகள்.


சளைக்காது இயற்கை
வார்பு வேலையைத் தொடரும்.
இறுதியில் அகப்பட்டது
இதுவரை அது தேடிக் கொண்டிருந்த
மனித முகம்.

வார்ப்பில் தெரிவது
என்றோ ஆதியில்
இயற்கை கற்பனை செய்த
ஒரு மனித முகம்.
கலைஞன் தன் படைப்பைக்
கைகளால் தொட்டு
மகிழும் வேளை.
இயற்கை அதிர்ச்சியில்
சற்று உறையும்.
வார்ப்பில் கிடைத்த
முகத்திற்குள் திரளும்
மற்றொரு முகம்
பகுத்தறிவு.
பூமி இதுவரை காணாத
புதிய முகம்.
அதிலிருப்பது
சிரிப்பா அல்லது துயரா என்ற புதிரை
அலட்சியம் செய்யும் இயற்கை.
இன்னும் வளர்கிறது அதன்
வார்ப்புக் கலை ...


 நன்றி : புதுப்புனல்    மார்ச் 2013

Monday, July 15, 2013

நிழல் கடல்

                    - துவாரகை தலைவன்

        இந்த பெரிய உலகத்தை ஒரு நாடக மேடையாக நாம் கருதுவோம். இதில் நாமெல்லாம் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நடித்து விட்டுப் போகும் நடிகர்களாக இருக்கிறோம். அதாவது உலகம் என்ற நாடகத்தில் சூழ்நிலைகள் ஒருவருக்கான கதாபாத்திரத்தை  ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கின்றன. மேலும் அவர் அந்த வேடத்தை ஏற்று நடிக்கத் தொடங்கிய பிறகும் அவை அவரை எப்படி நடிக்க வேண்டுமோ அப்படி நடிக்கச் சொல்கின்றன. இங்கே மனிதனின் தலைவிதி பற்றி நாம் பேசவில்லை. மனிதர்களின் விருப்பு வெறுப்புகளாலும், கால மாற்றங்களாலும் தொடரும் சூழ்நிலைகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். இது உலகம் கொண்டுள்ள ஒரு வகை கருத்து.
       அப்படி இல்லாமல் நாம் நம் விருப்பப்படி தான் செயல்படுகிறோம் என்ற வலுவான மற்றொரு கருத்தும் பலரிடம்  இருக்கிறது. அதன் படி நமக்கான கதாபாத்திரத்தை நாமே உருவாக்குகிறோம். மனிதன் தன் விருப்பங்களையும் தனக்கு பிடிக்காதவைகளையும் அறிவான். அதனால் அவன் தனக்கு சாதகமான கதாபாத்திரத்தை அவனே எடுத்துக் கொள்கிறான். மேலும் உலக நடப்புகள், மாறுதல்கள் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு தன் நடவடிக்கைகளை சற்று மாற்றி அமைக்கிறான். அப்போதும் அவன் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு தான் அதை நிகழ்த்துகிறான். பெரும்பாலான மனிதர்களின் எண்ணம் இதுவாகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் மனிதனின் தன்முனைப்பு அவ்வளவு வலிமையானது. அதற்கு கல்வி, பொருளாதாரம் அந்தஸ்து    இவற்றில் ஏதும் ஒரு பொருட்டல்ல. தன்முனைப்பை பொறுத்தவரை அது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது தான். அதை ஒரு சில சூழல்களில் வெளிக்காட்டும் விதத்தில்தான் மனிதர்கள் வேறுபடுகிறார்கள். அதாவது கல்வி, பொருளாதாரம், பதவி, புகழ் இவை அதிகமாக உள்ளவர்களிடம் மட்டும் தான், தானே எல்லாவற்றையும் நிகழ்த்துகிறோம் என்ற எண்ணம் வலுவாக இருக்கும் என்பது மேம்போக்கான கருத்து. அனைவரையும் தன்முனைப்பு ஆட்சி செய்வதால் ஒவ்வொருவரும் தன் செயலுக்கான காரண கர்த்தாவாக தன்னை நினைத்துக் கொள்வதில் வியப்பு ஒன்றுமில்லை.
        ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற நகைச் சுவை நாடகமாகிய ‘அஸ் யூ லைக் இட்’ நாடகத்தில் அக்யூஸ் என்ற கதாபாத்திரம் இவ்வாறு கூறுகிறது.

இந்த  உலகம் ஒரு நாடக மேடை ,
இதில் அனைத்து ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்கள் தாம்.
அவர்கள் இங்கு நுழைகிறார்கள் பிறகு வெளியேறுகிறார்கள்;
மனிதன் ஒருவன் தான் வாழும் காலத்தில் பல கதாபாத்திரங்களை ஏற்கிறான்,
அவனுக்கான காட்சிகள் அவனுடைய ஏழுவகை பருவங்கள்...


மிக எளிதாக மனித வாழ்க்கையை விளக்கி தன் தத்துவ மேதமையை இந்த வரிகளில் காட்டி விடுகிறார் ஷேக்ஸ்பியர். நவீன உலகத்தில் இந்தக் கூற்றை எத்தனை பேர் ஏற்பார்கள் என்று தெரியவில்லை. இங்கு தனக்கான மேடையை தானே உருவாக்கிக் கொள்கிறேன் என்று சொல்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
       மனிதர்கள் அனைவரும் யாரோ எழுதிய நாடகத்தில் வேஷம் ஏற்று நடிப்பவர்களா என்ற கேள்விக்கு பதில் கூற விழைகிறார் டாக்டர் வால்டர் செம்கி. இவர் சான்ஃபரான்சிஸ்கோவைச் சேர்ந்த மருத்துவர். தன்னுடைய இரண்டு நூல்கள் மூலம் அவர் உலகப் புகழ் பெற்று விட்டார். 2006 இல் எழுதிய ‘பார்ன் அகைன்’ நூலுக்குப் பிறகு 2011 இல் அவர் எழுதிய ‘ஆரிஜின் ஆஃப் சோல் அன்ட் பர்பஸ் ஆஃப் ரீ இன்கார்னேஷன்’ என்ற நூல் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
       விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சியின் மூலமாக அவர் மனிதனின் உயிர் ஒரு கருவில் தங்கி தன் பழைய விருப்பு வெறுப்புகளோடு இந்த உலகிற்கு வருகிறது என்பதை கண்டறிந்திருக்கிறார். மறு பிறப்பு பற்றிய ஆய்வில் நிபுணரான அவர் ஆய்வுகள் மூலம்  கூற விழைவது இதுதான்.

  “நான் ஒரு விஞ்ஞானி என்ற முறையில் மனிதர்களின் முந்தைய பிறப்புகளை சில ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்தேன். அவை மனிதன் ஒருவனின் இரண்டு பிறப்புகளிலும் உள்ள குணாதிசயங்கள், முகஅமைப்பு, சிந்தனை, நிகழ்வுகள், எழுதும் முறை ஆகியவையாகும். அவை மனிதனின் பல பிறப்புகளில் பெரும்பாலும் மாறுவது கிடையாது.”

செம்கியின் கருத்துப்படி உலகில் பிறக்கும் மனிதர்கள் பெரும்பாலும் தாங்கள் எப்படி இருக்க வேண்டும் எந்த சூழலில் வாழ வேண்டும் என்பதை முடிவு செய்பவர்களாக இருக்கிறார்கள். முன் பிறப்பில் ஓர் உயிர் கொண்ட விருப்பங்களை அது  விடாமல் தன்னோடு வைத்துக் கொண்டிருப்பதே அதற்குக் காரணம். இது நம்மில் பலருக்கு வியப்பை அளிப்பதாக இருக்கும். மனிதனின் விருப்பு வெறுப்புகள் அவ்வளவு வலிமையானவை.

       இவருடைய கருத்தைப் புரிந்து கொள்ளும் முன்பாக நாம் சில அடிப்படைகளை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. எளிமையாகச் சொன்னால் மனிதன் என்பவன் உடல், உயிர் ஆகிய இரண்டால் ஆனவன். தனியாக மனிதனுக்கு உயிர் என்ற ஒன்று இருப்பதை மறுப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்தக் காலத்தில் ஒன்றைப் பற்றி பேசினால் விஞ்ஞான பூர்வமான ஆதாரம் இருக்கிறதா என்று பலரும் கேட்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் மனிதனிடம் தனியாக உயிர் என்ற ஒன்று இருப்பது விஞ்ஞான பூர்வமாக ஒரு மருத்துவமனையில் நிரூபிக்கப்பட்டது. இது நடந்தது டென்மார்க்கில். உயிர் இருப்பதை நிரூபிப்பதற்காக யாரும் எந்த முயற்சியும் அங்கு செய்யவில்லை. ஒரு முப்பது வயது பெண்மணிக்கு செயற்கை  இதயம் பொருத்துவதற்காக அந்த அறுவை சிகிச்சை நடை பெறுகிறது. மற்ற உறுப்புகளை செயற்கையாக தயாரிக்கப்பட்டவைகளால் மாற்றிக் கொள்வதற்கும் இதயத்தை அவ்வாறு  மாற்றிக் கொள்வதற்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. ஏனென்றால் இதயம் தான் உடலுக்குள் இரத்தத்தைப் பாய்ச்சுகிறது. ஒரு குறிப்பிட்ட உறுப்பை எடுத்துவிட்டு  செயற்கையான உறுப்பைப் பொருத்தும் போது இரத்த ஓட்டம் தற்காலிகமாக அந்த உறுப்புக்கு மட்டும் நிறுத்தப்பட்டு பின்னர் தரப்படுகிறது. உடல் முழுவதும் இரத்தம் பாய காரணமாக இருக்கும் இதயத்திற்கு பதிலாக செயற்கை இதயம் பொருத்தும் போது உடலின் மற்ற பகுதிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு இரத்த ஓட்டம் இருக்காது. இதில் உள்ள சிக்கல் என்ன வென்றால் அப்போது மூளைக்கும் இரத்தம் செல்லாது. எனவே அறுவை சிகிச்சை நடை பெறும் போது ஒரு செயற்கை இதய- - நுரையீரல் இயந்திரம் தற்காலிகமாக இதயத்தின் இரத்த குழாய்களுடன் இணைக்கப்படும். இந்த இயந்திரம் இயற்கையான இதயமும், நுரையீரலும் செய்யும் வேலைகளை அறுவை சிகிச்சை முடியும் வரை செய்து கொண்டிருக்கும். அதாவது உடலில் இருந்து வரும் பிராணவாயு குறைவான இரத்தத்தில், பிராணவாயுவைக் கூட்டி உடலுக்கு மீண்டும் நல்ல இரத்தத்தைப் பாய்ச்சிக் கொண்டிருக்கும்.
         முதலில் உடலில் இருக்கும் இயற்கை இதயம் மருந்தினால் நிறுத்தப்பட்டு வெளியில் இருக்கும் தற்காலிக இதய-- - நுரையீரல் இயந்திரம் இயக்கப்படும். இயற்கை இதயம் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட பின் நிரந்தரமாக உடலுக்குள் இருக்க வேண்டிய பிளாஸ்டிக்காலும் உலோகத்தாலும் செய்யப்பட்ட செயற்கை இதயம் உடலுக்குள் வைக்கப்ப்படும். அதில் இணைப்புகள் கொடுக்கப்பட்ட பின் வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் இதய -- நுரையீரல் இயந்திரம் நிறுத்தப்படும். செயற்கை இதயம் செயல்பட்டு உடலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட  குறுகிய கால அளவில் அந்தப் பெண்ணின் மூளைக்கு இரத்தம் செல்லவில்லை. அதாவது மூளை செயல் இழந்த நிலைக்கு அவள் செல்ல வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவள் செயற்கை இதயம் செயல்படத் தொடங்கிவிட்டது. கண் விழித்த அந்தப் பெண் கூறியது மருத்துவர்கள் உட்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தன் உடலைப் பார்த்ததாகவும், அதில் மருத்துவர்கள் செயற்கை இதயத்தைப் பொருத்துவதை  அறுவை சிகிச்சை அறையில் தான் கண்டதாகவும் அவள் கூறினாள். இதை ஹாலுசினேஷன் என்று சொல்லப்படுகின்ற கற்பனை செய்யப்பட்ட அல்லது பொய் உணர்வு என்று மருத்துவர்களால் சொல்ல இயலவில்லை. மயக்கம், தூக்கம் இரண்டிலும் மனம் வேலை செய்ய வாய்ப்புள்ளது. அப்படி இருந்தால் அவள் கண்டதாக கூறியவற்றை கற்பனை செய்து கொண்டிருக்கிறாள் என்று எளிதாகக் கூறிவிடலாம். அவள் இருந்த நிலை மயக்கமும் அல்ல தூக்கமும்  அல்ல. மனம் வேலை செய்தால் தான் எதையாவது கற்பனை செய்ய முடியும். மனம் வேலை செய்ய மூளை இயங்கும் நிலையில் இருக்க வேண்டும். மூளைக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு இரத்த ஓட்டம் இல்லாமல் அது செயலற்று இருந்தது மருத்துவர்கள் அறிந்த ஒன்று. ஆதலால் அவர்கள் அவளுக்கு ஏற்பட்ட ஒன்று தங்களால் புரிந்து கொண்டு விளக்க முடியாத ஒன்று என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டார்கள். அந்தப் பெண் அறுவை சிகிச்சையின் முக்கிய நிகழ்வுகளை தான் நேரில் பார்த்தது போன்று விவரித்த விதம் அதை பொய் என்று அறையில் இருந்த   யாராலும் மறுத்துக் கூறிவிட  முடியாதபடி இருந்தது. நடந்தது இது தான். மூளைக்கு இரத்தம் பாய்வது நின்ற தருணத்தில் அவள் உயிர் அவள் உடலை விட்டு நீங்கிவிட்டது. அது, உடல் மீண்டும் இயங்கும் நிலைக்கு வந்தவுடன் திரும்பி நுழைந்து விட்டது. அந்தப் பெண் போல மரணத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் உடலுக்குத் திரும்பி வந்தவர்கள் ஏராளம். உலகம் முழுவதும் பல இடங்களில் இத்தகைய நிகழ்வுகள் தக்க ஆதாரங்களுடன் பதிவாகி உள்ளன. அவற்றில் டென்மார்க்கில் நடந்த  நிகழ்வு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அது விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.
        மனித உடலுக்குள் உயிர் இருக்கிறது என்ற கருத்தில் மறுக்க முடியாத உண்மை இருப்பது போல மறுபிறப்பு என்பதிலும் உண்மை இருக்கிறது. தன்னுடைய முந்தைய பிறப்பை மறக்காத சிலர், வாழ் நாளில் அதுவரை செல்லாத புது இடத்திற்கு சரியாக வழி சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல அந்த இடத்தில் இருக்கும் மனிதர்களின் பெயர்களைக் கூறுகிறார்கள். வாழ்நாளில் அதுவரை தாங்கள் சந்திக்காத அவர்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் நீண்டகாலம்  பழகியவர்கள் போலத் தெளிவாகக் கூறுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் நடந்த ஒரு நிகழ்வு இன்றுவரை பேசப்படுகிறது. அதிகம் படிக்காத  ஒரு விவசாயி திடீரென்று ஒரு சிறந்த மருத்துவரைப் போல் பேச ஆரம்பித்தார். எல்லா நோயாளர்களுக்கும் வைத்திய ஆலோசனை கூறினார். சரியான மருந்துகளை எழுதிக்கொடுத்தார். அதுமட்டுமல்ல சில சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் செய்து மருத்துவர்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.
        இத்தகைய அபூர்வ நிகழ்வுகளுக்கெல்லாம் அழுத்தமான விளக்கங்களைத் தருகிறார் டாக்டர் செம்கி. அவருடைய விளக்கங்கள் விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் மூலமாக தரப்படுபவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
        உலகில் பல மதங்கள் மறுபிறப்பை ஏற்றுக்கொள்வதில்லை. இந்து மதம் மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் மறுபிறப்பு உண்டு என்கிறது. அதுமட்டுமல்லாமல் ஓர் உயிர் புழுவாக, பறவையாக, மிருகமாக பல பிறப்புகளைத் தாண்டி மனிதனாகப் பிறக்கிறது என்று கூறுகிறது. இந்து மதத்தின் வேர்களைக் கொண்ட வேதங்கள் பிறப்பு, இறப்பு உயிர்களின் தன்மை ஆகியவை பற்றி உறுதியான கருத்துகளைச் சொல்கின்றன. மனிதன் இறந்தவுடன் உயிர் அவன் உடலை விட்டுச் செல்கிறது அப்போது அது மட்டும் பிரிந்து செல்வதில்லை. அது தன்னோடு விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றால் உருவான மனம், பிராணன் என்ற சக்தித்தொகுப்பு, உடலோடு இருந்த போது ஒட்டிக்கொண்டிருந்த ஐம்புலன்களின் உணர்வுகள் இவை அனைத்தையும் கொண்டு செல்கிறது.
         வெகு காலத்திற்கு முன்னால் மறைமலை அடிகள், இறந்த பிறகு மனித உயிர்களின் நிலை, செயல்பாடுகள் பற்றி சில நூல்களை எழுதினார். கடவுள் நம்பிக்கை சிலரிடம் அருகி வந்த காலம் அது. அப்போது விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட சக்திகள் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் என்ற நோக்கத்தில் துணிவோடு சில கருத்துகளை அவர் மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
        டாக்டர் செம்கி மனித உயிர் பற்றிய இந்து மதகோட்பாடுகளை ஏற்பதாகவே தெரிகிறது. ஏனென்றால் அவர் மனிதனின் கர்மவினைகளுக்கும் மறுபிறப்பு பற்றிய விளக்கங்களில் இடம் அளித்துள்ளார். அவருடைய கருத்துப்படி மனிதன் இறந்தவுடன் உயிரானது மீண்டும் பிறக்கும் தருணம் வரும் போது தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் ஆவலோடு செயல்படுகிறது. தாயின் வயிற்றில் கரு உருவானதும் உயிரானது அதைச் சுற்றி ஒரு சக்தி வளையத்தை உருவாக்குகிறது. அதன் மூலமாக உயிர் தன்னுடைய பழைய உருவத்தை கருவில் பதியச் செய்கிறது. ஓர் எலும்பியல் நிபுணர் மெல்லிய எலும்பு முறிவை மின்சாரம் பாய்ச்சி சரி செய்வது போன்ற நிகழ்வு இது என்கிறார் செம்கி. அதனால் முற்பிறப்பில் உயிர் கொண்ட முக அமைப்பு இந்தப் பிறப்பிலும் இருக்கும் என்று உறுதியாகக் கூறுகிறார். உயரம், உடல் எடை இவை மாறுபட்டாலும் முக அமைப்பு  மாறாது என்கிறார். மேலும் கை கால் அசைவுகள், குரல் இவை முற்பிறவி போலவே இருக்கும் என்கிறார். இவற்றை கண்டறிவதற்கு பல ஆய்வக ஆராய்ச்சிகளையும், நூல் ஆய்வுகளையும் அவர்  மேற்கொண்டிருக்கிறார். பல்லாயிரம் பேர்களை பேட்டி கண்டுள்ளார். முக்கியமாக மூவாயிரம் குழந்தைகளிடம் பேசி இருக்கிறார். அவர்கள் எல்லாம் வயதுக்கு மீறிய வியத்தகு ஆற்றல்களை குழந்தை பருவத்தில் வெளிப்படுத்தியவர்கள். அவர்களில் பலர் தங்கள் முற்பிறப்பு நிகழ்வுகளை விவரித்திருக்கிறார்கள். குழந்தைகள் பொய் கூறுதில்லை. இருந்த போதும் அவர், அவர்கள் கூறியவைகளுக்கான ஆதாரங்களையும் திரட்டி இருக்கிறார். தன்னுடைய ‘பார்ன் அகைன்’ நூலில் அவர் டாக்டர் அப்துல் கலாம் முற்பிறப்பில் திப்பு சுல்தானாக வாழ்ந்தார் என்று உறுதியாக தெரிவித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் கூற்றுக்கு ஆதாரமாக இருவரின் முக ஒற்றுமையைக் காட்டுகிறார். அடுத்து திப்புசுல்தானின் தனிதன்மை வாய்ந்த விருப்பத்தைக் கூறுகிறார். திப்பு சுல்தான் மிகப்பெரிய வீரன் மட்டுமல்ல ராக்கெட் தொழில் நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். அவன் வெள்ளைக்காரர்களை எதிர்க்க ஆரம்ப கால ராக்கெட் தொழில் நுட்பத்தை வளர்ப்பதில் பெரும் ஆர்வம் காட்டினான் என்கிறார்கள் வரலாற்றுவியலாளர்கள். இந்தியாவின் ஏவுகணை தொழில் நுட்பத்தில் இந்தியா பெற்ற வெற்றிகளில் பெரும் பங்கு வகிப்பவர் அப்துல் கலாம் என்பது அனைவரும் அறிந்ததே.
        மனித உயிரானது ஒரு கருவில் தன் உருவ அமைப்பை பதிவு செய்வதோடு தன் விருப்பங்களையும், லட்சியங்களையும் பதிவிறக்கம் செய்கிறது என்கிறார் டாக்டர் செம்கி. இங்கு ஒரு பெரிய சக்திப் பரிமாற்றம் நிகழ்கிறது. அதாவது பெற்றோரிடமிருந்து கருவுக்கு வந்த ஜீன்கள், பிறக்கப் போகும் மனிதனின் அத்தனை குணாதிசயங்களின் குறுந்தொகுப்பாக இருக்கின்றன. அவற்றோடு ஆன்மாவானது தான் கருவைச் சுற்றி ஏற்படுத்திய சக்தி வளையத்தின் மூலமாக ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்கிறது. ஜீன்கள் உடல் பருமனான மனிதனை உருவாக்குகிறது என்று வைத்துக் கொள்வோம். உயிரின் பழைய உருவமோ சற்று ஒல்லியானது. பருமனான புது உருவத்தை ஏற்றுக்கொள்ளும் உயிர் ஒரு சில  மாறுதல்களை வலியுறுத்துகிறது. அதனால் முகத்தில் கண்களும், மூக்கும் பழைய உருவத்தை ஒத்து இருக்கும் படியாக உருவாகின்றன. உடல் அமைப்பைப் போன்றே குணாதிசயங்ககள், தனித்திறமைகள்  ஆகியவற்றை பதிவு செய்வதிலும் ஒரு புரிந்துணர்வு ஏற்படுகிறது. அதன்படி பெற்றோரிடமிருந்து சில குணங்கள் பதிவானாலும், உயிரின் முற்பிறவி விருப்பங்களே அதிகமாக புதிதாக உலகுக்கு வரும் மனிதனிடம் ஒட்டிக் கொள்கின்றன. இங்கு  உலகில் பிறக்கும் மனிதர்கள் ஏற்கனவே யாரோ எழுதி வைத்த நாடகத்தில் சொன்னபடி நடித்துவிட்டு போகும் நடிகர்களா அல்லது தங்கள் விருப்பம் போல் செயல்படுபவர்களா என்ற கேள்விக்கான விடை ஒளிந்துள்ளது.
       நாமெல்லோரும் உலகமென்ற நாடக மேடையில் நடிகர்கள் என்ற ஷேக்ஸ்பியரின் கருத்தை யாரும் மறுக்க முடியாது. மனிதன் இந்த வேகமான உலகில் சூழ்நிலைகளால் ஆட்டுவிக்கப்படுகிறான். இதனை உணர்ந்து கொண்ட யாருக்கும் அந்த மாபெரும் கவிஞனின் கூற்றில் இருக்கும் உண்மை புரியும். டாக்டர் செம்கி போன்ற சுதந்திரமான ஆய்வாளர்கள் அந்த வரிகளில் ஒளிந்திருக்கும் உண்மைக்கான ஆதாரங்களை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து வாசகர்களுக்குத் தர முயல்கிறார்கள்.
       டாக்டர் செம்கி கருத்துகளில்  மறுபிறவிக் கோட்பாடுகளில் அவருக்கு இருக்கும் அளவு கடந்த ஆர்வம் தெளிவாகத் தெரிகிறது. மனிதர்களின் அடுத்து அடுத்து வரும் பிறப்புகளில் நாடு, இனம், மொழி இவைகளைப் பொறுத்த வரையில் அவை எப்படிவேண்டுமானாலும் மாறி இருக்க வாய்ப்புள்ளது. அதாவது மனிதன் ஒருவன் இந்தப்பிறவியில் ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அவன் அடுத்து வரும் பிறவியில் அதே நாட்டில் அதே இனத்தில் பிறப்பான் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. செம்கி இதனை பல முன் ஜென்ம நினைவுகள் மாறாத மனிதர்களைப் பேட்டி கண்டு திரட்டிய ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
       எனவே இனம், மொழி, எல்லாமே மனிதர்கள் ஒரு பிறவியில் ஏற்கும் வேடங்கள் தாம். செம்கி போன்ற மேதைகளின் கூற்றுப்படி மனிதர்கள் தங்களுக்கான வேடத்தை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட ஒரு சூழல், நடிக்க வலியுறுத்தும் கதாபாத்திரத்தை நடித்து விட்டுப் போகிறவர்கள் அல்ல.
       செம்கி போன்ற ஆய்வாளர்கள் முற்பிறவி நினைவு வந்தவர்களைத் தாம் மிகுதியாக தங்கள் ஆய்வுக்கு உட்படுத்துகிறார்கள். உலகின் மொத்த மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டால் இவர்கள் மிகவும் குறைவானவர்களே. செம்கி ஒரு மனோதத்துவ நிபுணர். அவர் தன்னிடம் வருகின்ற நோயாளர்களை அதாவது முற்பிறவி நினைவுகளால் சற்று குழப்பம் அடைந்தவர்களை குணப்படுத்தும் சிகிசைக்கு தன் ஆய்வு முடிவுகளைப் பயன்படுத்துகிறார். ஒரு புகழ் பெற்ற  ஓவியர் மீண்டும் பிறந்து தற்செயலாக தன் ஓவியங்கள் வைக்கப்பட்ட அரங்கைக் காண்கிறார். இப்பிறவியிலும் அவர் ஓவியர். அவர் எளிதாக அரங்கத்தில் கண்ட ஓவியங்களின் மாதிரிகளை வரைகிறார். செம்கி அவரிடம் மறுபிறப்பு என்பது உண்மை என்று விளக்குகிறார். மேலும் அவர் குழப்பம் அடையாமல் தனக்கு விருப்பமான பணியை இப்பிறவியிலும் தொடரலாம் என்கிறார். இது ஒரு மகத்தான மனோதத்துவ சிகிச்சை.
        மனித உடல்களை ஆராய்கினற விலங்கியலாளர்களும், மருத்துவர்களும் தங்கள் ஆய்வுக்கு ஒரு சில மனித உடல்களைத் தாம் அறுத்துப் பார்க்கிறார்கள். அதன் மூலம்  மனித இனத்திற்குப் பொதுவான நல்ல முடிவுகளைக் கண்டு மக்களின் நோய்களையும், உடல் குறைபாடுகளையும் நீக்குகிறார்கள். அது போலவே டாக்டர் செம்கி போன்றவர்கள் சில ஆயிரம் மக்களின் உயிர் பற்றிய ஆய்வு முடிவுகளை வைத்து பல புதிர்களுக்கு விடை காண முயன்று வெற்றி அடைந்திருக்கிறார்கள். அவர்களுடைய முடிவுகளும் கருதுகோள்களும் விஞ்ஞான பூர்வமானவை.
        இதில் ஒன்றை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறக் கூடாது. மனிதப் பிறவியின் மகத்துவமே ஒரு குழந்தை உலகைப் புதிதாக முதலில் காண்பதில் தான் இருக்கிறது. மொழியை ‘அ’ என்ற ஒலிக் குறியீட்டில் தொடங்கி அதே போன்று பலவற்றை ஒலித்துப் பழகுகின்றது குழந்தை. பிறகு மெல்ல மெல்ல வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கி, வரிகளைக் கூறுவது மூலமாக தகவல் பரிமாற்றம் செய்கிறது. அது உலகையும், மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் பார்த்து ஒரு மன உலகை உருவாக்கத் தொடங்குகிறது. அக்குழந்தையால், பெரிய மனிதனாக வளர்ந்தவுடன் தனக்கான மேடையையும் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்தையும் உள் மனதில் காணமுடிகிறது. கருவில் பதிவான முற்பிறவி விருப்பங்கள் ஒருபுறம் இருக்கின்றன. இப்போது புதிய சூழலில் மனிதனுக்குள் சில விருப்பங்கள், லட்சியங்கள் தோன்றுகின்றன. இப்பிறவியில் உள்ள நினைவுகள் தாம் கிட்டத்தட்ட அனைத்து மனிதர்களிடமும் இருப்பதால் அவர்களை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வோம். இப்போது மிகவும் முன்னேறி விட்டதாக நாம் கருதிக்கொண்டிருக்கும் இந்த நவீன உலகம் என்பது ஒரு வகையில் பண்டோரா பெட்டி போன்று உள்ளது. அதற்குள் இருந்து நினைத்ததெல்லாம் வருகின்றன. யானை, பாம்பு, குதிரை, சிங்கம், குடை பலூன்கள் என்று வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை மக்களுக்கு அதிர்ச்சி கலந்த பரபரப்பான வாழ்கையையே தந்துள்ளன. இதில் மனிதர்கள் அனைவருக்கும் வருகின்ற ஐயப்பாடு ஒன்றுதான். நாமே இயங்குகிறோமா அல்லது இந்த வாழ்க்கை சூழல் என்ற மேடை தரும் பாத்திரத்தில் நடிக்கிறோமா என்பதுதான்.
       மனிதன் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். அது நாம் எல்லோரும் இந்த வாழ்க்கையை நாமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். நாம் அறியாத போதும் இந்த வாழ்க்கை சூழலோடு நமக்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. எனவே இந்த மேடையில் நாம் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தில் ஓர் ஆழமான அர்த்தம் உள்ளது. ஆதலால் நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்வில் ஒரு பொறுப்புணர்வு  நமக்குள் நுழைந்து விடுகிறது. இந்த உலக வாழ்க்கை என் மேல் திணிக்கப்பட்டுள்ளது. படைத்தவனுக்கு பொழுது போகாமல் இருக்கலாம் அதனால் என்னைப் படைத்து விளையாடுகிறான் என்றெல்லாம் சொல்வதில் எந்தப் பொருளும் இல்லை. உலக வாழ்வின் மேடைகளை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். பிறகு அதை மாற்றி அமைக்கிறார்கள். ஒரு நாள் தற்காலிகமாக மேடையை உடைத்துப் போடுகிறார்கள். மீண்டும் புத்துணர்வோடு எல்லோரும் சேர்ந்து ஒரு காலகட்டத்தில் உலகம் என்ற மேடடையை மீண்டும் நிர்மாணிக்கிறார்கள். இடை இடையே இறைவனையும் அதில் சேர்த்துக் கொள்கிறார்கள். கடவுள் எல்லை இல்லா சக்தி படைத்தவர் அவர் ஏற்கச் சொன்ன பாத்திரத்தில் அவர் உருவாக்கிய உலக மேடையில் நான் ஒரு சாதாரண நடிகன் என்று பேசுபவர்கள் ஏராளம். ஆனால் இவர்கள் எல்லோரும் உண்மையில் தங்கள் விருப்படியே அனைத்தையும் செய்வார்கள். இதனை நிரூபிப்பது மிக  எளிது. உலக வரலாற்றைப் பார்த்தாலே இது உண்மை என்பது புரிந்துவிடும். மனிதர்கள் பெரும்பாலும் முன்னோர்கள் வகுத்த நெறிமுறைகளையோ அல்லது ஒரு மதம் வகுத்த வழிகளிலோ உறுதியாக இருப்பதில்லை. அப்படி இருந்தால் உலகில் போர்களே நடக்காது.
       பொதுவாக மனிதனின் இயல்பு தன் போக்கில் செல்வதுதான். அதற்குக் காரணம் ஆன்மாவோடு வந்த அவன் விருப்பங்கள் மட்டும் தாம் என்று சொல்லி விட முடியாது. பெரும்பாலும் அது மனிதன் தான் வாழும் சுழலின் தாக்கத்தில் வலிந்து விழுவதால் ஏற்படுகிறது. தன்முனைப்பில் திளைப்பதால் விளைகிறது. அது சோர்வையும் விபரீத விளைவுகளையும் தரத் தொடங்கியதும் மனிதன் சற்று நிதானித்து சிந்திக்கத் தொடங்குகிறான். அவன் நிற்பது ஒரு மேடை என்ற உண்மை அவனுக்கு புரிகிறது. ஒரு நாடகம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. பின்னால் இருக்கும் காட்சித் திரை திடீரென கிழே சரிந்து விழுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது மேடையில் நடித்துக் கொண்டிருந்தவரின் நிலை எப்படி இருக்குமோ அத்தகைய இக்கட்டான நிலைக்கு மனிதன் தள்ளப்படுகிறான். அதாவது இதுவரை, எல்லாம் தன் கட்டுப்பாட்டில் நடப்பது போல் இருந்த சூழல் ஒரு நொடியில் மாறிவிட்டது. எல்லாம் ஸ்தம்பித்து விட்டது போல மனிதன் உணர்கிறான். உண்மையில் அவ்வாறு ஏதும் நிகழவில்லை. எல்லாம் எப்போதும் போல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவரவர் உள்ளமே அவ்வாறு ஒரு தோற்றத்தை உண்டாக்குகிறது. உண்மையில் இந்த உலகில் புதிதாக பிறக்கும் மனிதன் தூர் வரை வெட்டப்பட்ட மரத்தின் தண்டில் துளிர்க்கும் இலை போல உள்ளான். அவன் பழைய விருப்பங்கள், லட்சியம் எல்லாம் அவனுடன் இருக்கின்றன. ஆனால் முதலில் அவனுக்கு அவை தெளிவாகத் தெரியவில்லை. அவன் இப்பிறவியில் முதலில் இருந்து தொடங்கி வரவேண்டி இருந்தாலும், தூரும், வேரும் அப்படியே இருக்கின்றன. அவை மனித விருப்பங்களின் உறுதியைக் காட்டுகின்றன. அவன் தான் இருக்கும் சுழலுக்குத் தகுந்தவாறு தன்னை தகவமைத்துக் கொள்கிறான். அவன் அடிப்படை அபிலாசைகள்,  லட்சியம் எல்லாம் வாழ்வின் ஒரு நிலையில் நிறைவேறுகின்றன.

“கிளைகள் எல்லாம் வெட்டப்பட்ட மரம் மீண்டும் எப்படி வளர்கிறது பாருங்கள். அதன் உயிர் அழிக்கப்படாதவரை அது மீண்டும் வளரும். அதே போல மனிதனின் திறன்களும்  இறப்பில் அவன் இதயத்திற்கு திரும்பி மறைந்து கொண்டாலும் அழிந்து போவதில்லை. இவ்வாறே உயிர்கள் மறு பிறவி எடுக்கின்றன”.

என்கிறார் ரமணமகரிஷி.
       உலகம் என்பது  அனைவருக்குமான மேடை இதில் ஒருவருக்கு உரியதை இன்னொருவர் கிடைக்க விடாமல் தடுப்பது எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்க முடியாது. நிறைவையும் நிம்மதியையும் விரும்பும் மனிதன் கடல் அலையில் மிதக்கும் தக்கை போல் இருக்கிறான். அவன் தனித்தன்மையை வெளிப்படுத்த  சந்தர்ப்பம் அவனை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அப்போது அவன் தக்கை இல்லை ஒரு அலை சறுக்குப் பலகைமேல் நிற்கும் விளையாட்டு வீரன். இப்போது அலைமேல் தொடர்கிறது அவன் நடனம்.
      
 நன்றி : புதுப்புனல்       ஜனவரி 2013

Friday, June 7, 2013

வால் நட்சத்திரம்


                 _  துவாரகை தலைவன்

அலுவலக பேட் மிண்டன் குழுவில்
மிகச் சிறந்தவர் அவர் தான்.
வாயில்லாப் பூச்சி.
ஆனால் விளையாடும் போது
புள்ளிகளைக் கொத்தும் பருந்தாகிறார்.

அவர் பந்தைத் திருப்பும் லாவகத்தை 
எதிரணியில் உள்ளவர்கள் பார்த்து 
மயங்குவதுண்டு.
ஆடத்தெரியாதவர்கள்
அவர் அடிக்கும் பந்தின்
முன்னும் பின்னும்
பாக்கு உமிழ்நீரை
துப்பிப்பார்த்தார்கள்.
அது ஒவ்வொரு முறையும்
பந்தோடு வந்து 
அவர்கள் சட்டையில் படிகிறது.

மைதானத்தை
சரி பாதியாகப் பிரித்து
வலை கட்டுகிறார்கள்.
விளையாடும் போது
நான் கவனித்திருக்கிறேன்.
அவரையும் சிலர் இரண்டாகப்
பிரிக்கிறார்கள்.

அவர் சில வேளை அணிமாறி விளயாடுகிறார்.
அப்போது 
தங்களைக் கைவிடமாட்டார் என்பது 
சற்று முன்னர்  
அவரைத் தூற்றியவர்களின் நம்பிக்கை.

இரண்டாகப் பிரிக்கப்பட்ட அவர்  
ஒரு பகுதியில்
உமிழ்நீர் விளையாட்டுக்கு
உடன்பட வேண்டும்.
எதிர்ப்பைக் காட்டி 
அந்த சண்டை விளையாட்டுச் சேற்றுக்குள் 
அவரும் குதிக்க வேண்டுமென்று வரும் ஆவல்.
அவர் அணிமாறி 
அவர்களோடு சேர்ந்து ஆட வரும் போது தோன்றும் 
எதிர்பார்ப்பு வேறு.
அவருக்குள் இருக்கும்
இரண்டாம் பகுதி
எதிர் பக்கம் பந்தை விரட்டியடிக்கும் வேகத்தோடு 
அவர்கள் மீது இப்போது
நேசத்தைப் பொழிய வேண்டும்.

அவர்களை அறியாமல்,
சற்று முன் கண்களுக்கு
எதிரியாக இருந்தவரின்
ஒரு பாதியை 
இப்போது நேசிக்கிறார்கள்.

பந்து அடிக்கப்படும் போது
எப்பக்கமது மட்டையால் தொடப்படுமென்று
யாரும் அறியார்.
பந்து தன்னை இரண்டாகப்
பிரித்துக் கொள்வதில்லை.
பந்தைத் திருப்பி அடிக்கும் நாம் தாம் 
வேறுபாடு காண்கிறோம்.
பந்தை மட்டை அடிக்கும் பக்கம்
நமக்கு வேண்டாத பக்கம்.
நம் கோபத்தின் விசையைப் பெற்று  போவது.
பந்தின் அடுத்த பாதி
நாம் நினைத்த திசையில் சென்று 
வெற்றியை
நமக்குக் காட்ட பாயும்.
அதனால் அது நம் பிரியத்திற்குரியது.

வாழ்வில் தொடரும்
நிகழ்வுகளின் ஆட்டத்தில்
முடிந்தவரை நேர்த்தியாகப்
பங்கேற்பவர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் அடிக்கும் பந்து செல்லும் திசையை
சரியாக சிலர் அவதானிப்பது 
ஆடுவதற்காக அல்ல
பந்தின் பின்னால்
உமிழ் நீரையும்
சில வேளை 
பன்னீரையும் தெளிக்க.


விண்கற்களையும், தூசியையும்
இழுத்துக் கொண்டு 
வானத்தில் செல்லும் வால் நட்சத்திரம் 
பந்தாகப் பறக்கும் அவர்கள் ஆடுகளத்தில்... 

                நன்றி : புதுப்புனல் ஜனவரி 2013
                   

Friday, April 5, 2013

இயற்கை செயற்கை ரசவாதம்


                                                                        - துவாரகை தலைவன்
பூமியின் மேல் பரப்பில் எங்கும் காணமுடியாத உயரமான மலையாக இமயமலை இருக்கிறது.மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாக நயகரா நீர்வீழ்ச்சி இருக்கிறது.உலகம் முழுவதும் பல மலைகள் உள்ளன.அவற்றில் அழகான வளமான மலைகள் நிறைய உள்ளன.ஆனால்  அவற்றுள் இமயமலை முதன்மையானதாக இருக்கிறது.அது போலவே நயகரா நீர்வீழ்ச்சி அருவிகளுக்கெல்லாம் அரசியாக உள்ளது.இயற்கையின் படைப்பில் உள்ள அனைத்திலுமே மிகசிறந்த ஒன்று இருக்கும்.அது சிறந்த மலராக இருக்கலாம் அல்லது அழகிய பறவையாகவும் இருக்கலாம்.எல்லாமே தற்செயலாக நடந்தவை அல்லது நடப்பவை என்று நாம் கூறலாம்.அதே வேளையில் இயற்கை தான் வெளிப்படுத்துகின்ற சிறப்புத் தன்மைகளை ஒரு சில இடங்களில் குவித்து தன் உச்ச பட்சத் தன்மையைக் காட்ட முனைகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது.அழகை மட்டுமல்ல  இன்னும் பல தன்மைகளை அது ஓரிடத்தில் குவித்து அவற்றின் உச்ச நிலைகளை வெளிபடுத்த முனைகிறது.மற்ற மிருகங்களை வேட்டையாடி உண்ணும் ஒரு மிருகத்திடம் வலிமையும், விழிப்புநிலையும், சாதுர்யமும் வியத்தகு அளவில் மிக அதிகமாக இருப்பதற்கு காரணம் இயற்கை.இத்தன்மையின் தொடர்ச்சியாகவே பகுத்தறிவோடு கூடிய மனிதனை இயற்கை பரிணாம வளர்ச்சி மூலமாக உருவாக்கியுள்ளது.மனித இனமே அறிவாற்றலின் உச்ச நிலையைக் காட்டும் இயற்கையின் படைப்பு.இந்த மனித இனத்தில் ஒரு துறையிலோ சில துறைகளிலோ மிகப்பெரிய அளவில் வற்றாத திறனை வெளிப்படுத்தும் மனிதர்கள் இருக்கிறார்கள்.இயற்கை என்ற கலைஞனின் தலை சிறந்த படைப்புகளாகவே அவர்கள் இருக்க வேண்டும்.
                 மனிதன்  மிருகத்திலிருந்து பரிணாம வளர்ச்சியினால் பகுத்தறியுள்ள மனிதனாக மாறி இருக்கிறான். அதற்கு முக்கிய காராணியாக இருந்தது மூளையின் அளவு. விஞ்ஞானிகள் கொரிலா குரங்குகளைத் தான் மனிதனின் மூதாதையர்களாகக் கருதுகிறார்கள்.பல லட்சம் ஆண்டுகள் தொடர்ந்த பரிணாம வளர்ச்சியில் அவற்றின் மூளை அளவைக் காட்டிலும் மனிதனின் மூளை அளவு பெரிதாகி இருக்கிறது.அறிவுத்திறன், கலைத்திறன் ஆகியவை மனிதர்களை மிருகங்களிடமிருந்து சரியாக வேறுபடுத்திக் காட்டுகின்றன.இவற்றில்  அறிவுத்திறன் வளர்ச்சி மனித இன வரலாற்றில் முக்கியமான அதிசயத்தக்க திருப்புமுனை.ஏனென்றால் மனிதனின் அறிவாற்றல் வெளிப்பாட்டில் பூமி இதுவரை கண்டிராத வினோதமான ஒன்று முளைத்தது.அது இயற்கையிலிருந்து சற்று மாறுபட்டது.மனிதனோடு மட்டுமே தொடர்புடைய ஒன்று.அதுதான் செய்கை தன்மை.ஒரு குரங்கானது மழை தன் தலை மீது விழுவதைத் தவிர்க்க ஒரு பெரிய இலையை எடுத்து தலைமேல் வைத்துப் பிடித்துக்கொண்டால் அது செயற்கை அல்ல.ஆனால் ஒரு மனிதன் உலோகத்தாலும், துணியாலும் இன்னும் சில பொருள்களாலும் செய்யப்பட்ட ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு நடந்தால் அவன் செல்லும் பாதை செயற்கையின் பாதை.செயற்கைத் தன்மையைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளும் போதுதான் மனிதனின் அளப்பரிய அறிவாற்றலின் தன்மையை நுட்பமாக ஆராய முடியும்.
              மனிதனின் அறிவு பெரும் வளர்ச்சி கண்ட போது மனமும் வளர்ந்து அதன் தேவைகள் விரிவடைந்து செயற்கைதன்மை அதிகமாக பரவியது.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனிதன் இந்த நவீன உலகத்திற்கு வருவதாக வைத்துக் கொள்வோம்.அவன் இது, தான் வாழ்ந்த உலகமே அல்ல என்று கூறுவான்.நாம் பயன்படுத்தும் கைக்கெடிகாரம் முதல் பயணிக்கும் வாகனங்கள் வரை எல்லாமே செயற்கையானவை.நாம் உண்ணும் உணவும் முழுக்க முழுக்க இயற்கையானது கிடையாது.செயற்கை நிறமிகள், தண்ணீரில் சேர்க்கப்படும் குளோரின் இவைகளைத் தவிர்த்து நம்மால் உண்ணவோ நீரைப்பருகவோ இயலாது.அந்த அளவுக்கு செயற்கைப் பொருள்கள் நம் வாழ்வில் கலந்துள்ளன.நாம்  அணிகின்ற ஆடைகள் அவற்றில் உள்ள பொத்தான்கள்,வாசனை திரவியங்கள்,இன்னும் மருந்து மாத்திரைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
           மனிதன் இயற்கையின் படைப்பு.மனிதன் இயற்கையால் செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டவன்.ஆகையால் மனிதன் கண்டுபிடிப்பது, உருவாக்குவது, உற்பத்தி செய்வது எல்லாம் இயற்கை என்று சிலர் வாதம் செய்யலாம்.அது மேம்போக்கானது.அதை ஏற்றுக்கொள்ள முடியாது.ஒரு மரம் விதையிலிருந்து வளர்கிறது.அது செடியாகி பின் வளர்ந்து கிளைகளைப் பரப்பி மரமாகிறது.திடீரென்று ஒருநாள் அதன் கிளைகளின் நுனியில் மின்சார விளக்குகள் ஒளிர்கின்றன என்று வைத்துக்கொள்வோம்.அந்த மின்சார விளக்குகள் மின் கம்பிகளை இணைத்து மின்சாரம் பாய்ச்சப்பட்டு எரியும் விளக்குகள் அல்ல.அவை மலர் போல கனிபோல கிளையில் முளைத்து எரியவும் செய்கின்றன என்று கற்பனை செய்வோம்.இப்படிப்பட்ட வினோத வளர்ச்சி தான் பரிணாமச் சங்கிலியின் தற்போதைய கடைசிக் கண்ணியாக இருக்கும் மனிதனால் வெளிப்படுத்தப்படுகிறது.மனிதன் சுவாசிப்பது உண்ட உணவு செரித்து இரத்தமாக மாறி உடலெங்கும் பாய்வது போன்று அனைத்தும்  இயற்கையாகத்தான் நடைபெறுகின்றன.அதே வேளையில் மனிதனின் அதிசயத்தக்க அறிவாற்றல் அதன் விளைவுகள் இயற்கையிலிருந்து துருத்திக் கொண்டிருக்கின்றன.அவை மரத்தில் முளைத்த மின்சார விளக்கு பூக்கள் போல உள்ளன.இதை யாராலும் மறுக்க முடியாது.
              செயற்கை, இயற்கை ஆகியவற்றின் வேறுபாடுகள் பற்றிய சந்தேகங்கள் நமக்கு எழுவதற்கு ஒரு அடிப்படைக் காரணம்  உள்ளது.மனிதன் அறிவு வளர்ச்சியில் மிகுந்து மற்ற உயிரனங்களைவிட மேம்பட்டவனாக மாறினான்.அப்போது மனிதனிடம் முளைத்த பகுத்தறிவால் ஒரு விபத்து நிகழ்ந்தது. அது உலகம் என்பது முழுக்க முழுக்க மனிதனுக்குச் சொந்தமான இடம் என்ற கருத்து அவனிடம் ஆழமாக வேரூன்றியது தான். இது  சிறிது சிறிதாக அவனை இயற்கையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வைத்தது.தனக்கு கிடைத்த அபூர்வமான பகுத்தறிவின் மூலமாக எல்லாவற்றையும் ஆழமாக ஆராய்ந்து தொகுத்துப் பார்க்க வேண்டியவன் மனிதன்.அவன் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் இன்னும் தெளிவாக தான் இயற்கையால் படைக்கப்பட்டு அதனோடு எப்போதும் கலந்திருப்பவன் என்பதை உணர வேண்டியவன்.ஆனால் இவற்றிற்கு மாறாக அவன்  சிந்தனையும் செயலும் எதிர் திசையில் சென்றது மிகவும் வியப்பான ஒன்று.மனிதன் பல வேளைகளில் முரண்டு பிடிக்கும் இயற்கையைக் கட்டியாளும் ஒரு எஜமானாகத் தன்னை எண்ணிக் கொண்டான்.அதை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு கொஞ்சம் வெற்றியும் கண்டான்.அப்போது முதல் முழுக்க முழுக்க தன்னை இயற்கையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கத் தொடங்கினான்.அங்கே எது இயற்கை எது செயற்கை  என்ற ஐயப்பாட்டிற்கான விதை விதைக்கப்பட்டது.அது காலம் செல்லச் செல்ல சிறிது சிறிதாக வளர்ந்தது.பின்னர் விஞ்ஞான அறிவின் வியத்தகு வளர்ச்சி நவீன மனிதனை ஒரு பெரும் போதையில் தள்ளியது.அதில் அகந்தை கலந்த ஒரு வித புது ஆனந்தத்தை மனிதன் உணர்கிறான்.அதன் மயக்கத்தில் அவன் எண்ணத்தில் உதிப்பது ஒன்றுதான்.மனிதன் என்பவன் செயற்கையாக ஒரு பிரமாண்ட உலகத்தை இந்த பூமியில் படைத்த நவீன பிரம்மா.இது சிலரின் பிரகடனமாகக் கூட இருக்கலாம்.ஆனால் இது ஒரு வித மயக்கத்தில் வெளிவரும் வார்த்தைகள்.அதனால் மனிதன் ஒன்றை கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறி இருக்க வாய்ப்புள்ளது.பிரமாண்டமான கட்டமைப்பு வளர்ச்சியை ஏற்படுத்தி,மேலும் அது உலகம் முழுவதும் பரவுவதற்கும் வழிமுறைகளைக் காண்பவன் மனிதன்.இவற்றிற்கு என்றுமே குறையாத விருப்பங்களும், ஆவலும் கலந்த எரிபொருள் ஒன்று மனிதன் என்ற என்ஜினுக்குத் தேவை.அதை யார் அவனுக்கு தருவது?இயற்கை ஒன்றால் மட்டுமே மனிதனுக்கு அதை வழங்க  முடியும்.ஏனென்றால் மனிதன் என்பவன் இயற்கையின் படைப்பு.இதுவே நவீன உலகின் வளர்ச்சி மயக்கத்தில் மனிதன் அடிக்கடி மறந்து போவது.
                மனிதன் செயற்கையாக பலவற்றை உருவாக்குவதும் அதைக் கண்டு மகிழ்வதும் தானே விரும்பி கலந்து கொள்ளும் ஒரு வித விளையாட்டு.நீர் ஆவியாகி மேகமாக மாறுகிறது.அது நீராக விழும் போது துளிகளாக பூமியை நோக்கி வருகின்றன.இந்த நீர்த் துளிகள் தான் மனிதனும் அவன் சிந்தனகளும்.இயற்கையிலிருந்து புறப்பட்டு அறிவாற்றலில் உயர்ந்து மேகமாக திரண்டு இருக்கிறது மனித இனம்.அது துளியாக மாறும் போது தன்னை பூமியிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறது.அதே வேளையில் பயணிக்கிறது.அது மீண்டும் பூமியில் உள்ள நீரில் கலக்கிறது.அது போல மனிதனும் தன்னை வேறுபடுத்திப் பார்த்த தன் சிந்தனைகளோடு மீண்டும் மரணத்தில் இயற்கையோடு கலந்துவிடுகிறான்.அப்போது அவன் தன் ஆயுள் முழுவதும் வளர்த்த எண்ணங்களும் கருத்துகளும் அறிவுதிறன் வெளிபாடுகளும் வீணாவதில்லை.மழைத் துளியானது பூமியை நோக்கி வரும் போது மிக சிறிய அளவிலாவது வெப்பத்தாலும் காற்றாலும் கொஞ்சம் ஆவியாகி மிதக்கும்.அது போல உயர்ந்த மனிதர்களின் சிந்தனைகள் நிலைத்து அடுத்த தலைமுறைக்குச் செல்லும்.
                ஒரு தெரு நாய் ரப்பர் துண்டு ஒன்றை மாமிசம் என்று தவறாகக் கருதி அதை விழுங்கிவிட்டு வயிற்று வலியல் அவதிப்படுகிறது.அதே தெருவில் ஒரு காகம் ஒரு மின்வயர் துண்டைக் கண்டெடுக்கிறது.அதைத் தன் கூட்டில் வைத்து அதை பலப்படுத்துகிறது.ஒரு சரணாலயத்தில் பார்வையாளர் ஒருவர் வீசிவிட்டுப் போன பாலித்தின் பையில் கொஞ்சம் உணவுப் பொருள் மிச்சம் இருக்கிறது.ஒரு குட்டியானை அதை தின்று அடுத்த நாள் சாலையோரம் இறந்து கிடக்கிறது.உயிரியல் பூங்கா ஒன்றில் அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி அபூர்வக் கரடிகள் உள்ளன.அதில் ஒன்று நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் கிடந்தது.மருத்துவர்களும், உதவியாளர்களும் அதற்கு சிகிச்சை அளித்தார்கள்.அது அதிசயத் தக்க வகையில் மறுவாழ்வு பெற்றது.அது மட்டுமல்ல சென்ற வாரம் ஓர் அழகிய குட்டியை ஈன்றிருக்கிறது.செயற்கைக்குத் தொடர்பில்லாத மிருகங்களும், பறவைகளும் மனிதன் உண்டாக்கிய செயற்கை உலகில்  தங்களை தகவவமைத்துக் கொண்டு வாழத் தொடங்கி விட்டன.இதில் ஒன்றை இயற்கை மற்றொன்றை செயற்கை என்று பிரித்துக் காண்பது கொஞ்சம் சிக்கலான வேலை.நாம் கேட்கும் இசையில் இரண்டு இசைக்கருவிகள் இணைந்து ஒலிக்கின்றன.அந்த இசையை நாம் வாழும் வாழ்க்கையாக உணர்கிறோம்.இசையில் லயித்திருக்கும் போது இரண்டு இசைக்கருவிகளின் ஓசைகளை சற்று தனித்தனியாக நம்மால் கேட்க இயலும்.அது போல இந்த அவசர உலகில் இயற்கையையும்,செயற்கையையும் ஒருவரால் பிரித்து உணர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.அப்படி இருந்தும் நாம் சில வேளைகளில் பூமியில் நடக்கும் எல்லாமே இயற்கை தான் என்று சொல்லத் துணிகிறோம். விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களுடன் மனிதர்களாகிய நாம் இயற்கையிலிருந்து வந்தவர்கள் என்று நிறுவுகிறோம். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் இயற்கை ஆற்றலின் புதிய வடிவங்கள் தான் என்று வாதிடுகிறோம்.ஆனால் விண்ணில் சீறிப்பாய்ந்து செல்லும் ஒரு பிரமாண்டமான ராக்கெட்டைப் பார்க்கும் மனிதன் ஒருவனால்  இவற்றை ஒப்புக்கொள்ள இயலாது.அவன் இதுவரை கொண்ட கருத்து அங்கே உடைந்து போகிறது.
            ஒரு நிலையில் செயற்கை என்பது எது என்று உறுதியாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் மனிதனுக்கு ஏற்படுகிறது.குறைந்த பட்சம் இயற்கைக்கும், செயற்கைக்கும் உள்ள அழுத்தமான வேறுபாட்டையாவது சொல்ல வேண்டும்.பொதுவாக ஏதாவது ஒன்றைச் சொல்லி தப்பிக்க இயலாது.  செயற்கை என்று அழைக்கபடுகின்றவைகளுக்குள் நிச்சயமாக  ஏதோ ஒரு மாறுபட்ட விஷயம் அடங்கி இருக்கிறது.மனிதனின் வியத்தகு அறிவாற்றலுக்கும், அதற்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது.
             மனிதனின் செயற்கை படைப்புக்கு, விமானம் ஒரு சிறந்த உதாரணம்.ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உலகை பல கோடி ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருந்த டைனோசர் இனம் அழிந்து போனது.பல நூறு வகையான டைனோசர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்திருக்கின்றன.ராட்சத எரிகல் ஒன்று பெரும் வேகத்தோடு பூமியைத் தாக்கியது.அப்போது எழுந்த வெப்பத்தினாலும் அதன் பின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூமியை சூழ்ந்த தூசி,மேகப் படலத்தினாலும் டைனோசர் இனம் அழிந்து போனது.ஆனால் டைனோசர் இனம் அற்புதமான ஓர் எச்சத்தை பூமியில் விட்டுச் சென்றது.அது தான் பறவை இனம்.ஒரு சில விஞ்ஞானிகள் இந்த கருத்தை விவாதத்திற்கு உட்படுத்தினாலும், பறவைகளின் மூதாதையர்கள் டைனோசர்கள் தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பூமியில் முதல் உயிர் சுமார் 300 கோடியாண்டுகளுக்கு முன்னால் தோன்றியது.ஒரு கணிசமான எடை உள்ள ஓர் உயிரினத்தை பரிணாம வளர்ச்சியில்  பறவையாக உருப்பெற வைத்து வானில் பறக்கச் செய்ய இயற்கைக்கு கிட்டத் தட்ட 294 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. வெறும் 45 லட்சம் ஆண்டுகள் புமியில் இருக்கும் அறிவாற்றல் மிக்க மனிதன் விஞ்ஞான வளர்ச்சி காரணமாக விமானத்தைப் படைத்துவிட்டான்.இதில் இயற்கை நிகழ்வுக்கும் செயற்கை என்று சொல்லப்படும் நிகழ்வுக்கும் இடையே உள்ள மெல்லிய வேறுபாடு அடங்கியுள்ளது.இயற்கை ஒன்றை நிகழ்த்திக் காட்ட எடுத்துக்கொள்ளும் கால அளவோடு ஒப்பிடும் போது மிக குறைந்த கால அளவில் அதை நிகழ்த்திக் காட்டுவது செயற்கை.மனிதன் சாதித்துக் காட்டிய இன்னும் சிலவற்றை ஆராய்ந்தால் கால அளவு இன்னும் மிகக்குறைவாக இருப்பதைப் பார்க்கலாம்.தாவரங்களிலும் மிருகங்களிலும் புது இனங்கள் இயற்கையில் உண்டாவதற்கு மரபணுவில் ஏற்படும் திடீர் மாற்றமே காரணம்.இதன் மூலமாகவே பூமி முழுவதும் பல வகை தாவரங்கள் பல வகை மிருகங்கள் எல்லாம் வந்தன.ஒரு தாவரத்தில் மியூட்டேஷன் அதாவது மரபணு மாற்றம் ஏற்பட்டு புதுவகைத் தாவரம் தோன்ற பல லட்சம் ஆண்டுகள் கூட பிடிக்கலாம்.ஆனால் அதை மனிதர்கள் மரபணுவியல் மூலம் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு சில நாள்களில் நிகழ்த்திக் காட்டுகிறார்கள்.உலகில் இது வரை இல்லாத புதிய நிறத்தில் அதிக இதழ் அடுக்குகளோடு அழகிய புது ரக ரோஜாவைப் பூக்க வைத்துவிடுகிறார்கள்.மிருகங்களிலும் மரபணுமாற்றம் செயற்கையாக உண்டாக்கப்படுகிறது.அதன் முலமாக விஞ்ஞானிகள் தூரிகை எடுத்து ஓவியம் தீட்டுவது போல  தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணங்களோடு அலங்கார மீன்களைப் பிறக்க வைக்கிறார்கள்.எனவே செயற்கை என்பது விரைவாக,விருப்பப்படி,வேண்டிய மாற்றங்களோடு மனிதனால் உருவாக்கப்படுவது.இதற்கு  அணு விஞ்ஞானத்தில் நிகழ்த்திக் காட்டப்படும் சாதனைகள் சிறந்த சான்றுகளாக உள்ளன.
             பிக்பேங் என்று சொல்லப்படும் மிகப் பெரிய வெடிப்பு வெளியில் நிகழ்ந்து பிரபஞ்சம் தோன்றியது.அதற்கு முன்னால் எங்கும் ஒரே இருள் மட்டும் இருக்கவில்லை. அங்கு ஹைட்ரஜன், ஹீலியம் ஆகியவற்றின் மூலக்கூறுகள் நிறைந்திருந்தன.மிக அதிகமான அடர்த்தியுள்ள பொருள்கள் அதிக வெப்பநிலையில் சிறிய அளவில் கூடித்திரண்ட போது ஏற்பட்ட வெடிப்பில் பிரபஞ்சம் தோன்றியது என்பது விஞ்ஞானிகளின் கூற்று.அப்போது திரண்ட வாவு மேகத்தில் இருந்தவை ஹைட்ரஜனும் வாயுவும்  கொஞ்சம் ஹீலியம் வாயுவும்.சூரியனில் நிகழ்வது அணுப்பிணைவு.நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள் மித மிஞ்சிய வெப்பத்தில் இணைந்து ஒரு ஹீலியம் அணுக்கருவாகும்.அப்போது மிகவும் அதிக மான அளவு சக்தி வெளிப்படும்.இதுவே அணுப்பிணைவு. இதனால் தான் சூரியன் மிதமிஞ்சிய ஒளியையும், வெப்பத்தையும் உமிழ்ந்து கொண்டே இருக்கிறது.ஒரு சூரியன் உருவாவதற்கு இயற்கை கற்பனை செய்து பார்க்க முடியாத காலம் காத்திருக்க வேண்டும்.ஆனால் இதை  விஞ்ஞானிகள் உடனே நமக்கு நிகழ்த்திக் காட்ட முடியும்.பெரும் நாசத்தை விளைவிக்கக் கூடிய ஹைட்ரஜன் குண்டின் அடிப்படை அணுப்பிணைவுதான்.
              செயற்கை அதிசயங்கள் காலத்தை குறுக்கி விடுகின்றன. வேகமாக செயலாற்றுவது செயற்கையின் இயல்பாக உள்ளது.செயற்கையாக அரிய  செயலை செய்து காட்டுகின்ற மனிதனின் அறிவாற்றலும், திறனும் இதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.அறிவுத்திறனும், ஆற்றலும் இயற்கையை விஞ்சும் வகையிலேயே வேகமாக வெளிப்படுகின்றன.விஞ்ஞானம் என்பது இயற்கையை கண்டுதெளிவது.அதாவது இயற்கையை வாசித்துப் பார்ப்பது என்ற ஒரு கருத்து பல காலமாக உள்ளது.கண்டுபிடிப்புகள் எல்லாம் இயற்கையின் இயல்பை வேறு ஒரு வடிவில் வெளிப்படுத்திக் காட்டுகின்றன என்பதையே அது நமக்கு உணர்த்துகிறது.அது ஒரு வகையில் உண்மைதான். ஆனால் செயற்கை என்று நாம் குறிப்பிடும் மனிதனின் செயல்கள் வியத்தகு அளவில் மிகக்குறைந்த கால அளவில் நிகழ்த்தப்படுகின்றன.இதுதான் இயற்கைக்கும் செயற்கைக்கும் உள்ள மிக நுட்பமான வேறுபாடு.இதனால் தான் மனிதன் காலப்பயணம் செய்யும் கற்பனையை விஞ்ஞான அடிப்படைகளோடு வளர்த்துக் கொள்கிறான்.காலப் பயணத்தில் பின்னோக்கி சென்று பழைய வரலாற்று நிகழ்வுகளைக் காண்பது,முன்னோக்கி சென்று வருங்கால உலகில் இப்போதே வாழ்வது போன்று பல கதைகள் உள்ளன. இவற்றில் உள்ள நுட்பமான விஞ்ஞானப் பார்வைக்கு முக்கிய காரணியாக இருப்பது மனிதனின் அறிவாற்றல் தான்.அது எப்போதும் குறுகிய காலத்தில் அதிசயங்களை நிகழ்த்திக் காட்டும் நோக்கத்தில் செயல்படுகிறது.
             மனிதனின் தனித்துவம் மிக்க மிகச்சிறந்த அறிவாற்றலின் உச்சமாக இருப்பது கணிதவியல்.பல்லாயிரம் ஆண்டுளுக்கு முன்னரே மனிதன் இதனை வளர்த்து தன் திறனை வெளிப்படுத்தியுள்ளான்.இப்போது கணிதம் பல்கிப் பெருகி இருக்கும் எல்லாத்துறைகளிலும் இரத்தம் போலப் பாய்ந்து உயிர் தருகிறது.கணிதத்தில் மிகுந்த புலமை கொண்ட ஒருவர், ஆய்வில் தனக்கு இருக்கும் ஆர்வம் காரணமாக கணிதவியலில் புதியவற்றைப் படைக்க முடியும்.மனிதனின் அறிவாற்றல் திறன் வெளிப்பாட்டிற்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.இந்தத் திறன் மனிதனுக்கே உரித்தான, மனிதனால் மட்டுமே வெளிப்படுத்தக் கூடியது.மனிதனாய் மாற்றம் அடைந்ததோடு மற்ற உயிர்களிடமிருந்து ஒரு வகையில் முற்றிலும் தனியாக பிரிந்து விட்டவன் மனிதன்.மனித இனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருப்பது அதன் கணிதத்திறன் தான்.மிக குறைந்த காலத்தில் இயற்கையின் இயல்புகளை  நிகழ்த்திக்காட்டுவது நவீன மனிதன் அமைக்கும் செயற்கை அரசாங்கம்.அதன் செங்கோலாக இருப்பது கணிதவியல்.
            அறிவாற்றல் பொங்கிப் பெருகி பிரவாகமாக மாறுவது தனிப்பட்ட மனிதர்கள் மூலமாகத்தான்.இதற்கு சரியான சான்றாக அழியாப்புகழ் பெற்ற கணித மேதை ராமானுஜன் இருக்கிறார்.அரிய மனிதர் ஒருவரிடம் அறிவாற்றல் திரண்டு வெளிப்படுகிறது.அதனை அவர் மிகச் சரியாக சாதனையின் உச்சம் நோக்கி செல்ல வைக்கிறார்.இவற்றைத்தான் நாம் ராமானுஜன் வாழ்க்கையைப் படிப்பதன் மூலமாக அறிகிறோம்.ராமானுஜன் முப்பத்திரண்டு வயதிலேயே இறந்து விட்டார்.ஆனால் அந்த குறைந்த காலத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகள் வேறு எந்த கணித மேதையும் செய்யாதவை. உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை தலை சிறந்த  கணித மேதைகள் கொண்ட ஒரு பட்டியல் தயார் செய்தால் அதில் நூறுக்கும் மேலானவர்கள் இருப்பார்கள்.அதில் முதல் இருபத்தி ஐந்து மேதைகளின் பெயர்களுக்குள் ராமானுஜனின் பெயர் இடம் பெறும் என்பது பெருவாரியான கணித மேதைகளின் கருத்தாக இருக்கும்.
              ராமானுஜன் தனக்கு சாதகமான ஒரு காலத்தை எதிர் நோக்கி இருக்கவில்லை.பள்ளி நாள்களிலேயே கணிதத்தில் தன்னை வேகமாக வளர்த்துக் கொண்டார்.தாமாகவே மேலைநாட்டு கணித நூல்களைக் கற்றார்.அதன் மூலமாக பல புதிய கணிதத் தேற்றங்களை உருவாக்குவதற்கு ஊக்கம் பெற்றார்.குடும்ப சூழல் காரணமாக சென்னை இந்திய துறைமுகக் கழகத்தில் குமாஸ்தாவாக பணியாற்றினார்.அதே வேளையில் கணிதவியல் பயணத்தை வெறியோடு தொடர்ந்தார்.1913 இல் அங்கு தலைமைக் கணக்கராக இருந்த எஸ்.என் ஐயர் ஒரு சிறந்த கணித வியலாளராகவும் இருந்தார்.1913 இல் அவர் ராமானுஜனின் பிரைம் எண்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார்.அதே ஆண்டு ராமானுஜத்திற்கு இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இருந்த கணிதவியலாளர் ஜி.ஹெச்.ஹார்டியின் நட்பு கிட்டியது.ராமனுஜன் இவருக்கு அனுப்பிய கடிதத்தில் தான் ஒரு குமாஸ்தாவாக பணியாற்றுவதாகவும்,பள்ளிக் கல்விமட்டும் தான் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.மேலும் தனக்கு கணிதத்தின் மீது இருக்கும் தணியாத ஆர்வத்தின் காரணமாக தனக்கென கணிதத்தில் ஒரு பாதை அமைத்துக் கொண்டதாகவும் எழுதியிருந்தார்.அந்த கடிதத்தோடு தான் உருவாக்கிய நூற்றுக்கும் அதிகமான தேற்றங்களையும் அனுப்பி வைத்தார்.முதலில் ஹார்டி இவைகளைப் பார்த்தவுடன் சந்தேகம் அடைந்தார்.அவை வேறு ஒருவருடையவைகளாக இருக்கும் என்று எண்ணினார்.ஆனால் தேற்றங்களை முழுமையாக ஆராய்ந்தவுடன் நிச்சயமாக அனுப்பியவர் ஒரு மேதை என்பதை உணர்ந்து கொண்டார். அனுப்பப்பட்ட தேற்றங்களில்  பல முற்றிலும் புதியவை என்று கடிதம் மூலம் ராமானுஜனுக்குத் தெரிவித்தார்.பிறகு 1914 இல் ராமனுஜனை இங்கிலாந்துக்கு வரவழைத்தார். அப்போது ராமானுஜனுக்கு கணிதத்தில் அடிப்படை கல்வி முழுமையாக இல்லாததால் அதனை போதிக்கும் பணி லிட்டில் உட் என்பவரிடம் தரப்பட்டது. கணிதவியலாளர் லிட்டில் உட், ராமானுஜனுக்கு கடினமான கணிதமுறைகளை பயிற்றுவித்த அதிசய அனுபவத்தை பற்றி ஹார்டி இவ்வாறு கூறுகிறார்
         “ ராமானுஜனுக்கு சொல்லித் தருவது லிட்டில் உட்டுக்கு மிகக்கடினமாக இருந்தது.ஒரு புதிய விஷயத்தை  கட்டாயம் அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்று எந்த நேரத்தில் குறிப்பிட்டாலும் அது தொடர்பான ராமானுஜனின் சொந்த சிந்தனைகள் கட்டுக்கடங்காமல் பொழியத் தொடங்கிவிடும்.இதனால், தான் சொல்ல நினைத்ததை வலியுறுத்துவது லிட்டில் உட்டுக்கு மிகக்கடினமாக இருந்தது.”
ராமானுஜன் ஒரு கணிதக் கடல் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.1915 இல் கேம்பிரிட்ஜ் பலகலைக்கழகத்தில் ராமானுஜன் விஞ்ஞான இளங்கலைப் பட்டம் பெறுகிறார்.துரதிருஷ்டவசமாக 1917 இல் அவர் கடுமையாக  காச நோயால் பாதிக்கப்படுகிறார்.இந்நிலையில் அவருக்கு 1918 கேம்ப்ரிட்ஜ் ஃபிலசொஃபிகல் சொசைட்டியில் ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது.அந்த வருடத்திலேயே ஹார்டி, லிட்டில் உட் போன்ற பல சிறந்த கணித வியலாளர்களின்  பரிந்துரையின் பேரில் லண்டன் ராயல் சொசைட்டியிலும் மிகக் கௌரவமான ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது.அதன் பிறகு கேம்ப்ரிட்ஜ் ட்ரினிட்டி கல்லூரியில் அவருக்கு  ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது.ஓரளவு உடல் நலம் தேறிய ராமானுஜன் 1919 இல் இந்தியா திரும்பி, 1920 இல் இறந்து விடுகிறார்.ஆறாம் நூற்றாண்டிலேயே பூமியின் சுற்றளவை கணக்கிட்டுச் சொன்ன மாமேதை ஆரியபட்டா. பனிரெண்டாம் நூற்றாண்டில் கணிதத்தில் பல சாதனைகளைச் செய்தவர் கணித மேதை பாஸ்கரா.அவர் நிகழ்த்திய  அதே சாதனைகள் பல நூற்றாண்டுகள் கழித்து புதிய கண்டுபிடிப்புகள் போல ஐரோப்பாவில் பல மேதைகளால் மூலம் வெளிப்பட்டன.பாஸ்கராவின் ஆய்வுக்குறிப்புகள் பல ஐரோப்பாவில் ரகசியமாக கசிந்து விட்டன என்று ஆய்வாளர்கள் இப்போது கருதுகிறார்கள். ஆரியபட்டா, பாஸ்கரா போன்ற இந்தியக் கணித மேதைகளின்  வழித்தோன்றலாக உதித்த ராமானுஜன் அவர்களையும் விஞ்சி கணித உலக வரலாற்றில் நிலைப்பார்.
           ராமானுஜன் 1914 இல் இருந்து 1920 க்குள் ஆறு வருடங்களில் கணிதவியலில் தன் அரிய மேதமையை உலகிற்கு நிரூபித்துவிட்டார்.அதனால் தான் ஹார்டி
“ ராமானுஜன் இந்தியாவில் இத்துறையில் யாரும் அடையாத புகழோடு இந்தியா திரும்புகிறார்.இவர் இந்தியாவின் பொக்கிஷம்…” என்றார்.
        மேதைகளாக பலர் உலகில் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள்.அந்த மேதைகளின் அறிவுத் தாகமும் அவர்கள் தங்கள் தனித் திறனை வெளிப்படுத்தும் வேகமும் இயற்கை அதிசயங்களுக்கு ஒப்பானவை.மிதமிஞ்சிய அறிவாற்றல் தனித்தன்மையோடு பொங்கி வருவதற்கு ராமானுஜனின் கணிதத்திறன் சான்றாக இருக்கிறது.கல்லூரிக் கல்வி பெறாத காலத்திலேயே மிகக்கடினமான அரிய கணிதத் தேற்றங்கள் அவரிடமிருந்து ஊற்றெடுத்து வெளிப்பட்டன.இன்னும் சரியாகச் சொன்னால் மிக இயல்பாக  இயற்கையாக அவரிடமிருந்து திறன் பொழிந்து கொண்டிருந்தது.முழுக்க முழுக்க மனிதனால் வளர்க்கப் பட்ட செயற்கை அறிவாற்றலோடு நுட்பமாக இயற்கை இணைவதை நாம் அங்கே காணமுடிகிறது.               
                                            நன்றி : கவ்யா - தமிழ்    ஜனவரி  மார்ச்  2013