துவாரகை தலைவனின் ‘மிதக்கும் பாதைகள்’( கவிதைகள்) ‘அன்பு
– சிவம் – அறிவுலக அர்த்தங்கள்’ (கட்டுரைகள்) நூல்கள்(வெளியீடு
கவ்யா பதிப்பகம் 2011 ) பற்றி ஜெயா பிளஸ் டிவி விமர்சனம் பகுதி-2
********************************************************
ஜெயா பிளஸ் தொலைக் காட்சி நூல் விமர்சனம் எழுத்து வடிவில்….
துவாரகை தலைவனின் 'மிதக்கும்
பாதைகள் ' கவிதைத் தொகுப்பு – நூல் விமர்சனம்
- திரு. சுந்தர மூர்த்தி ( ஜெயா பிளஸ் தொலைக் காட்சி )
வருடல்கள், கீறல்கள் தோன்றும் தருணங்களை உணர்தல், இதமானதே இம்சையாகும் விஷயத்தை விளக்குதல் ஆகியவை, அவர் அவருக்கு ஏற்படும் அனுபவங்களைப் பொறுத்து மாறுபடும்.இந்த அனுபவங்கள் பற்றிய தெளிதல் உள்ளவர்களே கவிதையைப் புரிந்து கொள்வதற்கும்,உணர்ந்து கொள்வதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
வழிந்தோடும் வார்த்தைகளுக்குப் பின்னே
அகராதியைத் தூக்கிக் கொண்டு ஓடுவதால் மட்டுமே கவிதையின் கனத்தைக் கண்டுவிட முடியாது.அதன்
ஆழப்பகுதியின் இறுக்கத்தில் கவிதை கட்டுண்டு கிடக்கலாம்.
கம்பீரமாய் எழுந்து நிற்கும் மலைப்பாறைகளில்
மட்டுமல்ல அழகின் வெளிச்சம். பாறை இடுக்குகளில் துளிர்க்கும் புல் இதழ்களில் கூட அது
மின்னக்கூடும். அது போல துவாரகை தலைவனின் வார்த்தைகள் உயர்ந்து நிற்கும் போது அவற்றின்
இடையில் கூட கவிதை கண்சிமிட்டுகிறது.
கடலை கரையில் நின்று ரசிக்கலாம்,நீருக்குள்
நின்று கொண்டு ரசிக்கலாம், படகில் மிதந்து சென்று ரசிக்கலாம்,நீரில் குதித்து அதிக
ஆழம் வரை நீந்திக் குளிக்கலாம். இவருடைய கவிதைகள் நம்மை ஆழத்திற்கு அழைத்துச் செல்லும்
ரகம்.
பொங்கி வரும் வார்த்தை வெள்ளத்தில்
சிக்கி,கரையேற நாம் பிடிக்கும் கட்டையில் கவிதையின் அழகு நம்மை ஆட்கொள்கிறது. வார்த்தைகளையும்,
வரிகளையும் தாண்டி நம்மை ஏதோ ஒன்றை நோக்கி அழைக்கின்றன துவாரகை தலைவனின் படிமங்கள்.
மலையின் நடுவே
பொங்கி வரும்
நீண்ட நதியின் நாவு
கரையின் உதடுகளை
உரசி எழுந்து மொழிவது
“இதோ உன்னதம்.”
முகத்தில் அறைந்த
குளிர்க் காற்றோடு
உடல் கரைந்து
வெள்ளத்தின் நுரையாக
மிதந்து போகும்.
என்ற
வரிகளில் கவிஞர் காட்ட நினைப்பது வெறும் அழகியலை மட்டுமா?அது வாசகனின் அனுபவத் திவலைகளுக்கு
ஏற்ப புதிய அர்த்தங்களை எழுப்பிச் செல்கின்றன.
சம்பவங்களுக்கும் அவை ஏற்படுத்தும்
அதிர்வுகளுக்கும் இடையே நிகழும் வித்தைகளை வார்த்தைகளால் சொல்லி விட முடியுமா? என்ற
கேள்விக்கு பதிலாகவும், சாட்சியாகவும் இருக்கின்றன துவாரகை தலைவனின் கவிதைகள்.
தொடர்ந்து
உலகைப் பிறாண்டுபவை
போரின் கைகள்.
அவை மனித உடல்களைப் பிழிந்து
பூமியின் மேல் பூசிய பூச்சில்
எப்போதும் மறைந்திருக்கும்
ஏதோ ஒன்று.
அதுவே மனிதனின் பேராசையோடும்
பொங்கி வந்து
பசுமைக் குடில் எரிக்கிறது.
போன்ற
வரிகள் வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.மரத்தின் கிளைகள் பிரிதலின் சித்திரத்தை
ரசிக்கும் வாசகனை, வேர்கள் வரையும் ஓவியத்தில் ஒன்ற வைக்கும் வித்தையை தன் கவிதைகள்
மூலம் நிகழ்த்தி இருக்கிறார் கவிஞர்.
நடப்பது மட்டுமல்ல இருப்பே ஒரு பயணம்
தான் என்பது, மிதக்கும் பாதைகள் கவிதையில்
வரும் புல்டோசர் வெளிப்படுத்தும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது.நவீனக் கவிதைகள் மலிந்து
வரும் இவ்வேளையில் நவீனக் கவிதைகளின் நல்ல அம்சங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதாக
அமைந்திருக்கிறது துவாரகை தலைவனின்
மிதக்கும் பாதைகள் கவிதைத் தொகுப்பு.
`````````````````````````````````````````````````````````````````````````
ஜெயா பிளஸ் தொலைக் காட்சி நூல் விமர்சனம் எழுத்து வடிவில்….
துவாரகை தலைவனின் ‘அன்பு- சிவம்- அறிவுலக அர்த்தங்கள்’(
நூல் விமர்சனம்
- திரு.சுந்தர மூர்த்தி ( ஜெயா பிளஸ் தொலைக் காட்சி )
இந்த நூலில் ஆழம் காணமுடியாத மனித குலப் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வமான, சிந்திக்கத் தூண்டும் கருத்துகளை முன் வைக்கிறார் துவாரகை தலைவன்.
மனிதனின் நம்பிக்கைகள், அதன் போக்குகள்,இன்பம்,
துன்பம், கடவுள் பற்றிய கருத்துகள், அன்பு, அதன் பரிமாணங்கள், போர், பகை,அமைதி,தேடல்கள்
என்று செல்கிறது ஆசிரியர் பார்வை.ஆழமான கருத்துகளில் ஊன்றி நின்று மேலும் அகழ்ந்து
செல்லும் ஆசிரியரின் வார்த்தைகள் வாசகனை புதிய சிந்தனை சுழலுக்குள் இழுத்துச் சென்று
மூழ்கடிக்க முயல்கின்றன.மூழ்கிக் குளிக்க ஆசைப்பட்டால் மூச்சுத் திணறும் நிலைக்கு இழுத்து
விடுகிறார் ஆசிரியர்.
அமைதியோடு கொள்ளும் விழிப்புநிலை அறிவார்ந்த
தத்துவத் தேடல், உலக அரசாங்கம்,உலக அமைதிக்கான போர், வல்லரசுகளிடம் அடிமைப்படுதல்,
விடுதலையடைதல், இல்லாத உலகத்தில் மனதை அலைய விட்டு நிகழ் காலத்தைத் தவறவிடும் மனிதனின்
பாங்கு என பல புதிய தளங்களுக்கு வாசகனை அழைத்துச் செல்லும் இவரின் கருத்துகள், நூல்
என்பது பொழுது போக்கிற்காக அல்ல,பொழுதை அர்த்தமுள்ளதாக ஆக்குவது என்பதை சுட்டிக் காட்டும்படி
உள்ளன.
நாடுகளின் தோற்றம்,மொழியின் தொடக்கம்,அவற்றின்
மீதான கருத்துகள், தேசப்பற்று, மொழிப்பற்று ஆகியவற்றில் மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்
என விரிகின்றன நூலாசிரியரின் கருத்தோட்டங்கள்.தாய் மொழிப்பற்று,தாய்நாட்டுப்பற்று தொடர்பான
பிரச்சனைகளில் சிக்கிய ஜின்னா பற்றிய இவரின் விளக்கங்கள் நல்ல வரலாற்று ஆவணம் எனலாம்.
அமைதிக்கான போர், ஆயுதக் குவிப்பு, அமைதி
ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் தோய்ந்து அழகாக எழுதியிருக்கிறது ஆசிரியர் பேனா.தேடல் உள்ளவர்கள்
தேடிப் படிக்க வேண்டிய நூல்.
பின் குறிப்பு :
திரு.சுந்தர மூர்த்தி – எழுத்தாளர். இவருடைய சிறு கதைத்தொகுப்புகளும்,கட்டுரைத் தொகுப்புகளும் வெளி வந்துள்ளன.இலக்கிய விமர்சகர்- ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் முதன்மை புத்தக விமர்சகர் குழு உறுப்பினர்.
நன்றி: ஜெயா பிளஸ் தொலைக் காட்சி
மிகச் சிறப்பு
ReplyDelete