Tuesday, October 14, 2014

விவாத அரிதாரங்கள்

-      துவாரகை தலைவன்

 கழுதையின் பொதியை
சுமந்து செல்லும் மனித நெஞ்சம்.
உள்ளே இதிகாசம் முதல் நரிக்கதை வரை
நிறைய உள்ளன.

மலையடிவாரம் தொட்டு நீளும் சாலை
நதிக்கரையில் முடியும்.
அங்கே வந்து போவது எதற்கென
அறிந்து கொள்ள முடியாத
கழுதையின் பயணம்
சலவைத் தொழிலாளியுடன்
ஒவ்வொரு நாளும் தொடர்வது.

போகும்  போது
மூட்டைக்குள் நெளியும் 
பல வண்ண ஆடைகள்.
புராண கதாபாத்திரங்கள் - தங்கள்
உடைகளை யணிந்து கொண்டு
ஒவ்வொன்றாக வெளி வரும்.
பேசி  முடியாத கருத்துகளை
அவை கொட்டித் தீர்க்க..
சிலவற்றை அசை போட்டபடி
நடை பயிலும் கழுதை.

வழிப் போக்கர்கள் சிலர்
மூட்டைக்குள்ளிருந்து தலை காட்டும்
கதை மாந்தர்களை விமர்சிக்க
            விவாதம் எழுந்து
மலைத்தொடர் முழுவதும் எதிரொலி.

நீண்ட பயணத்தில்
சுமையை தூக்கிச் செல்லும் ஜீவனுக்கு
கனவு வருகிறது.
அது பொதியிலிருக்கும் கதாபாத்திர உடைகளை
            அணிந்து பார்த்து ரசிக்கும்.

அழுக்குத் துணி மணிகளோடு
வெளுத்த பின் வீசும் மணம் பற்றியும்
நித்தம் எழும் சர்ச்சைகள்.
எல்லாம் கேட்டுக் கேட்டு புளித்து விட  
தென்படுவது ஆற்றின் கரை.

சுமை இறங்கிய பின்
கனவின் உடைகளைக்களையும் கழுதை.
தெளிந்த ஆற்றுத் தண்ணீரில்
தன் நிர்வாணத்தைக் கண்டு
திரும்பி நடக்கும்.
அதைப் பார்க்க இயலாத பலர்
காலம் காலமாக
            மிதந்து  போகிறார்கள்
            ஆற்று நீரில் கரையும்
            வலுவான கதை ஆடைகளின் சாயத்தோடு...


நன்றி  :  புதுப்புனல்  ஆகஸ்ட் 2014  இதழ்





No comments:

Post a Comment