Monday, December 1, 2014

துவாரகை தலைவனின் 'தோல் பாவை' நூல் விமர்சனம்

          இலக்கியத்தைப் போற்றாத  நாடு முன்னேறாது.அரசியலுக்கும், சினிமாவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் இக்காலத்தில் கவிதைத் தொகுப்பைக் கொண்டு வருவது வலி மிகுந்த ஒன்று. துவாரகை தலைவனின் முதல் கவிதைத் தொகுப்பு தொடங்கி  அவர் கவிதைத் தொகுப்புகளை  நான் வாசித்து வருகிறேன். அவற்றோடு பல கட்டுரை தொகுப்புகளையும் அவர் எழுதி வளர்ச்சி கண்டிருக்கிறார்.
       
       இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்ததும் ஒரே அமர்வில் தொடர்ந்து படித்து முடிக்கும் படியாக அமைந்துள்ளன.அவற்றுள் அதிர் வலைகள் என்ற தலைப்பில் ஒரு பிணவறை தொழிலாளியின் அனுபவத்தைக் காட்டும் கவிதை அச்சத்தைத் தருவதாக இருந்தாலும் மனதை விட்டு அகல மறுக்கிறது.

உடல் கோணியைத் தைப்பவன்
கண்ணீர் விடாதவனல்ல
அதிர்ச்சியை,சோகத்தை
தனக்குள் ஒரு மூலையில் வைத்து தைத்து விட்டு
இரக்கமற்ற ஊசி முனையால்
தொழிலில் பின்னிக் கொள்கிறான்
மேலும் அந்த நெடுங்கவிதையின் பரிமாணம் விரிவடைகிறது.ஓரிடத்தில் வெடிகுண்டு வெடித்து மனித உடல்கள் சிதறிக் கிடக்கின்றன.
வெடி குண்டை வைத்துப் போனவன்
எந்தப் பதற்றமுமின்றி
தூக்கி வீசப்பட்ட
உடல்களின் எண்ணிக்கையை
யாரிடமோ சொல்லி முடிப்பான்....

உறவினர்களின் கனத்த உள்ளத்தை
மிதித்துத் திரும்பும் அவன் லட்சியம் ...
       
       இன்னும் இந்தத் தொகுப்பில் உள்ள  பல கவிதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.அணு மரம் என்ற கவிதை மனிதர்களின் வளர்ச்சியையும் அறியாமையையும் ஒரு சேர வெளிப்படுத்துகிறது.

ஒரு  நாள் தலை பெருத்து
தவளைகளுக்கு
பகுத்தறிவு முளைத்தது.
        
        ரெளத்திரம் வெளிப்படும் விமர்சனக் கவிதைகள்  அழகியலோடு  வந்திருக்கின்றன.கவிஞன் தன் நியாயமான கோபத்தை  இதைவிட வேறு எப்படி வெளிப்படுத்துவது.அவன் தளம் கவிதை தானே.


-       கவிஞர் அய்யப்ப மாதவன் 


நன்றி : கவ்யா - தமிழ்  அக்டோபர்- டிசம்பர்  2014 இதழ்

No comments:

Post a Comment