தணியாத தாகத்தின் ஊற்று
- துவாரகை தலைவன்
அந்த மாத இதழ் உலகம் முழுவதும், பல நாடுகளில் பிரபலமானது.அது தொடங்கப்பட்டு இருபத்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இருபத்தி ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அந்த இதழின் ஆசிரியர் குழு, வெள்ளி விழாவை சற்று வித்தியாசமாகக் கொண்டாட முடிவு செய்தது.அதன் படி ஒரு அறிவிப்பு அந்த இதழில் வெளியானது.
“அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் எக்காலத்திலும் சலிப்பு என்பது ஏற்படாமல் இருக்கும் படியாக கடந்த இருபத்தி நான்கு வருடங்களாக நாங்கள் எங்கள் மாத இதழை நடத்தி வருகிறோம்.உலகமெங்கும் இருக்கும் வாசகர்களுக்கு முதலில் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வெள்ளி விழாவின் ஒரு பகுதியாக உலக அளவில் வாசகர்கள் கலந்து கொள்ளும் ஒரு பெரும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளோம்.அதில் கலந்து கொள்பவர்களுக்கு ஒரே ஒரு தகுதிதான் அவசியம்.கலந்துரையாடலில் பங்கு பெற விரும்பும் வாசகர் ஏதாவது ஒரு விஷயத்தில் மிகவும் சலிப்படைந்தவராக இருக்க வேண்டும்.சலிப்பிற்கான காரணம் காதல்,அதிக பொருள் ஈட்டும் ஆசை,அலுவல்,அல்லது வேறு புதிய ஒன்றாகவும் இருக்கலாம்.”
பல லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன.அவை கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு ஐம்பது நபர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.உலகின் பல பகுதிகளில் இருந்த அவர்கள் அனைவரும் விழாவிற்கு அழைக்கப்பட்டதோடு அவர்களுக்கான விமானப் பயணச் சீட்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டன.
இதழின் தலைமை அலுவலகம் இருந்த நகரில் ,ஒரு நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள். அவர்களை விழா ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள். தினமும் ஒரு சிறு சுற்றுலா, அதன் பிறகு விருந்து என்று ஒரு வார காலம் சென்றது.அந்த ஐம்பது வாசகர்களும் தங்களைப் பற்றி எழுதித் தந்த அனைத்து குறிப்புகளும் ஒரு நிபுணர் குழுவின் முன் வைக்கப்பட்டன.அந்த குழுவில் பல்துறை வல்லுநர்கள் இடம் பெற்றிருந்தார்கள்.ஐம்பது வாசகர்களும் வாழ்க்கையில் தங்களுக்கு பெரும் சலிப்பை ஏற்படுத்திய விஷயங்களைப் பற்றி விரிவாக எழுதித் தந்திருந்தார்கள்.அவர்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் வெவ்வேறு துறை சார்ந்த வல்லுநர்களிடமிருந்து பெறப்பட்டு ஒரு கணினியில் ஏற்றி வைக்கப்பட்டன.
ஒரு பெரிய உள்அரங்கில் வெள்ளிவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சி நடை பெற்றது.அந்த ஐம்பது முக்கிய வாசகர்களோடு இன்னும் பல பார்வையாளர்களும் அரங்கில் கூடி இருந்தார்கள்.கணினியின் முன்னே ஒவ்வொரு வாசகரும் தனக்கு வாழ்க்கையில் அதிக சலிப்பைத் தந்த ஒன்றைப் பற்றி கூற வேண்டும்.அந்தப் புகாருக்கு கணினி உடனே சரியான தீர்வைச் சொல்லும்.இதுதான் ஏற்பாடு.பல தரப்பட்ட விஷயங்களைப் பற்றி வாசகர்கள் புகார் சொன்னார்கள்.கணினி கொடுத்த பதில்கள் சுருக்கமாகவும் அதே வேளையில் அழுத்தமாகவும் இருந்தன. சிலர் வினோதமான விஷயங்கள் பற்றியும் கணினியிடம் தெரிவித்தார்கள்.அவற்றிற்கு நகைச்சுவையான பதில்களும் வந்தன. விழா பெரும் வெற்றியடைந்தது.
வெள்ளி விழா சிறப்பிதழ் அதிக பக்கங்களுடன் விழாவின் முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்தது.ஐம்பது வாசகர்களில் இரண்டு வாசகர்கள் சொன்ன சலிப்புப் புகார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றை விரிவாக வாசகர்களுக்குத் தந்தது.
அந்த இரண்டு வாசகர்களில் ஒருவர் தாவரவியல் விஞ்ஞானி.அவருடைய புகார் இதுதான்:
“அனைவருக்கும் மாலை வணக்கம்.நான் நார்வேயில் உள்ள நார்டிக் ஜெனடிக் ரிசோர்ஸ் சென்டரில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.அங்கு நான் ஒரு முது நிலை விஞ்ஞானி. சில ஆண்டுகளுக்கு முன் ஜிசிடிடி[GCDT]என்ற உலகளாவிய தானியப் பரவல் அமைப்போடு இணைந்து நார்வே அரசாங்கம் ‘ஸ்வல்பார்ட் குளோபல் சீட் வால்ட்’ என்ற உலக விதைக் கிடங்கை ஏற்படுத்தியது.நார்வே அருகில் உள்ள ஸ்பிட்ஸ் பர்கென் தீவில், ஸ்வல் பார்டில் உள்ள படிவுப்பாறை மலையில் 390 அடி ஆழத்தில் இந்த விதை வங்கி அமைந்துள்ளது.இதில் உலகில் உள்ள பலவகைப்பட்ட 4.5 மில்லியன் விதைகளை பாதுகாப்பாக பல நூறு ஆண்டுகள் வரை சேமித்து வைக்கலாம்.தற்போது சுமார் 1.5 மில்லியன் விதைகள் இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
பொது மக்கள் தங்கள் பணத்தையும், விலையுயர்ந்த பொருள்களையும் வங்கியில் உள்ள பெட்டிகளில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வசதி உள்ளது.அது போலவே உலகில் இயற்கை தந்த பல வகை விதைகளை எந்த நாடும் இந்த மாபெரும் ஸ்வல்பார்ட் விதை வங்கியில் தங்களுக்குக் கொடுக்கப் பட்ட பிரத்தியேக இடத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.உலகில் பல நாடுகள் தங்கள் நாட்டிலேயே விதைகளைப் பாதுகாக்கும் சிறிய ஜீன் வங்கிகள் அமைத்துள்ளன.அந்த நாடுகள் தங்கள் சொந்த ஜீன் வங்கிகளில் சேமித்து வைத்துள்ள விதைகளின் மாதிரி விதைகளைத் தான் ஸ்வல்பார்ட் விதை வங்கியில் பாதுகாப்பாக வைத்துக் கொள்கின்றன.இங்கே விதைகள் ஒன்றன் மேல் ஒன்றாக செருகப்பட்ட நான்கு கவர்களுக்கு உள்ளே வைத்து உறை குளிர் நிலையில் பாதுகாக்கப்படும்.போர் அல்லது பொருளாதார வீழ்ச்சி காரணமாக சில நாடுகளில் அவற்றின் சொந்த ஜீன் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விதைகள் அழிந்து போக வாய்ப்பு உள்ளது.அந்நிலையில் அந்த நாடுகள் இங்கே ஸ்வல்பார்ட் விதை வங்கியில் பாதுகாப்பாக வைத்திருக்கும் மாதிரி விதைகள் மீண்டும் அவைகளுக்குக் கிடைக்கும்.அவற்றின் மூலம் அவை தங்கள் நாட்டுத் தாவரங்களை மீண்டும் வளர்த்துக் கொள்ளலாம்.அதே போல உலகமே ஒரு பேரழிவை சந்தித்து தாவர இனங்கள் பல அழிந்து போனாலும், இங்கு பாதுகாக்கப்படும் விதைகள் முலமாக அவற்றை நாம் மீண்டும் வளர்க்கலாம்.இந்த உலக விதை வங்கியின் வேலைகளை ஒருங்கிணைப்பது நான் பணிசெய்யும் மையம் தான். வாழ்நாள் முழுவதும் தாவரங்களைப் பற்றிய ஆய்விலும் ,முக்கியமாக இந்த விதை சேகரிப்பு பணியிலும் ஈடுபட்டு எனக்கு பெரும் சலிப்பு ஏற்பட்டுவிட்டது.”
கணினியோடு சேர்ந்து பார்வையாளர்கள் அனைவரும் அவர் பேசியதை ஆர்வமாகக் கேட்டார்கள்.அதன் பிறகு கணினி பேசியது.
“நண்பரே, தாவரவியல் விஞ்ஞானியான தாங்கள் உலகில் உள்ள அனைத்து செடிகளைப் பற்றியும் மரங்களைப் பற்றியும் நன்கு அறிவீர்கள். தற்போது சில ஆண்டுகளாக இயற்கையின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கும் அரிய, விதை சேகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளீர்கள். நல்வாழ்த்துகள்.பல லட்சம் விதைகளைப் பாதுகாப்பாகச் சேகரித்து வைக்க இந்த உலகிற்கு உதவிய நீங்கள், உங்கள் வாழ் நாளில் ஒரு மரக்கன்றையாவது உங்கள் கைகளால் நட்டு வளர்த்திருக்கிறீர்களா?”
“இல்லை”
“ஏன்?”
“எனக்கு நேரம் இல்லை.என் வீட்டுத் தோட்டத்தில் பல வகை மரங்களும், செடிகளும் உள்ளன.ஆனால் அவைகளை வளர்த்துப் பாதுகாக்க ஒரு முதியவரை நியமித்துள்ளேன்”
“நீங்கள் உங்கள் தாய் நாட்டிற்குச் சென்றவுடன்,உங்கள் வீட்டில் நீங்களே ஒரு மரக்கன்றை நட்டு வளர்த்து வாருங்கள்.தினமும் அதை ஒரு சில நிமிடங்களாவது கவனியுங்கள்.உங்களிடமிருந்து மறைந்து போன உற்சாகம் நிச்சயம் திரும்பிவரும்”
அடுத்து வந்த இளைஞனின் பிரச்சனை வேறுவிதமாக இருந்தது.
“நண்பர்களே, நான், உலகிற்கு என்னைப் பற்றிய தகவல்களை அதிகம் தெரிவிக்க விரும்பாதவன்.என் தனித் திறன்களையும் நான் அதிகமாக எங்கும் வெளிப்படுத்துவதில்லை.கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வமுடைய நான் உலகில் உள்ள பல பல்கலை கழகங்களில் படித்திருக்கிறேன்.கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து கலைத் துறைகளிலும்,பல விஞ்ஞானத் துறைகளிலும் பட்டம் பெற்றுள்ளேன்.உலகில் நான் படிக்காமல் விட்டவை ஏதாவது இருந்தால் சொல்லவும்.எனக்கு இப்போது படிப்பது சலிப்பைத் தருகிறது.”
கணினி பேசியது:
“உங்கள் பிரச்சனை சற்று வினோதமானது.ஒரு செயல் விளக்கம் உங்களுக்குத் தேவைப்படுகிறது”
அப்போது ஒருங்கிணைப்பாளர் ஒருவர் அவனை ஒரு தனி அறைக்குள் செல்லுமாறு கூறினார்.அந்த அறையில் அவன் பார்க்கும் அத்தனை பொருள்களையும் ஒன்று விடாமல் அரங்கத்திற்கு வந்து பார்வையாளர்களிடம் கூற வேண்டும்.கணினி அந்த இளைஞனுக்குத் தர விரும்பும் செயல் முறை விளக்கம் அது தான் என்று ஒருங்கிணைப்பாளர் அவனிடம் தெரிவித்தார்.சிறிது நேரத்தில் அந்த இளைஞன் மேடைக்குத் திரும்பி வந்து மீண்டும் கணினியிடம் பேசினான்.
“ அங்கு ஒன்றுமே இல்லை. அது ஒரு காலியான அறை”
கணினி கேட்டது:
“நன்றாகப் பார்த்தீர்களா?அந்த அறையில் ஒன்றுமே இல்லையா?”
“நிச்சயமாக அங்கு ஒன்றுமில்லை”
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு அவன் சொன்னான்
“அந்த அறையின் சுவர்கள் முழுவதும் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன.இரண்டு மின் விளக்குகளைத் தவிர அங்கு வேறு ஏதுமில்லை”
“நீங்கள் சொல்வது உண்மைதான்.அந்த அறையில் இப்போது ஒன்றுமில்லை.ஆனால் நீங்கள் உள்ளே நுழைந்ததும் நீங்கள் இருந்தீர்கள்.உங்களை கண்ணாடியில் பார்த்தீர்கள்.ஆனால் நீங்கள் சென்ற போது அறையில் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டீர்கள்.இதுதான் உங்கள் பிரச்சனை.உலகில் உள்ள பல்வேறு துறைகளில் பட்டங்கள் பெற்ற சிறந்த அறிவாளியான நீங்கள் உங்களை சரியாக, இன்னும் ஆழமாக அறிந்து கொள்ளவில்லை. உங்களையே நீங்கள் படிக்க ஆரம்பித்து விடுங்கள்.உங்கள் சலிப்பு தானாக மறைந்து விடும்”
இந்த இரண்டு நபர்களின் அனுபவங்களை இணைத்துப் பார்க்கும் போது ஒரு உண்மை நமக்குப் புலப்படுகிறது.விஞ்ஞானி சேகரித்த விதைகள் ஒரு வகையில் மனிதன் அறிந்து கொள்பவைகளின் குறியீடுகளாக உள்ளன.மனிதன் தன்னை அறிந்து கொள்ளத் தூண்டும் தாகத்தோடு சேர்ந்த தேடலில் தான் அந்த விதைகளில் சில விருட்சங்களாக மாறுகின்றன.விஞ்ஞானி ஆராய்ச்சியிலும், உழைப்பிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.அந்த இளைஞன் பட்டங்கள் பெற கற்பதில் தன்னை மறந்து போனவன்.அவர்கள் இருவரும் அர்ப்பணிப்போடு கூடிய உழைப்பில் சற்று தங்களையும் பார்த்து உணர்ந்து கொள்ள மறந்தவர்கள்.அதனால் போற்றுதலுக்குரிய அவர்களுடைய உழைப்பு அவர்களுக்கு ஒரு நிலையில் பெரும் சலிப்பைத் தந்துவிட்டது.அந்தச் சலிப்பைப் போக்குகின்ற ஊற்று மனிதனுக்குள் உள்ளது. மனிதன் தன்னைத் தனக்குள் தேடிப்பார்க்கும் போது தன் ஆன்மாவின் தாகமும் அதைத் தீர்க்கின்ற ஊற்றும் அவனிடம் இருப்பதைக் காண்கிறான்.மனிதனைப் பற்றியும் மனிதனின் இருப்பிற்கான காரணத்தைப் பற்றியும் உணர்ந்து கொள்ள முனையும் எளிய தத்துவ சிந்தனையால் இது சாத்தியப்படுகிறது.
அந்த இளைஞன் கூறிய மற்றொன்றையும் இதழ் குறிப்பிட்டிருந்தது.
“வெளி உலகோடு அதிக தொடர்பில்லாத என் போன்றோர் அதிகமாகக் கற்பதில் என்ன பயன் உள்ளது.என்னுடைய அறிவும் திறமையும் யாருக்கும் தெரியாமலேயே போய் விடும் அப்படி இருக்கும் போது இன்னும் நான் ஏன் படிக்க வேண்டும்.எதை நான் இப்போது தேடிப் பெற வேண்டும்”
உலகில் உள்ள பலருடைய பிரதிநிதியாகத்தான் அந்த இளைஞன் இதைக் கூறி இருக்க வேண்டும்.வாழ்க்கையின் ஓட்டத்தில் வருகின்ற சலிப்பை நீக்க, ஆன்ம தேடலில் ஈடுபடும் மனிதன் ஒருவனின் குரலும் அந்த இளைஞனின் குரலோடு சேர்ந்து ஒலிக்கிறது.தனியாக நம்மை நமக்குள் தேடி நாம் எதை சாதித்துவிடப் போகிறோம் என்ற எண்ணம் மனிதர்களுக்கு இயல்பாக வரும் இரண்டாவது வகை சலிப்பு.
அடர்ந்த காட்டில் ஒரு சிறிய பறவை தன் இணைப் பறவையைக் கவர சிறு குச்சிகளால் மேடை அமைக்கிறது. தன் சிறகுகளை விரித்து உடலைத் திருகி நடனமாடுகிறது.ஆனால் அதை கண்டு ரசிக்க அதன் இணைப் பறவையைத் தவிர யாருமில்லை.ஆள் அரவமே கேட்டிராத ஒரு மலையின் காட்டில் ஒரு மரம் தன் பூக்களை எல்லாம் மண்ணில் கொட்டி ஓர் அரிய சித்திரத்தை யார் காண்பதற்காக வரைந்து வைத்திருக்கிறது.ஒரு காட்டையே அரசனைப் போல் ஆண்டு வந்த ஒரு சிங்கம், மனிதர்கள் யார் கண்ணிலும் பட்டதில்லை. ஒரு நாள் வந்த பூகம்பத்தில் ஒரு பெரும் மரம் வேரோடு பெயர்ந்து அதன் மேல் விழுகிறது.இருந்த சுவடே தெரியாமல் அந்த சிங்கம் மன்ணுக்குள் புதைந்து மறைந்து போகிறது.இன்னும் தினம் தினம் உலகில் எத்தனையோ நிகழ்வுகள் யாருக்கும் தெரியாமலேயே தோன்றி மறைகின்றன.
மனிதர்கள் உருவாக்கும் அத்தனை கலைப்படைப்புகளும் உலகுக்குத் தெரிய வந்து ரசிக்கப்படுவதில்லை.உலகின் ஏதோ ஒரு மூலையில் சிலரால் மட்டும் அறியப்பட்ட ஒரு மனிதனின் நேயம், உலக மக்கள் பலரால் கவனிக்கப்படாமல் போகலாம்.ஆனால் அவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும், எண்ணி ஆதங்கப்படவும் சில மனிதர்களால் முடிகிறது. அதற்குக் காரணம் பகுத்தறிவோடு கூடிய மனிதனின் பிரக்ஞை அல்லது விழிப்புணர்வு.அதுவே மனிதன் தான் யார் என்றும், உலகில் உள்ள ஏனைய உயிரினங்களில் இருந்தும் மற்ற பொருள்களில் இருந்தும் தான் எவ்வாறு வேறுபட்டவன் என்றும், பிரித்து அறிந்து கொள்ளும் உணர்வு. மற்ற உயிரினங்கள் போல சிலவற்றை உதறித் தள்ளி விட்டு தன் போக்கில் சென்று மடிய மனிதனால் முடியாது.அதுதான் அவனது அடிப்படை இயல்பு.பலர் அது போன்ற உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதாக நமக்குத் தோன்றினாலும் உண்மையில் அதற்கு யாரும் விதி விலக்கு இல்லை. மனிதனின் தனித்தன்மை வாய்ந்த பிரக்ஞை இளம் வயதில் முளைக்கின்ற ஞானப்பல் போன்ற ஒன்று.நெருடலையும் சிலசமயம் வேதனையையும் தருவது.ஆனால் மனிதனால் தவிர்க்க முடியாதது.மற்ற உயிரினங்கள், ‘இருப்பின்’ பொருளை ருசித்தாலும் பகுத்தறிவு இல்லாததால் அதனை அறிந்து உணர்ந்து கொள்ள முயல்வதில்லை.அப்படிப்பட்ட, சஞ்சலத்தையும், துன்பத்தையும் தரும் விழிப்புணர்வு பரிணாம வளர்ச்சியில் இயற்கையாக மனிதனிடம் முளைத்தது. இயற்கையில் நடக்கும் எல்லாமே பெரும்பாலும் ஒரு காரணம் கருதியே நிகழ்கின்றன. மனிதனின் விழிப்புணர்வு முதலில் அவனை ஒரு சேற்றுக்குள் தள்ளி அமுக்குகிறது. ஆனால் அதைத் தாக்குப் பிடித்து அவன் வெளி வந்த பின் முழுமையான நிறைவு தென்படுகிறது. தோலை தானே உரித்துக் கொண்டு விதை வெளிப்பட்டு முளைக்கிறது.பகுத்தறிவோடு கூடிய விழிப்புணர்வால் மனிதனுக்கு மிக அதிகமான அழுத்தமே ஏற்படுகிறது.ஆனால் தேவையில்லாதவற்றிலிருந்து தன்னை விலக்கி வெளியே வந்த பின் தொடங்குகின்ற ஒன்றில் கிடைக்கும் நிறைவை முழுமையாக்க அதே விழிப்புணர்வு உதவுகிறது.மனிதனின் விழிப்புணர்வு சிக்கலை வளர்த்து சஞ்சலங்களுக்கு ஊற்றாய் இருக்கும் ஒன்றல்ல. உண்மையான நிறைவை அறிந்து உணர உதவும் ஒரு கருவி.
மனிதன் தன் உடல் ரீதியான மன ரீதியான அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானவுடன் புதிய தேடல் ஒன்றிற்கு ஆயத்தமாகிறான்.ஒரு நீர்நிலையின் ஆழமான பகுதிக்கு நீந்திச் சென்ற ஒருவன் மீண்டும் நீருக்கு மேலே வர முயல்கிறான்.அப்போது அவன் கால்கள் நீர் நிலையின் அடியில் இருக்கும் மண்ணில் சிக்கிக் கொள்கின்றன.அதிலிருந்து விடுபட்டு கொஞ்சம் மேலே வருகிறான் அப்போது வலை போன்ற ஒரு நீர்ச்செடியில் அவன் கைகள் மாட்டிக் கொள்கின்றன.அவற்றை நீக்கிவிட்டு வேகமாக மேல்நோக்கிச் செல்வதிலேயே அவன் முழு கவனமும் இருக்கிறது. அவன் உடலும் உள்ளமும் சுவாசக் காற்றிற்காகத் துடித்து வேகமாக செயல்படுகின்றன.அது போலவே மனிதன் தன் தேவைகளை அடைந்த பின் முழு உந்துதலோடு புதிய ஒன்றை நோக்கிச் செல்கிறான்.அதுவே மனிதன் தன்னை அறிந்து கொள்ள செய்யும் முயற்சி.உண்மைகளுக்கெல்லாம் உண்மையை மனிதன் அறிந்து கொள்ளும் முனைப்பு.அதுவே மனிதனின் தணியாத தாகம்.
மனிதன் தன்னைத் தானே சரியாக அறிந்து கொள்ளும் முயற்சியே உண்மையை நோக்கிய பயணம்.சிலருக்கு மனிதனின் அத்தகைய பயணம் அவன் அடிப்படை தேவைகளோடு நேரடியான தொடர்பு இல்லாதது போலத் தோன்றுகிறது.ஆதலால் அது அவர்களுக்கு வியப்பைத் தருவதாக இருக்கிறது.ஆனால் அந்த நிலையைத் தொட்டவர்களின் ஆர்வம் தினம் தினம் கூடிக் கொண்டே இருக்கும் ஒன்று.ஒவ்வொரு மனிதனும் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் அங்கு வந்தே ஆக வேண்டும்.சிலர் வெகு விரைவிலேயே அந்த அனுபவத்தை ருசித்து விடுகிறார்கள்.சிலருக்கு அந்தத் தொடக்கத்தை உணர வெகு காலம் ஆகலாம்.ஆனால் அது யாராலும் மறுதலிக்க முடியாத, தவிர்க்க முடியாத ஒன்று.மற்ற எல்லாமே அற்பமான தேவைகளாய்த் தெரியும் நிலை அது.உள்ளம் அவைகளை விரும்பினாலும் அதனை மீறி அது ஏதோ ஒன்றிற்காக எப்போதும் அதிர்ந்து கொண்டிருப்பதை அங்கே நாம் உணர முடியும்.அது ஒரு முடிவில்லாத தவிப்பு. மனித இருப்பின் ரகசியம் அங்கே தான் ஒளிந்திருக்கிறது. மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடாக தன்னைத் தானே அறிந்து உணர்ந்து கொள்ளும் அந்த ஆவல் இருக்கிறது.
மனிதனுக்குள் இருக்கும் அந்த தொடர் அதிர்வு ஓர் ஒப்பற்ற உணர்வு. அதைத்தான் நமக்கு வழிகாட்ட உதவும் ஞானிகள் பதிவு செய்ய முயன்றார்கள்.அதன் மூலமாக நமக்குக் கிடைத்தவை அர்த்தமுள்ள நூல்கள்.அவைகளைக் கற்பது நிச்சயமாக நமக்கு பெரும் நன்மையை விளைவிக்கின்றது.அதற்காக அவைகள் உண்மையை அறிந்து கொள்ளும் நம் முயற்சியில் எல்லாவற்றையும் தந்துவிடும் என்று அர்த்தமில்லை.
நூலறிவால் கிடைப்பது விதை.அது முளை விட்டு மரமாக வளர்வதற்கு உதவும் எல்லாமே, படிக்கும் மனிதனுக்குள் இருக்கின்றன.நீர், காற்று வெளிச்சம் இவைகளோடு மண்ணில் உள்ள எத்தனையோ தாதுகளின் பங்களிப்பினால் தான் ஒரு செடி வளர்ந்து மரமாகிறது.முக்கியமான தாதுகளைத் தவிர இன்னும் பல நுண் தாதுகள் மண்ணில் உள்ளன.இவை , ஒரு விதை முளை விட்டு, செடியாகி மரமாகும் வரைக்கும் அதன் பின்னும் அதனுள் நடக்கும் அனைத்துக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.மரம் என்பது ஒரு பச்சையத் தொழிற்சாலை.அதில் உள்ள எண்ணிலடங்கா செல்களுக்கிடையே பல என்சைம்கள்,சர்க்கரை, நீர் போன்றவை எப்போது் நகர்ந்து கொண்டே இருக்கின்றன.இந்த இயக்கங்களுக்கு அடிப்படடையாக இருப்பவை மண்ணில் உள்ள தாதுகள் தான்.நாம் படித்து அறிந்து கொள்பவைகள் விதைகள்.அதில் ஒன்று நமக்குள் விருட்சமாக வளர்வதற்கு நாம் தான் முக்கிய காரணம் என்ற உணர்வே இலக்கை நோக்கி நம்மை சரியாக விரைவாக நகர்த்துகிறது.
தன்னை மனிதன் படிக்கவேண்டும்.தனக்குள் இருக்கும் தன்னை சரியாக கண்டு உணர வேண்டும்.என்றெல்லாம் சொல்லப்படும் போது ஒரு ஐயப்பாடு நமக்குள் எழுகிறது.பல துறைகளில் கல்வி வளர்ந்து உலக மக்களின் நல்வாழ்விற்கு அறிவை குறைவில்லாமல் அள்ளி வழங்குகிறது.அப்படி இருக்கும் போது மனிதனுக்குள் இயற்கையாகவே என்ன பெரிய அறிவு அடங்கி இருக்க முடியும் என்பது தான் அது.
அந்த அழகிய புல் வெளி ஏதென்ஸ் நகரத்தை ஒட்டி பறந்து விரிந்து கிடந்தது.அதில் ஒரு மரத்திற்குக் கீழே அமர்ந்திருந்த பெரியவர் பறவைகளின் உரையாடலை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.அவரை கடந்து செல்லும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு சென்ற சிறுவனைப் பார்த்தவுடன் அவனிடம் பேச வேண்டும் என்று அவருக்கு தோன்றியது.
“தம்பி கொஞ்சம் நில்”
அந்தச் சிறுவன் திரும்பிப்பார்த்தான்.முகத்தில் நீண்டு வளர்ந்த தாடியோடு ஒரு கிழவர் மரத்தடியில் அமர்ந்திருக்கிறார்.சப்பையான மூக்கு,சற்று கனமான உருவம்,சிறு தொப்பை இவற்றோடு அந்த முதியவர் தோற்றமளித்தார் . அவர் அணிந்திருக்கும் ஆடையில் பல கிழிசல்கள்.
“ஒரு வேளை அவர் பிச்சைக் காரரா?”
என்று எண்ணியபடி அவர் கண்களைப் பார்த்தான்.துருத்திக் கொண்டிருந்தாலும் அவற்றில் ஒரு ஒளி இருந்தது.
“ என்ன வேண்டும் ஐயா?”
“எனக்கு ஒன்றும் தேவையில்லை தம்பி. இங்கிருந்து அரைக்கல் தொலைவில் நான் செல்ல வேண்டிய இடம் இருக்கிறது.நீ அந்த வழியாகச் செல்வது போல் உள்ளது.ஆதலால் உன்னோடு சிறிது நேரம் பேசிக் கொண்டு சென்றால் களைப்பு தெரியாது என்று உன்னை அழைத்தேன்”
என்று கூறியபடி எழுந்து அவனோடு நடக்க ஆரம்பித்தார்.
“தம்பி உனக்கு கணக்கு தெரியுமா? இந்த ஆட்டுக் கூட்டத்தில் எத்தனை ஆடுகள் உள்ளன?”
“ஐயா நான் படிக்கவில்லை.என் மாமாவுக்கு ஆடுகளின் எண்ணிக்கை தெரியும்.பெரும்பாலும் அவர் என்னுடன் ஆடு மேய்க்க வருவார்.சில நாள்கள் அவர் சந்தைக்குப் போவார்.அப்போது நான் மட்டும் தனியே வருவேன். மாலையில் பட்டியில் ஆடுகளை அடைக்கும் போது அவர் எண்ணிக்கொள்வார்”
“உனக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை இல்லையா?”
“நிறைய இருக்கிறது.முதலில் எண்களைக் கற்றுக்கொண்டால்,மந்தையில் உள்ள ஆடுகளை எண்ணிப்பார்த்துக் கொள்ள எனக்கு அது உதவியாக இருக்கும். என் நண்பன் ஒருவனின் அப்பா வசதி படைத்தவர்.அவன் கல்வி கற்பதற்காகப் பாடசாலைக்குப் போகிறான்.அவனோடு தினமும் நான் பாடசாலைக்குப் போகலாம்.உங்கள் பேச்சைக் கேட்கும் போது நீங்கள் நிறைய படித்தவர் போல் தெரிகிறீர்கள்.படிப்பது என்றால் என்ன?அதன் மூலம் எனக்கு என்ன கிடைக்கும்.”
“இந்த ஆடுகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது எளிது.ஒரே நாளில் கூட நீ அதை உன் மாமாவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அதை விடு.பாடசாலைக்கு போகும் மாணவர்களுக்கு அறிவு போதிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.நமக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி அறிந்து கொண்டால் நமக்குக் கிடைப்பது அறிவு.”
“ஐயா நமக்குத் தெரியாதது எது?”
“உனக்கு எண்ணத் தெரியாது.இப்போது ஓர் ஓநாய் வந்து இந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒரு ஆட்டை உனக்குத் தெரியாமல் பிடித்து இழுத்துச் சென்று விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.அந்த ஆட்டின் அடையாளத்தையும் நீ அறியவில்லை என்றால் ஆடு தொலைந்தது உனக்குத் தெரியாது.அது போலவே எது தமக்குத் தெரியாதது என்பதை அறியாமல் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்.அதாவது மக்கள் இயற்கையாகவே சிலவற்றை அறிந்து வைத்திருக்கிறார்கள்.சிலவற்றை அறியாமல் இருக்கிறார்கள்.கல்வியானது தெரியாததைச் சொல்லித் தர வேண்டும் இல்லையா?இப்போது மக்களுக்குத் தெரியாதது எது என்பது போதிப்பவர்களுக்கும் தெரியாது.படிப்பவர்களுக்கும் தெரியாது.அடுத்ததாக வேறு ஒரு நிகழ்ச்சி நடப்பதாக வைத்துக் கொள்வோம்.தொலைந்து போன ஆட்டை ஓநாய் இழுத்துச் செல்லவில்லை.அது வழி தவறி காட்டுக்குள் சென்று விட்டு மீண்டும் தன் கூட்டத்தோடு சேர்ந்து கொள்கிறது.அதன் அடையாளம் உனக்குத் தெரியாததால் அதனைக் கண்ட பின்னும் அது மந்தையில் வந்து சேர்ந்தது உனக்குத் தெரியாது.அது போலவே தனக்குத் தெரியாதது எது என்று அறிந்து கொள்ளாத மாணவனுக்கு அதை போதித்தாலும் அவனால் அதை இனங்கண்டு அறிந்து கொள்ள முடியாது.அதாவது நாம் புதிதாக அறிந்து கொள்வது எந்த அளவுக்கு பிறவற்றை விட மாறுபட்டது என்பதை புரிந்து கொள்வது அவசியம்.இல்லா விட்டால் நாம் புதிதாக ஒன்றை அறிந்து கொள்ளும் போது முழுமையான பலன் கிடைக்காது.அவ்வாறு நுட்பமாகப் பிரித்துப் பார்க்க முடியாவிடில் ஒன்றை நாம் புதிதாக அறிந்து கொண்டதாக எப்படிச் சொல்வது.அறிந்து கொள்ள முடியாதது அறிவாக எப்படி இருக்க முடியும்?”
“ஐயா மக்களுக்குத் தெரியாத ஒன்றை பாடசாலை சொல்லித்தர முடியாது என்றால் உங்களால் அதைச் சொல்ல முடியுமா?”
“சொல்ல முடியாது.ஆனால் அதை உணர்த்த முடியும்”
“நீங்கள் யார் உங்கள் பெயர் என்ன?”
“நான் ஒரு பழைய போர் வீரன். என் பெயர் சாக்ரடீஸ்.ஒரு காலத்தில் இந்த ஏதென்ஸ் நகருக்காக மற்ற வீரர்களோடு சேர்ந்து போர்க்களத்தில் எதிரிகளை எதிர்த்துப் போர் செய்திருக்கிறேன்.இப்போது எனக்கு வயதாகிவிட்டது.இருந்தாலும் நான் போர் செய்வதை நிறுத்தவில்லை.இப்போது ஏதென்ஸ் நகருக்கு உள்ளேயே மக்களுக்காக என் உள்ளத்தாலும், பேச்சாலும் போராடிக் கொண்டிருக்கிறேன்”
சாக்ரடீஸ் தன் நண்பர்களைச் சந்தித்து உரையாடும் இடத்திற்கு வந்ததும் அந்த சிறுவனிடமிருந்து விடை பெற்றார்.அவன் அந்த இடத்திலேயே சிறிது நேரம் அமர்ந்து விட்டுச் செல்வதாகக் கூறினான்.அன்று கணிசமாகவே ஆள்கள் கூடி இருந்தார்கள்.சாக்ரடீசை முதலில் வரவேற்றவர் அவருடைய மாணவர் செனோபோன்தான்.
“ஐயா வாருங்கள்”
ஒரு மூலையில் சற்று கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த பிளேடோவை உற்று நோக்கிய படி
“என்ன பிளேடோ இன்று அமைதியாகக் காணப்படுகிறான்”
“நேற்று நீங்கள் உண்மை அறிவு பற்றியும், போதித்தல் பற்றியும், கூறிய கருத்துகள் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும்
என்று நினைக்கிறேன்”
“ஓ அது தானா விஷயம்.அவை பற்றி சிறிது நேரத்திற்கு முன்னால் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனிடம் விளக்கினேன். அவன் கூட அதைப்
புரிந்து கொண்டானே.பிளேட்டோ போன்ற அறிவாளிக்கா சந்தேகம் வந்து விட்டது?”
என்று சற்று நகைச் சுவையுடன் அவர் கூறியதும் அனைவரும் சிரித்து விட்டார்கள்.அவர் பிளேட்டோவின் அருகில் சென்று,பரிவோடு அவர் முதுகில் தட்டிக் கொடுத்தார்.பிறகு செனோபோனை சற்று தொலைவில் அமர்ந்திருந்த ஆடு மேய்க்கும் சிறுவனை அழைத்து வரச்சொன்னார்.
ஒரு சில நிமிடங்களில் படிப்பறிவில்லா அந்தச் சிறுவனுக்கு எண்கள் பற்றியும், கணிதத்தின் சில அடிப்படைகளையும் எல்லோர் முன்னிலையிலும் சொல்லிக் கொடுத்தார். 16 என்ற எண்ணின் வர்க்க மூலம் 4.அதன் வர்க்க முலம் 2. ஆனால் 2 இன் வர்க்க மூலத்தை கண்டறிவது எளிதல்ல.அதன் வர்க்க மூலம் 1.414…இதில் தசமஸ்தானங்கள் வருகின்றன.எனவே 2 இன் வர்க்க மூலம் கண்டறிய தனி முறை இருக்கிறது.அதை அந்த சிறுவனுக்குச் சொல்லிக் கொடுத்தார். அதையும் கூட நேரடியாகச் சொல்லவில்லை.வேறு ஒரு எண்ணை வைத்து விளக்கினார்.அனால், அவன் சில நிமிடங்களில் 2 இன் வர்க்க மூலத்தை அனைவர் முன்னிலையிலும் கண்டறிந்து சொன்னான்.
மனிதனுக்குள் இருக்கும் இயற்கை அறிவை எல்லோருக்கும் விளக்கவே சாக்ரடீஸ் அவ்வாறு செய்தார்.சாக்ரடீஸ் படிப்பறிவில்லாத சிறுவன் ஒருவனை சில நிமிடங்களில் 2 இன் வர்க்க மூலத்தைக் கண்டறிந்து சொல்ல வைத்தது ஒரு உண்மை நிகழ்ச்சி.பிளேட்டோவின் நூலின் மூலமாக நாம் அதை அறிகிறோம்.
பல விஞ்ஞான உண்மைகள் நமக்குள் புதைந்திருப்பதாக ஞானிகள் கருதுகிறார்கள்.‘விஞ்ஞானம் இயற்கையின் மறு கண்டுபிடிப்பு’ என்ற வாசகமும் அதனைக் குறிப்பிடுவதாகவே உள்ளது.அர்த்தமுள்ள நூல்களை வாசிப்பது எழுதியவர்கள் நிறுத்திய இடத்திலிருந்து நாம் அடுத்த நிலைக்குச் செல்வதற்காகத்தான்.எனவே நமக்கு உறுதுணையாய் இருக்கும் சில ஞானிகளின் பதிவுகள், வசித்து முடிப்பதற்கானவையல்ல.ஒன்றை நாம் தொடங்குவற்கு உதவுபவை. கற்பது, வாசிப்பது எல்லாமே தேடலின் இறுதி நிலைக்கு நம்மைக் கொண்டு சென்றுவிட முடியாது.அதனால் தான் நம் விழிப்புணர்வில் உணரப்படும் அதிர்வு ஒரு தீராத தாகமாய் எப்போதும் இருக்கிறது. அந்தத் தாகம் வெளியிலிருந்து ஒன்றை பெறுவதற்காகத் தோன்றும் ஒன்றல்ல.அது நம் உள்ளத்திற்குள் மறைந்திருப்பதை வெளிக்கொணர்ந்து தெளிவதற்கான ஒன்று.
நன்றி : காவ்யா - ஜனவரி 2012
No comments:
Post a Comment