Thursday, May 17, 2012

துவாரகை தலைவனின் அன்பு-சிவம்- அறிவுலக அர்த்தங்கள் நூல் விமர்சனம்


ஜெயா பிளஸ் தொலைக் காட்சியில் துவாரகைதலைவனின் அன்பு-சிவம்-அறிவுலக அர்த்தங்கள் நூல் விமர்சனம்.

     - திரு.சுந்தர மூர்த்தி


இந்த நூலில் ஆழம் காணமுடியாத மனித குலப் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வமான, சிந்திக்கத் தூண்டும் கருத்துகளை முன் வைக்கிறார் துவாரகை தலைவன்.மனிதனின் நம்பிக்கைகள், அதன் போக்குகள்,இன்பம், துன்பம், கடவுள் பற்றிய கருத்துகள், அன்பு, அதன் பரிமாணங்கள், போர், பகை,அமைதி,தேடல்கள் என்று செல்கிறது ஆசிரியர் பார்வை.ஆழமான கருத்துகளில் ஊன்றி நின்று மேலும் அகழ்ந்து செல்லும் ஆசிரியரின் வார்த்தைகள் வாசகனை புதிய சிந்தனை சுழலுக்குள் இழுத்துச் சென்று மூழ்கடிக்க முயல்கின்றன.மூழ்கிக் குளிக்க ஆசைப்பட்டால் மூச்சுத் திணறும் நிலைக்கு இழுத்து விடுகிறார் ஆசிரியர்.அமைதியோடு கொள்ளும் விழிப்புநிலை அறிவார்ந்த தத்துவத் தேடல், உலக அரசாங்கம்,உலக அமைதிக்கான போர், வல்லரசுகளிடம் அடிமைப்படுதல், விடுதலையடைதல், இல்லாத உலகத்தில் மனதை அலைய விட்டு நிகழ் காலத்தைத் தவறவிடும் மனிதனின் பாங்கு என பல புதிய தளங்களுக்கு வாசகனை அழைத்துச் செல்லும் இவரின் கருத்துகள், நூல் என்பது பொழுது போக்கிற்காக அல்ல,பொழுதை அர்த்தமுள்ளதாக ஆக்குவது என்பதை சுட்டிக் காட்டும்படி உள்ளன.நாடுகளின் தோற்றம்,மொழியின் தொடக்கம்,அவற்றின் மீதான கருத்துகள், தேசப்பற்று, மொழிப்பற்று ஆகியவற்றில் மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என விரிகின்றன நூலாசிரியரின் கருத்தோட்டங்கள்.தாய் மொழிப்பற்று,தாய்நாட்டுப்பற்று தொடர்பான பிரச்சனைகளில் சிக்கிய ஜின்னா பற்றிய இவரின் விளக்கங்கள் நல்ல வரலாற்று ஆவணம் எனலாம்.அமைதிக்கான போர், ஆயுதக் குவிப்பு, அமைதி ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் தோய்ந்து அழகாக எழுதியிருக்கிறது ஆசிரியர் பேனா.தேடல் உள்ளவர்கள் தேடிப் படிக்க வேண்டிய நூல்.



நன்றி: ஜெயா பிளஸ் தொலைக் காட்சி

No comments:

Post a Comment