Wednesday, July 9, 2014

தமிழிலும், ஆங்கிலத்திலும் துவாரகை தலைவன் வாசித்த கவிதைகள்

1.இசை வெள்ளம்
            
             நீந்தும் போது
கிசு கிசுக்கிறது
            நதி.
அவன் மிதக்கையில்
தெளிவாகக் கேட்பவை
அதன் இனிய இசையும்
அதனோடு சேர்ந்து
அவன் பாடும் பாடலும்.
வெள்ளம் பாய்ந்து
பாறையில் மோதி
            விலா எலும்பு முறியும் போது
            எழுந்த அலறல் தான் அபசுரம்.

அவன் நீந்திச் செல்லும் நதி

இன்னும் இசை தான்.


2. விபரீத இலக்குகள்

            பந்தயத்தில் உரசிக் கொண்டு விரையும்
           இரு கார்களுக்கிடையே எழுந்த
மெல்லிய தீப்பொறி
மனிதர்களின் சில இலக்குகளை
காட்டிப் போவது.

உலகின் வேகம்
மனிதர்களுக்குள்ளே விதைக்கும்
புதிய இலக்குகளை.
முளைப்பது புதர் எனில்
கிளைகளாக நாகங்கள் அசையும்.

பசியோடு வாய்பிளப்பவை
இலக்குகளை நோக்கிச் சீறும்.
பல்லாயிரம் கோடி மதிப்புத் திட்டத்தை முடிக்க
பார்வையிடும் மனிதன்.
கழுத்தில் கட்டிய டை
லட்சியம் நோக்கி
பாயுமொரு பாம்பு.

காலம் இடம் மாறியும்
உலகம் முழுவதும் வாழ்க்கைக்குள்
துருத்திக் கொண்டு தொடரு மொன்று.
           
            நகரத்தின் நவீனம் தாண்டி வனம் வரை
            மனிதர்களைச் சுற்றி இறுக்கும் இலக்கு.
கண்ணில் பட்டவை யெல்லாம் மிதித்து
துவம்சம் செய்யும்
உந்து சக்தி.

கற்களை வெட்டி குவிக்க
மலைகள் கரைந்தன.
அடுக்கி வைக்கப்பட்ட
பாறைப் பாளங்களுக்குள்
சிக்கி தேங்கிக் கிடக்கும்
கோடிகளைத் தாங்கிய
ராட்சத இலக்குகள்.

3. முழு முதற் சுதந்திரம்

            பசுமைக் குடில் விரிந்து
           இருகரமாகி ஏந்தும்.
சிசு உணரும் சூட்டில்
தளைக்கும் பூமி.

மனித இனத்தின்
அசுர வேக ஆவல்
தன்முனைப்பு நீட்சியின்
பேராசைப் பசிக்கு 
பனிமலைகள் இரையாயின.

ஈசனின் திரிசூலங்களாக
            கூரிய பனிச் சிகரங்கள்
எழுந்து நிற்கும்.
அல்ட்ராவயலெட் கதிர்களை
விரட்டியடிக்கும் போரில்
பெரும் படை வீரர்களின்
இரட்டை அணிவகுப்பு
துருவங்களின் பனிப்பாலைவனங்கள்.

முதல் நீராவி என்ஞ்சினின்
இரைச்சலைக் கொண்டு
இசை மீட்டத் தொடங்கின
மனித வாழ்வின் வசதிகள்.
உலகமெங்கும் பெருகி ஓடிய
ஓசைக்குள் அடிநாதமாக
உடுக்கையின் தொடரொலி
கேட்கிறது.

விஞ்ஞான வளர்ச்சியின்
மற்றொரு முகத்தில் தெரிவது
ஊழிக் கூத்தின் உச்சநிலை.
காலெழுந்த வேகத்தில்
அசையும் ஜடாமுடி
அக்கினி ஜூவாலையைக் கக்கி
புறப்படும் விண்வெளி ஓடம்.
உள்ளே இருக்கும் அதிர்வில்
அத்தனை நரம்புகளும்
ஆடியடங்கும்.
அசுர வேகத்தில்
விண்வெளி வீரன்
துடித்துக் கரைவான்.
ஒரே ஒரு நொடி
அவன் உயிரில் ஒடுங்கிப் போக
சன்னலில் தெரியும்
இறைவனின்
அரிதாகப் பார்க்கக் கிடைக்கும்
அதோ முகம்
அதில் தோன்றிய புன்னகை
மனிதா எல்லாம் உன் செயல்
என்கிறது.

தொடர்ந்து
உலகைப் பிறாண்டுபவை
போரின் கைகள்.
அவை மனித உடல்களைப் பிழிந்து
பூமியின் மேல் பூசிய பூச்சில்
எப்போதும் மறைந்திருக்கும்
ஏதோ ஒன்று.
அதுவே மனிதனின் பேராசையோடும்
பொங்கி வந்து
                        பசுமைக் குடில் எரிக்கிறது.

            அதனை என்ன வென்று காட்ட
இயற்கை அமைத்த பசுமைக் குடிலின்
கருணைக் கரங்கள் வெப்பத்தில் விரியும்.
பின் இரண்டும் இணைந்து தெரிவது
ஒரு கருகிய புறாவின் இறக்கைகள்.

                        பகிரங்கமாக அறிவிக்கப்படுவது
எக்காலமும் யாரும் தடை செய்ய இயலாத
மனித இனத்தின்
முழு முதற் சுதந்திரம்.



No comments:

Post a Comment