Wednesday, March 13, 2013

’வளரி’ வழங்கும் அமரர் மீரா இலக்கிய விருது[மாதாந்திரத் தேர்வு]

வளரி  இலக்கிய இதழ் துவாரகை தலைவனின் அகோரப் பசி என்ற கவிதையை இலக்கிய இதழ்களில் வெளியான[ நவம்பர் 2012] சிறந்த கவிதையாகத் தேர்வு செய்து விருதுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளது. 


அகோரப்பசி
                 - துவாரகை தலைவன்

எதிர்காலத்தைக்
கொஞ்சம் கொஞ்சமாக
பெயர்த் தெடுத்துப் போடுகிறோம்
நகரங்களின் அஸ்திவாரங்களில்.

வருங்காலத்தை விழுங்கும்
செலவில்
அபரிமிதமான
நிகழ்கால வசதிகள்.

நில அளவைக் கருவிக் குழல்
எப்போதுமே
ஒரு ராட்சத இழுவை இயந்திரம்.
ஆடியில் தெரியும் மரம் செடி எல்லாம்
உள்ளே இழுக்கப்பட்டு மறையும்.
அளவைக் கருவி
திரும்பும் திசைகளெல்லாம்
வெறும் நிலமாயின.

கருவி வழியாகப்
பார்க்கும் கண்களில்
விரிகிறது கனவு நகரம்.

கண்ணிமைக்கும் நேரத்தில்
நீண்டு மறையும்
ஓணானின் நாவை நீட்டுகின்றன
அளக்கும் நாடாக்கள்.
அபிலாசைகளின்
எச்சில் தடவி வரும் பட்டைகள்
நிலத்தை வளைப்பவை.

இயற்கையின் தோலைக் கிழித்து
உருவாக்கப்படும்
அற்புதமான நகர வரைபடம்.

சாலைகளில் விழும்
அகன்ற கட்டட நிழல்
தரையிலிருந்து
திரும்பிப் பார்க்கும்,
மனிதனின் தேவை, பேராசைகளின்
பிரம்மாண்ட உருவத்தை.

எதிர்காலம்
மனிதனுக்கு தரும் நிழலை
அதிநவீன விஞ்ஞான முறைகளில்
அளந்து உண்ண எத்தனிக்கும்
நிகழ்கால

அகோரப்பசி.

                                    நன்றி: புதுப்புனல் நவம்பர் 2012

No comments:

Post a Comment